புதன்கிழமை 23 ஜனவரி 2019

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்குங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

DIN | Published: 13th September 2018 04:33 AM


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை எழுதிய கடித விவரம்: தமிழக மக்கள் மனங்களிலும் இதயங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவர் பாரத ரத்னா விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர். அவரது திட்டங்களும், முயற்சிகளும் நாட்டிலுள்ள பிற மாநிலங்கள் மட்டுமின்றி பிற நாடுகளிடமும் நன்மதிப்பைப் பெற்றன.
அரசியல் வாழ்வின் தொடக்க காலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து பல முக்கிய பிரச்னைகளை, குறிப்பாக மாநில சுயாட்சி, உள்நாட்டுப் பாதுகாப்பு போன்ற விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார். இந்தப் பேச்சுகளால் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பாராட்டுதல்களைப் பெற்றார்.
6 முறை முதல்வர்: கடந்த 1991-இல் அதிமுகவுக்கு தலைமையேற்று தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். இதன்பின், 2001, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் முதல்வராகப் பதவியேற்றார். 15 ஆண்டுகளில் ஆறு முறை முதல்வராகப் பொறுப்பேற்றார். மக்களவைத் தேர்தலிலும் மறக்க முடியாத வெற்றிகளை ஈட்டினார்.
தமிழகத்தில் தொட்டில் குழந்தைத் திட்டம், இலவச மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் திட்டங்கள், கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். தொட்டில் குழந்தை போன்ற திட்டங்களுக்காக அன்னை தெரசாவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டினார்.
அமைச்சரவை தீர்மானம்: அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது தொடர்பாக கடந்த 9-ஆம் தேதி நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. எனவே, ஜெயலலிதாவுக்கு மரணத்துக்குப் பிந்தைய பாரத ரத்னா விருதினை வழங்கிட உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்: சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், பேச்சாளர், இலக்கியவாதி என மிகப் பெரிய திராவிட தலைவராக விளங்கியவர் பேரறிஞர் அண்ணா, தமிழக முதல்வராக 1967 முதல் 1969 வரை இருந்தார். மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்தார்.
தமிழகத்துக்கு அவர் அளித்த பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு... முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த தினத்தை ஒட்டி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் என பெயர் சூட்ட வேண்டுமென தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
அவரது விருப்பப்படியே அவர் வாழ்ந்த இல்லம் காது கேளாத மற்றும் பார்வையிழந்த குழந்தைகளுக்கான பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. நாட்டின் மிகச் சிறந்த தலைமகனாக விளங்கிய பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த தினத்தை ஒட்டி முக்கியத்துவம் வாய்ந்த, முத்திரை பதிக்கும் இடமாக விளங்கி வரும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அவரது பெயரைச் சூட்டுவதே பொருத்தமானதாக இருக்கும்.

More from the section

உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒத்திவைப்பு: பட்டாசுத் தொழிலாளர்கள் ஏமாற்றம்
போலியோ சொட்டு மருந்து முகாம்: தேதி தள்ளிப்போகிறது
நாட்டு இன காளைகளைப் பாதுகாக்க சேலத்தில் கால்நடைப் பூங்கா
படகு கவிழ்ந்து மீனவர் சாவு
தஞ்சையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு: ஆயுதம் ஏந்திய பெண் காவலர் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவு