வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

ராமநாதபுரத்தில் அதிகரிக்கும் காச நோய்!

By ராமநாதபுரம்| DIN | Published: 14th February 2019 07:49 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் மது குடிப்போர் மற்றும் சர்க்கரை நோயாளிகளிடையே காசநோய் பாதிப்பு அதிகரித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.      

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுக்கு 800 பேருக்கும் அதிகமானோர் காச நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதில் நுரையீரல் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர்.   ஆண்டுக்கு சுமார் 554 ஆண்களும், 150-க்கும் மேற்பட்ட பெண்களும், நூற்றில் 5 சதவிகித குழந்தைகளும் காச நோய் முற்றி சிகிச்சைக்கு வருகின்றனர். ராமேசுவரம் நகரில் மட்டும் மாதந்தோறும் 5 நோயாளிகள் என ஆண்டுக்கு 60-க்கும் மேற்பட்டோர் தீவிர காசநோய்த் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இவர்களில் மதுப் பழக்கமுள்ள ஆண்களே அதிகம். ஏர்வாடியில் மாதம் 4 பேருக்கும் அதிகமாக காசநோய் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

ராமநாதபுரம் நகராட்சியில் எம்எஸ்கே நகர், கேகேநகர், எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளிலும்  ஊரகப் பகுதியில் கீழத்தூவல், நயினார் கோவில் பகுதிகளிலும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நடந்த ரத்தப் பரிசோதனையில் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட 10 பேரில் 5 பேருக்கு  காச நோய் பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயுடன் தீவிர காச நோயால் பாதிக்கப்பட்டவர்களாக ஆண்டுக்கு 80 முதல் 100 பேர் வரை தீவிர சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.  சர்க்கரை நோயாளிகளில் தாமாக முன்வந்து காசநோய் கண்டறியும் பரிசோதனை செய்தவர்கள் அடிப்படையிலே இந்த விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பரிசோதனையை விரிவுபடுத்தினால் காசநோய் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ராமநாதபுரத்தில் 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 அரசு மருத்துவமனைகள் இருந்தும், அதில் மொத்தம் 20 இடங்களில் மட்டுமே சளியில் காசநோய் கிருமியை கண்டறியும் நுண்ணோக்கி வசதிகள் உள்ளன.  ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் மிக நவீன (சிபினட்) இயந்திரம் மூலம் விரைந்து துல்லியமாக காசநோய் பாதிப்பை அறியும் வசதியுள்ளது. ஆனால், அதில் நாளொன்றுக்கு 16 பேருக்கு மட்டுமே பரிசோதிக்கமுடியும். ஆகவே ஒன்றிய அளவிலான மருத்துவமனைகளிலும் இச்சாதனத்தை அமைப்பது அவசியமாகிறது.  மேலும், காசநோய் கண்டறியும் ஆய்வக நுட்பநர்கள் 15 பேருக்கும் அதிகமாக தேவை என்ற நிலையில், மாவட்டத்தில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்.  

2025-க்குள் ராமநாதபுரத்தில் காசநோய் முற்றிலும் ஒழிப்பு என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான நவீன உள் கட்டமைப்பு, பரிசோதனை, தேவையான பணியாளர்கள் போன்ற வசதிகள் செய்துதரப்படவில்லை. போதிய சிகிச்சைக்கான வசதியின்மையால் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை போன்ற தொலைதூர பகுதிகளுக்கு சென்று சிகிச்சை பெறும் நிலையே உள்ளது. 

இதுகுறித்து காசநோய் தடுப்பு துணை இயக்குநர்  டாக்டர் ஏ.சாதிக்அலி கூறியது: வீடு வீடாகச் சென்று காசநோய் பரிசோதனை நடத்தி மருந்து, மாத்திரைகள் அளிக்கிறோம். ஏழு சிறப்பு முகாம்கள் நடத்தியுள்ளோம். உழவர் அட்டை உள்ள 500 பேருக்கு மாதம் ரூ.1000 மற்றும் காசநோய் சிறப்பு மாத்திரை வாங்கும் 1500 பேருக்கும் மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கிவருகிறோம். வரும் சில ஆண்டுகளில் காசநோயை முழுமையாக கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகிறோம் என்றார். 

அதிக பாதிப்பு ஏன்?  

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட ராமநாதபுரத்தில் மது அருந்துவோர் அதிகம் காசநோய் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததும், போதையில் சத்தான உணவை உண்ண தவறுவதுமே இதற்கு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.  ராமேசுவரம், ஏர்வாடிக்கு வெளி மாநிலத்தவரும், வெளிமாவட்டத்தவரும் அதிகம் வந்து செல்வதாலும், நெருக்கடியான சூழலில் சுகாதாரமில்லாத நிலையாலும் காசநோய் பாதிப்பு அதிகம் உள்ளதாக மருத்துவத்துறையினர் கூறுகின்றனர்.

சர்க்கரை நோயாளிகளுக்கு வழக்கமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் காச நோய் பாதிப்பு தவிர்க்க முடியாததாகிறது எனக்கூறும் மருத்துவர்கள், தற்போது அவர்களுக்கு காசநோய்  பாதிப்பு பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றனர்.

More from the section

180 அரிய வகை தாவரங்கள் குறித்த நூல் வெளியீடு
நாகர்கோவில்-தாம்பரத்துக்கு சுவிதா ரயில் இயக்கம்
தமிழகத்தில் 21 ஆயிரம் பேருக்கு காசநோய் பாதிப்பு
அதிமுக ஆட்சியில்தான் அதிகளவில் பெண்களுக்கான நலத் திட்டங்கள்: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி
அதிமுக அணியில் பாஜக இடம்பெற்றிருப்பது  ஏற்புடையது அல்ல:  சுப்பிரமணியன் சுவாமி