புதன்கிழமை 16 ஜனவரி 2019

ஊரகத் துறையில் சிறந்த செயல்பாடு: தமிழகத்துக்கு 3 தேசிய விருதுகள்: தில்லியில் மத்திய அமைச்சர் தோமர் வழங்கினார்

DIN | Published: 12th September 2018 01:29 AM
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 தேசிய விருதுகளை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடமிருந்து பெற்றுக் கொள்ளும் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.

தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் மூன்று தேசிய விருதுகள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன. இவை தவிர இதர மூன்று விருதுகளும் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளை தில்லி விஞ்ஞான் பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கினார்.
இந்த விருதுகளில் தமிழ்நாட்டில் 2017-18 நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 58 லட்சம் பணியாளர்களுக்கு 23.89 கோடி மனித உழைப்பு நாள்களுக்கு ரூ.5,344 கோடி ஊதியம் வழங்கியது உள்ளிட்டவற்றில் சிறந்த செயல்பாட்டிற்காக தேசிய அளவில் முதலிடத்திற்கான விருது வழங்கப்பட்டது. 
மேலும், இதே திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 16,89,480 சொத்துகளில் 16,83,863 சொத்துகள்(97.89%)புவிக்குறியீடு செய்யப்பட்டு தேசிய அளவில் அதிகமாக புவிக்குறியீடு செய்த சாதனைக்காக, புவிக்குறியிடுதலில் சிறந்த முயற்சிகளுக்கான தேசிய அளவில் முதலிடத்திற்கான விருதும், இதே திட்டத்தில் 2017-18 நிதியாண்டில் 85,64,587 தொழிலாளர்களில், 84,99,273 தொழிலாளர்களின் ஆதார் எண்கள் (99.23%) வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டு நம்பகத்தன்மைமற்றும் வெளிப்படைத் தன்மையுடன் ஆதாருடன் இணைந்த ஊதியம் செலுத்துதலில் சிறந்த செயல்பாட்டிற்காக தேசிய அளவில் இரண்டாம் இடத்திற்கான விருதும் வழங்கப்பட்டன.
இரு மாவட்டங்களுக்கு விருதுகள்: இவை தவிர, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மாவட்ட அளவில் சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தெரிவு செய்யப்பட்ட 18 மாவட்டங்களில், தமிழகத்தின் தஞ்சாவூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் ஆட்சியரும், தற்போதைய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருமான பிரஷாந்த் மு. வடநேரேஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மத்திய அரசின், கிராம ஸ்வராஜ் அபியான் இயக்கத்தின் கீழ், குறிப்பிட்ட 7 முக்கியத் திட்டங்களில் தன்னிறைவுடன் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக, மாவட்டங்களுக்கான தேசிய விருது தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. 
இந்த விருதை, தூத்துக்குடி மாவட்டஆட்சியர் சந்தீப் நந்தூரி பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் இணையமைச்சர் ராம் கிர்பால் யாதவ், பல்வேறு மாநிலங்களின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்கள், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளர் அமர்ஜீத் சின்ஹா, மாநில அரசுகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

'உள்ளாட்சித் துறைக்கு பெருமை'
மத்திய அரசின் இந்த விருதுகள் தமிழக உள்ளாட்சித் துறைக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்துக்கு மத்திய அரசு ஆறு விருதுகளை வழங்கியுள்ளது. இது தமிழகத்தின் உள்ளாட்சித் துறைக்கு பெருமை சேர்ப்பதாகும். இந்நிலையில், சிறப்பாகச் செயல்படும் தமிழக அரசைக் கலைக்கவும், அதிமுகவை முடக்கவும் திமுக போன்ற கட்சிகள் பல்வேறு முயற்சிகள் எடுக்கின்றன. எங்கள் மீது தவறான குற்றச்சாட்டையும் சுமத்தி வருகின்றனர்.
உள்ளாட்சித் துறையைப் பொருத்தமட்டில், முந்தைய திமுகவின் ஐந்து ஆண்டு ஆட்சிக் காலத்தில் செயல்படுத்திய திட்டங்களை விட அதிக அளவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் குடிநீர்த் திட்டங்களுக்காக ரூ.26 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், திமுக ஆட்சிக் காலத்தில் மொத்தம் ரூ.7 ஆயிரம் கோடிதான் குடிநீர்த் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது.
என் மீது திமுகவினர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் காழ்ப்புணர்ச்சி கொண்டவை. எனது அமைச்சர் அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறு தவறு கூட நான் செய்யவில்லை. திமுகவினர் தெரிவிக்கும் குற்றச்சாட்டு நிரூபணமானால், எனது அமைச்சர் பதவி உள்பட அனைத்துப் பதவிகளையும் ராஜிநாமா செய்யத் தயார். அது நிரூபிக்கப்படாவிட்டால் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜிநாமா செய்வாரா?' என்றார். 

 

More from the section

காணும் பொங்கலைக் கொண்டாட திட்டமிடும் சென்னைவாசிகளே.. கவனிக்க!
4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
நம்ம முதல்வர் எப்படி பொங்கல் கொண்டாடினார் என்று பார்க்கலாம் வாருங்கள்!
மோடி அலை ஓய்ந்துவிட்டது: சு.திருநாவுக்கரசர் 
துரோகத்தின் கூடாரமாக கோடநாடு மாறி வருகிறது: கமல்