வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

DIN | Published: 12th September 2018 02:34 AM


உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடாததை எதிர்த்து தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகினர்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை கடந்த 2017 -ஆம் ஆண்டு நவம்பர் 17 -ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும், அதுதொடர்பான அறிவிப்பாணையை 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18 -ஆம் தேதிக்குள் வெளியிடவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறிய மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெஃரோஸ் கான் மற்றும் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் ஹர்மந்தர் சிங் ஆகியோர் ஆஜராகினர்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்யமா சுந்தரம் வாதிடும்போது உச்ச நீதிமன்றத்தில் வார்டு மறு வரையறை தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை திமுக திரும்பப் பெறவில்லை. மேலும் வார்டு மறுவரையறை குறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் சட்டப்பேரவை நடவடிக்கையுடன் தொடர்புடையது. எனவே, இதற்கு அரசுத் துறை அதிகாரிகளான இவர்கள் இருவரும் பொறுப்பாக மாட்டார்கள்' எனக் கூறினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு வரும் 24 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணைக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் இருவரும் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.

More from the section

ரஃபேல் தீர்ப்பு: பிப்ரவரி 26-இல் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை
பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு 
திமுக தலைமைக்கு ஒரு வேண்டுகோள்!
அமித் ஷாவுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் சந்திப்பு