வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

முதல்வர் மீதான லஞ்சப் புகார்: லஞ்ச ஒழிப்புத்துறை 17-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு 

DIN | Published: 12th September 2018 02:35 PM

 

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான லஞ்சப் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை 17-ஆம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரியதில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளது. இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இந்த வழக்கு புதன்கிழமையன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் மனுதாரர் ஆர்.எஸ்.பாரதி புதிதாக ஒரு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனது முந்தைய புகார் மீது கடந்த 22.6.2018 அன்றே முதற்கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடங்கிவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, வரைவு அறிக்கை கடந்த 28.8.2018 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஊழல் கண்காணிப்புத்துறையே அவருக்கு எதிரான புகாரை விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகாரை எந்தவித குறுக்கீடும் இல்லாமல் செயல்படும் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த விசாரணையை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை 17ம் தேதி விரிவான விசாரணை அறிக்கை தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : EPS Highways tender corruption DMK RS Bharathi vigilance report எடப்பாடி பழனிசாமி லஞ்ச ஒழிப்புத்துறை லஞ்சப் புகார் விசாரணை அறிக்கை உயர் நீதிமன்றம்

More from the section

மக்களவைத் தேர்தல்: உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் மொழி தமிழ்: அமைச்சர் க.பாண்டியராஜன்
தொடக்கக் கல்வியை தாய்மொழியில் வழங்க வேண்டும்: அமைச்சர் க.பாண்டியராஜன்
அதிமுக கூட்டணி இயற்கையான கூட்டணி:  அமைச்சர் ஜெயக்குமார்
நடிகையின் கட்செவி கணக்கில் தகவல் திருட்டு: சைபர் குற்றப்பிரிவு விசாரணை