புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

வரும் டிசம்பருக்குள் டிஜிட்டல்' முறை உறுப்பினர் பதிவேடு

DIN | Published: 12th September 2018 01:26 AM


பயிர்க் கடன்களை அளிக்கும் கூட்டுறவு வங்கிகள் வரும் டிசம்பருக்குள் எண்ம (டிஜிட்டல்') முறையிலான உறுப்பினர் பதிவேடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு வலியுறுத்தினார்.
நபார்டு வங்கி சார்பில் எண்ம உறுப்பினர் பதிவேடு குறித்த பயிற்சியை அமைச்சர் செல்லூர் ராஜு சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியது:
தமிழகத்தில் குறுகிய கால கூட்டுறவு கடன் அமைப்பில், 23 மத்திய கூட்டுறவு வங்கிகள், 4,462 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. அவற்றின் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
பயிர்க் கடனுக்காக விவசாயிகளுக்கு ரூபே' விவசாயக் கடன் அட்டை அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கில் பயிர்க் கடனின் ரொக்கப் பகுதி வரவு வைக்கப்படும். தமிழகத்தில் கடந்த 1 -ஆம் தேதி வரையில் 3.33 லட்சம் கடன் அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்துக்கும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் எண்ம உறுப்பினர் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். இந்தப் பதிவேட்டில் உறுப்பினர் வாரியாக நிலம் தொடர்பான விவரங்கள், பயிர் விவரம், கடன் தொகை, ரொக்க அளவு போன்ற விவரங்கள் பதிவேற்றப்படும்.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் எப்போதெல்லாம் உறுப்பினர்களுக்கு கடன் அளவு நிர்ணயிக்கிறதோ, அப்போதெல்லாம் மத்தியக் கூட்டுறவு வங்கியில் உள்ள எண்ம உறுப்பினர் பதிவேட்டில் கடன் அளவை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மத்தியக் கூட்டுறவு வங்கியின் எண்ம உறுப்பினர் பதிவேட்டுக்கு அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களும் தங்களது உறுப்பினர் விவரங்களை பிரதான பட்டியலில் பதிவேற்றம் செய்வது மட்டுமல்லாது, அவ்வப்போது மேம்படுத்த வேண்டும். மேலும், எண்ம முறை உறுப்பினர் பதிவேடு திட்டத்தை டிசம்பருக்குள் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜு வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஆர்.பழனிசாமி, நபார்டு வங்கியின் துணை நிர்வாக இயக்குநர் அமலோற்பவநாதன், சென்னை மண்டல முதன்மைப் பொது மேலாளர் பத்மா ரகுநாதன், பொது மேலாளர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

More from the section

திமுக, காங்கிரஸ் கூட்டணி வலிமையான வெற்றியை பெறும்: வேணுகோபால் 
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு: ஸ்டாலின்
காங்கிரசுக்கு எத்தனை சீட்டு? இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்: திருநாவுக்கரசர் 
நாங்கல்லாம் அப்பவே அப்படி! ஆனால் இப்போ? மறந்தே போன மால்கள்!!
பி.எஸ்.என்.எல். நிறுவன ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்