புதன்கிழமை 16 ஜனவரி 2019

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு

DIN | Published: 12th September 2018 04:30 AM
நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மற்றும் சமூக நல பணியாளர்களுடன் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடிய பிரதமர் மோடி


அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சமூக நல பணியாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை வரும் அக்டோபர் மாதம் முதல் உயர்த்தப்படும் என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
சரிவிகித ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை நாட்டில் உள்ள அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊட்டச்சத்து பிரசார நிகழ்ச்சியின் போது, நாடு முழுவதும் உள்ள சமூகநல பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டின் அடித்தளமான கிராமங்களில் உள்ள மக்களின் சுகாதாரம், புதிதாக பிறந்த குழந்தைகளின் நலன், ஊட்டச்சத்து ஆகியவற்றை பேணிக் காப்பதில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சமூக நல பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஊட்டச்சத்து சேவைகள் மற்றும் சுகாதார சேவைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் திட்டத்துக்காக, ஒன்றிணைந்து பணியாற்றும் அங்கன்வாடி மற்றும் சமூக நல பணியாளர்களை பாராட்டுகிறேன். அவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து அதிகரிக்கப்படும். அந்த தொகை நவம்பர் மாத ஊதியத்துடன் சேர்த்து அவர்களுக்கு அளிக்கப்படும். ரூ. 3000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டவர்களுக்கு ரூ. 4500 வழங்கப்படும். ரூ. 2,200 பெறுபவர்களுக்கு ரூ. 3, 500 வழங்கப்படும். அங்கன்வாடியில் பணிபுரியும் உதவியாளர்களுக்கு ரூ.1500-ல் இருந்து ரூ. 2500 ஆக ஊக்கத் தொகை உயர்த்தப்படும். 
மேலும், சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் காப்பீட்டு திட்டங்களான பிரதமர் ஜீவன் ஜோதி பீம யோஜனா மற்றும் பிரதமர் சுரக்ஷா பீம யோஜனா போன்ற பல திட்டங்களின் கீழ் சமூக நல பணியாளர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த காப்பீட்டு திட்டங்களுக்காக அவர்கள் காப்பீட்டுத் தொகை எதுவும் செலுத்தத் தேவையில்லை. அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங் கள் ஏற்படும் போது ரூ. 4 லட்சம் காப்பீட்டு தொகையாக வழங்கப்படும். மென்பொருள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை ரூ. 250 முதல் ரூ. 500 வரை வழங்கப்படும்.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்' எனப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டம் செப்டம்பர் 23-ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான பயனாளிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்தத் திட்டத்தின் முதல் பயனாளராக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கரிஷ்மா என்னும் குழந்தைக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்பட உள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.
1 கோடி போலி பயனாளர்கள்: அங்கன்வாடியில் பதிவு செய்துள்ள 1 கோடி போலி பயனாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு முழுவதும் 14 லட்சம் அங்கன்வாடிகள் உள்ளன. அதில், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என 10 கோடி பேர் பயனாளர்களாக பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், அஸ்ஸாம் மாநில அரசு கடந்த மாதம் எடுத்த கணக்கெடுப்பில், 14 லட்சம் குழந்தைகளின் பெயர் போலியாக அங்கன்வாடிகளில் பதிவு செய்திருப்பது தெரிய வந்தது. அதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள அங்கன்வாடிகளில் பதிவு செய்திருப்பவர்களின் உண்மை நிலையை அறிய உத்தரவிடப்பட்டது. இதுவரை 1 கோடி பயனாளர்கள் போலியாக பதிவு செய்திருப்பது அறிந்து நீக்கப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்துக்கான பிரசாரத்தை பிரதமர் முன் நின்று நடத்தியதில் மிகவும் மகிழ்ச்சி. அங்கன்வாடி பணியாளர்களின் ஊக்கத்தொயை அதிகரித்ததற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


 

More from the section

கொடநாடு வீடியோ விவகாரம்: ஆளுநரை சந்தித்து அதிமுக விளக்கம்
ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தது விபத்துதான்: சேலம் சரக டிஐஜி செந்தில்குமார் 
சென்னை பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் வேலை
வேலை... வேலை... வேலை... பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை
எதை வைத்து கோடநாடு விவகார வீடியோ ஆதாரப்பூர்வமானது என்று கூறுகிறார்கள்? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி