புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

தண்ணீர் இல்லாததால் காயும் குறுவை பயிர்கள்

By வி.என். ராகவன்| DIN | Published: 12th September 2018 12:57 AM
தஞ்சாவூர் அருகே ராமாபுரம் கிராமத்தில் தண்ணீர் இல்லாததால் காய்ந்து வரும் குறுவை பயிர்கள்.


நீண்ட காலத்துக்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட குறுவை சாகுபடிக்கு சில வாரங்களாகத் தண்ணீர் கிடைக்காததால் பல இடங்களில் நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 ஆண்டுகளாக குறுவைப் பருவத்தில் காவிரி நீர் வரத்து இல்லாததால், நெல் சாகுபடியில் இயல்பான அளவு எட்டப்படுவதில்லை. நிகழாண்டு மேட்டூர் அணைக் காலம் கடந்து திறக்கப்பட்டாலும், குறுவை சாகுபடியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 35,000 ஹெக்டேரை கடந்து 40,917 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் ஆழ்குழாயை நம்பியே குறுவை சாகுபடி செய்யப்படுகிறது.
முன்பட்ட குறுவை சாகுபடியைத் தொடங்கிய விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். ஆனால், ஜூன், ஜூலை மாதத்தில் நடவு செய்யப்பட்ட பயிர்கள் இப்போதுதான் வளர்ச்சிப் பருவத்தை எட்டியுள்ளன.
மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழைகாலத்தில் இயல்பான அளவில் கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டது. பல இடங்களில் ஆழ்துளைக் குழாயிலும் தண்ணீர் வருவதில்லை.
மாவட்டத்தில் தூர்வாரும் பணியும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும், வாய்க்கால்களிலும், கிளை வாய்க்கால்களிலும் உள்ள அடைப்பு காரணமாகத் தண்ணீர் செல்லவில்லை. வாய்க்கால்களில் தண்ணீர் வந்தாலும் வரத்து குறைவாக இருப்பதால் நிலத்துக்கு பாய்வதில்லை.
இந்நிலையில், முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்ததால், ஏறத்தாழ 15 நாட்களாகக் காவிரியில் நீர் வரத்தும் இல்லை. இதனால், குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 
மேலும், சில நாள்களாக மும்முனை மின்சாரம் பல இடங்களில் கிடைப்பதில்லை என்ற புகார்கள் அதிகரித்துள்ளன. சில இடங்களில் நாள்தோறும் 2 மணிநேரம் கூட மும்முனை மின்சாரம் கிடைக்காததால் ஆழ்குழாயில் தண்ணீர் வந்தாலும் வயலுக்கு முழுமையாகப் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால், நிலமும் பாளம், பாளமாக வெடித்து காணப்படுகின்றன.
வயலூர், ராமாபுரம், சாரப்பள்ளம், தோட்டக்காடு, குருவாடி, பஞ்சாரம், அம்மன்பேட்டை, மாத்தூர், நடுக்காவேரி, அம்மையகரம், வரகூர், கண்டமங்கலம், கோனேரிராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் குறுவை பயிர்கள் காய்ந்து வருகின்றன. 
இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க கெளரவத் தலைவர் நெடார் எஸ். தர்மராஜன் தெரிவித்தது: மழை பெய்யாத நிலையில் குடமுருட்டி, வெட்டாறில் தண்ணீர் வந்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆனால், குடமுருட்டி, வெட்டாறு, ஜம்புகாவேரி வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை. இப்போது அதிக அளவில் வெப்பம் நிலவுவதால், நாள்தோறும் தண்ணீர்விட வேண்டிய நிலை உள்ளது. இல்லாவிட்டால் நிலத்தில் வெடிப்பு ஏற்படுகிறது. இதனால், கதிர் விடும் நேரத்தில் பயிர்கள் பதராகி வருவதால் மகசூல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது என்றார் அவர்.
காவிரி பாசனப் பகுதியில் நிலத்தடிநீர் இருந்தாலும் கூட, ஆற்றில் தண்ணீர் வரத்து அவசியம் இருக்க வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீர் மீட்சிப் பெறும். ஆற்று நீர் ஆகஸ்ட் மாதம் வரை பெறப்படவில்லை என்றால் வடிமுனைக் குழாய் கிணறுகள் வற்றிப்போவது வழக்கம். அந்த நிலைமைதான் இப்போது ஏற்பட்டுள்ளது. எனவே, வருவாய் கிடைக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆழ்குழாய் மூலம் பல்வேறு சிரமங்களுக்கு இடையே குறுவை சாகுபடியைத் தொடங்கிய விவசாயிகளுக்குத் தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.


 

More from the section

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு: ஸ்டாலின்
காங்கிரசுக்கு எத்தனை சீட்டு? இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்: திருநாவுக்கரசர் 
நாங்கல்லாம் அப்பவே அப்படி! ஆனால் இப்போ? மறந்தே போன மால்கள்!!
பி.எஸ்.என்.எல். நிறுவன ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் 
நாங்கள் பேசுவதற்காக அல்ல; இது நீங்கள் பேசுவதற்காக நடத்தும் கூட்டம்: ஊராட்சி சபைக் கூட்டத்தில் ஸ்டாலின்