24 பிப்ரவரி 2019

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஊழலை வெளிப்படுத்திய பெண் பத்திரிக்கையாளரை மிரட்டும் போக்கு கடும் கண்டனத்திற்குரியது: டிடிவி தினகரன் 

DIN | Published: 11th September 2018 12:45 PM

வேலுமணி ஊழலை வெளிப்படுத்திய பெண் பத்திரிக்கையாளரை மிரட்டும் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பதிவில்,
அமைச்சர் வேலுமணி தனது உறவினர்களுக்கும் கூட்டாளிகளுக்கும் முறைகேடாக மாநகராட்சி பணி ஒப்பந்தங்கள் அளித்து பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

இதை அடுத்து, ஒப்பந்தக்காரர் சந்திரப்ரகாஷ் 'டைம்ஸ் ஆப் இந்தியா' பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் மிரட்டியதோடு மட்டுமல்லாமல், அவர் மீது அவதூறும் பரப்பியுள்ளார். வேலுமணியின் நெருங்கிய கூட்டாளியான இவரது செயல் வன்மையாக கண்டிக்கதக்கது.

பழனிச்சாமி அரசின் ஆட்சியில் ஊடகங்கள் மிரட்டப்படுவதும், பத்திரிகையாளர்கள் குறிப்பாக பெண்கள் தரக்குறைவான வார்த்தைகளால் அவமானப்படுத்தப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.

பெண் பத்திரிக்கையாளர்களைப் பற்றி அவதூறான கருத்து தெரிவித்த எஸ் வி சேகர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் இந்த அடிமை அரசு எடுக்காத நிலையில், அமைச்சர் ஒருவரின் நெருங்கிய கூட்டாளியே தற்போது பெண் நிருபரை தரக்குறைவாக பேசியிருக்கிறார்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத் துறையை சேர்ந்தவர்களுக்கே இத்தகைய  பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது. காவல்துறையினர் உடனடியாக சந்திரப்ரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒவ்வொரு நாளும் தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாகி வரும் விரக்தியில், கருத்து சுதந்திரத்தை நசுக்க முயலும் பழனிச்சாமி அரசிற்கு விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

More from the section

விழுப்புரம் எம்.பி. மறைவுக்கு பிரதமர், ஆளுநர் இரங்கல்
"விரைவில் குறைந்த கட்டண குளிர்சாதன பேருந்துகள்'
பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
சிறைத் துறை சார்பில் பெட்ரோல் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது: மு.க. ஸ்டாலின் ஆவேசம்