திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

DIN | Published: 13th September 2018 04:31 AM

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேர் மீது, சென்னை மகளிர் நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாலியல் கொடுமை: அயனாவரத்தைச் சேர்ந்த, செவித்திறன் குறைபாடு மற்றும் பேச முடியாத 11 வயது சிறுமி, அந்தப் பகுதியில் உள்ள சிறப்புப் பள்ளியில் 7 -ஆம் வகுப்பு படித்து வந்தார். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த அந்தச் சிறுமி பள்ளிக்குச் செல்ல குடியிருப்பில் இருந்த லிப்ட்டை பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், அந்த குடியிருப்பின் லிப்ட் ஆப்ரேட்டர், காவலாளிகள், எலக்ட்ரீஷியன்கள் உள்ளிட்ட பலர் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ரவிக்குமார், எரோல் பிராஸ், சுகுமாரன், முருகேசன், பரமசிவம், சுரேஷ், ராஜசேகர், அபிஷேக், தீனதயாளன், குணசேகரன், பாபு, பழனி, ராஜா, சூர்யா, ஜெய்கணேஷ், ஜெயராமன், உமாபதி ஆகிய 17 பேரை கைது செய்தனர்.
மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்: இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்திய நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
ஜாமீன் கோரி மனு தாக்கல்: இந்த 17 பேரில் 11 பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி, இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
குண்டர் சட்டம்: இதனிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பரிந்துரைத்தார். இந்தப் பரிந்துரையின் அடிப்படையில், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவின் பேரில் கடந்த 5 -ஆம் தேதி 17 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்: இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமது விசாரணையை முடித்துள்ளார். இதனையடுத்து, சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன் 17 பேர் மீதும் குற்றப் பத்திரிகை புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

 

More from the section

தனுஷ்கோடிக்கு பிளமிங்கோ பறவைகள் வருகை
வடலூரில் இன்று தைப்பூச ஜோதி தரிசனம்
உலக சாதனையானது விராலிமலை ஜல்லிக்கட்டு!
கர்நாடகாவில் சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே கைகலப்பு?
நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது: டி.டி.வி. தினகரன்