செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

பிரதமரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்துடன் தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டம் இணைப்பு

DIN | Published: 12th September 2018 02:32 AM


பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ சேவைகள் இயக்குநரகத்தில், பிரதமரின் ஜன் ஆரோக்யா யோஜனா', ஆயுஷ்மான் பாரத்' திட்டத்துடன் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இணைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முன்னிலையில், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், தேசிய சுகாதார நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் டாக்டர் இந்து பூஷண் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசியதாவது: 
தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு நவீன மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது, இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் பிரதமரின் ஜன் ஆரோக்யா யோஜனா, ஆயுஷ்மான் பாரத் ஆகிய திட்டங்களுடன் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
2.85 கோடி பேர் பயன்: தமிழகத்தில் நடைமுறையிலுள்ள முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 1.57 கோடி குடும்பங்களுக்கு 1,027 சிகிச்சை முறைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வரையும், 154 சிறப்பு சிகிச்சைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரையிலும் காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும், 8 வகையான உயர்நிலை சிகிச்சைகளுக்கு மைய நிதி ஏற்படுத்தப்பட்டு அதிலிருந்து சிகிச்சைக்கான செலவுத் தொகை வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைந்துள்ளதன் மூலம் தமிழகத்திலுள்ள 77 லட்சம் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2.85 கோடி பேர் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற முடியும் என்றார் அமைச்சர்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் உமாநாத், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் பி.உமா மகேஸ்வரி, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சுகாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

More from the section

இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே சுற்றுப் பாதையாக சென்னை புறநகர் ரயில் மாறுகிறது!
தலைமைச்செயலகத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எப்படி சாமி கும்பிடலாம்? மு.க.ஸ்டாலின் கேள்வி
மேக்கேதாட்டு அணை: கர்நாடகத்தின் விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
திருமழிசை ஆழ்வாரின் வரலாறு தெரியுமா உங்களுக்கு..? 
வேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்