செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஆளுநர் இருமுறை நேரில் பார்த்தார்: சசிகலா தரப்பு வழக்குரைஞர் தகவல்

DIN | Published: 12th September 2018 01:35 AM


அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை, அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் இருமுறை நேரில் பார்த்ததாக ஆளுநரின் முன்னாள் முதன்மைச் செயலரும், தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக் கழகத்தின் தற்போதைய தலைவருமான ரமேஷ்சந்த் மீனா ஆணையத்தில் சாட்சியம் அளித்ததாக சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜ்குமார் பாண்டியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலா உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். 
சசிகலாவுக்கு எதிராக பிரமாணப் பத்திரம், சாட்சியம் அளித்தவர்களிடம் அவரது வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவின் முதன்மைச் செயலர் ரமேஷ்சந்த் மீனா, அப்பல்லோ மருத்துவர்கள் சாய் சதீஷ், விக்னேஷ், ரவிவர்மா ஆகியோர் விசாரணை ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகினர். சுமார் 5 மணி நேரம் அவர்களிடம் ஆணைய தரப்பு வழக்குரைஞர்கள் விசாரணை நடத்தினர். 
இருமுறை நேரில் பார்த்தார்: இதைத் தொடர்ந்து, சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜ்குமார் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது: ரமேஷ்சந்த் மீனாவிடம் ஆணைய வழக்குரைஞர்கள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் ரமேஷ் சந்த் மீனா, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதியும், 22-ஆம் தேதியும் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேரில் சென்று பார்த்தார். அக்டோபர் 22-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றபோது, அவருடன் தீவிர சிகிச்சைப் பிரிவு வரை நானும் சென்றேன்.
அவரைப் பார்த்துவிட்டு, ஆளுநர் மாளிகைக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, தன்னைப் பார்த்து ஜெயலலிதா கட்டை விரலைக் காண்பித்து சிரித்ததாகவும், அவரது உடல்நிலை முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தன்னிடம் தெரிவித்ததாகவும் ரமேஷ்சந்த் மீனா ஆணையத்தில் தெரிவித்தார். மேலும் ரமேஷ்சந்த் மீனா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக ஆளுநர் மாளிகைக்கு தகவல் கிடைத்தது. இதனால், மும்பையில் இருந்து அன்று இரவு 10.30 அளவில் சென்னை வந்த வித்யாசாகர் ராவ் சுமார் 11.30 அளவில் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரித்தார்.
டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதாவுக்குப் பொருத்தப்பட்டிருந்த எக்மோ கருவி எடுக்கப்படுவது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் வித்யாசாகர் ராவுக்குத் தெரிவித்தார் என ரமேஷ்சந்த் மீனா ஆணையத்தில் கூறியதாக வழக்குரைஞர் ராஜ்குமார் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

More from the section

ஆளுநர் கிரண் பேடி மீது மத்திய உள்துறை அமைச்சரிடம் புகார்: முதல்வர் நாராயணசாமி தகவல்
சட்ட விரோத பேனர் விவகாரம்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிபிஐ முழுமையாக ஆராய்ந்து விசாரிக்க உத்தரவு
சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்: முதல்வர் அறிவிப்பு
அன்னவாசலில் ஜல்லிக்கட்டு: 22 பேர் காயம்