வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

போலீஸை மிரட்டிய புல்லட் நாகராஜூக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

DIN | Published: 11th September 2018 12:24 PM

போலீஸை மிரட்டிய வழக்கில் கைதான ரௌடி புல்லட் நாகராஜனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க தேனி பெரியகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் ரௌடி புல்லட் நாகராஜ். இவர் மீது நூற்றுக்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர், கடந்த வாரம் மதுரை மத்திய சிறை எஸ்.பி. ஊர்மிளாவுக்கு கட்செவி அஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து எஸ்.பி. ஊர்மிளா கரிமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து நாகராஜை தேடி வந்தனர். இதனிடையே, கடந்த சனிக்கிழமை தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் மதனகலா ஆகியோருக்கும் கட்செவி அஞ்சல் மூலம் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதையடுத்து, தேனி மாவட்ட போலீஸாரும் அவரைத் தேடி வந்தனர். 

இந்நிலையில், பெரியகுளம் போலீஸார் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் தென்கரைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மூன்றாந்தல் பகுதியில் ரௌடி நாகராஜ் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். இதைப் பார்த்த சிறப்பு உளவுப் பிரிவு காவலர் காசிராஜன் மற்றும் தனிப்பிரிவு குற்றப் புலனாய்வு தலைமைக் காவலர் சசிவர்ணன் ஆகியோர், இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து ரௌடி நாகராஜை தண்டுபாளையம் பகுதியில் மடக்கிப் பிடித்தனர். 

அப்போது, நாகராஜிடம் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள சிறுவர்கள் விளையாடப் பயன்படுத்தும் 500 மற்றும் 200 ரூபாய் தாள்கள் மற்றும் 2 பொம்மை துப்பாக்கிகள், 2 செல்லிடப்பேசிகள், 2 கத்திகள், வழக்குரைஞர் கோர்ட் மற்றும் நீதிமன்ற போலி முத்திரைகள் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து புல்லட் நாகராஜன் மீது பெரியகுளம் போலீசார் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

பின்னர் அவர் நேற்று நள்ளிரவு தேனி பெரியகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் கோர்ட் காவலில் வைக்க நீதிபதி அருண்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து புல்லட் நாகராஜன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

More from the section

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா: விஜயகாந்தை சற்று நேரத்தில் சந்திக்கிறார் ஸ்டாலின்
தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை: பிரேமலதா விஜயகாந்த்
உச்சநீதிமன்றம் வினா: 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை!
சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு
நீங்க நல்லா இருக்கணும் விஜயகாந்த்: உருகிய ரஜினிகாந்த்!