வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தில் மாற்றம்

DIN | Published: 13th September 2018 01:18 AM


சென்னை-சேலம் இடையே அமைக்கத் திட்டமிடப்பட்ட பசுமை வழிச்சாலைத் திட்டத்தில் மாற்றம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) முடிவு செய்துள்ளது.
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை ரூ.10,000 கோடி செலவில் செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்தன. இத்திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்து ஏதுவாக அளவிடும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டபோது, கடும் எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 8 வழிச்சாலை திட்டதுக்கு எதிராக விவசாயிகள் உள்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 8 வழிச்சாலை திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி உள்ளது.
அறிக்கை விவரம்: இத் திட்டத்துக்கு முதலில் ரூ.10,000 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது அதிகாரிகள் மேற்கொண்ட களப்பணி காரணமாக திட்ட மதிப்பீட்டு தொகையானது ரூ.7,210 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்துக்காக வனப்பகுதியில் 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது 103 ஏக்கராக நில அளவு குறைக்கப்பட்டுள்ளது.
வனப் பகுதியில் 13.2 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இந்தத் தொலைவு 9 கி.மீ.-ஆக குறைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள கல்வராயன் மலை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் பாதிக்காதவாறு செங்கம் - சேலம் சாலை வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆறு வழிச் சாலையாக மாற்றம்: 90 மீட்டர் அகலத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்ட சாலையின் அகலம் 70 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. வனப் பகுதியில் இந்த சாலை செல்லும் போது கணக்கிடப்பட்டிருந்த 70 மீட்டர் அகல சாலையானது, தற்போது 50 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் அணுகுசாலை (சர்வீஸ் ரோடு) அமைக்கப்படாது. கையகப்படுத்தத் திட்டமிட்டிருந்த 2560 ஹெக்டேர் தற்போது 1,900 ஹெக்டேராக குறைக்கப்பட்டுள்ளது. 8 வழிச்சாலைத் திட்டம், 6 வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் போன்ற தேவைகள் ஏற்பட்டால், இப்பகுதியில் 8 வழிச்சாலை அமைய வாய்ப்பு உள்ளது. முக்கியமாக பாலாற்றின் குறுக்கே மட்டுமே பாலம் அமைக்கப்படும். வேறு இடங்களில் பாலம் அமைக்கவேண்டிய சூழல் இல்லை.

 

More from the section

ரஃபேல் தீர்ப்பு: பிப்ரவரி 26-இல் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை
பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு 
திமுக தலைமைக்கு ஒரு வேண்டுகோள்!
அமித் ஷாவுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் சந்திப்பு