சனிக்கிழமை 23 மார்ச் 2019

போலிஸ் துணை இல்லாமல் எடப்பாடி தொகுதியில் தனியாக நிற்க முடியுமா?: முதல்வருக்கு ஸ்டாலின் சவால் 

DIN | Published: 17th February 2019 03:46 PM

 

சென்னை: போலிஸ் துணை இல்லாமல் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தனியாக நிற்க முடியுமா? என்று முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். அதில் இருந்து:

இது திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சியா அல்லது இந்த மாவட்டத்தைச் சார்ந்திருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாநாடா என்று சந்தேகப்படக்கூடிய அளவிற்கு இந்த வரவேற்பு விழாவையே ஒரு மாநாடு போல் நம்முடைய வசந்தம் கார்த்திகேயன் அவர்கள் நடத்திக் கொண்டிருப்பது, அவர் எவ்வளவு திறமைசாலி என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

கூட்டணி முறையாக ஏற்பட்டால் அது தவறல்ல, பலவந்தப்படுத்தி கட்டாயப்படுத்தி ஏற்படுத்தக்கூடிய கூட்டணி இப்பொழுது தமிழ்நாட்டில் உருவாகியிருக்கின்றது. உருவாகப் போகின்றது. அதை நீங்கள் காணப்போகின்றீர்கள். எப்படி கட்டாயப்படுத்தப்படுகின்றது என்று சொன்னால், மிரட்டி, அச்சுறுத்தி, எங்களோடு நீங்கள் கூட்டணி வைக்கவில்லை என்று சொன்னால் குட்கா விவகாரத்தை நாங்கள் பிரச்னை ஆக்குவோம். எங்களோடு நீங்கள் கூட்டணி வைக்கவில்லை என்று சொன்னால், 89 கோடி வருமான வரித்துறை ரெய்டு செய்து அதன் ரெக்கார்டு எங்கள் கையில் இருக்கின்றது. எங்களோடு நீங்கள் கூட்டணி வைக்கவில்லை என்று சொன்னால் ஏற்கனவே, காண்டிராக்டில் பலகோடி ஊழல் செய்து அது சி.பி.ஐ விசாரணை வரை சென்றிருக்கின்றது, எனவே, வருமான வரித்துறை ரெய்டுகள் கோட்டை வரையில் சென்று நடத்தியிருக்கின்றோம். அதையும் தாண்டி கொடநாடு விவகாரத்தை பிரச்னை ஆக்கிவிடுவேன். ஊழல் செய்து சிறைக்குச் சென்ற முதலமைச்சரைத்தான் பார்த்திருக்கின்றோம். கொலை செய்த குற்றத்திற்கு சிறைக்குப் போகின்ற ஒரு முதலமைச்சர் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கின்றார் என்று மிரட்டி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் ரீதியாக தேர்தலுக்காக நடத்துகின்ற கூட்டணி அது ஒரு பக்கம்.

ஜெயலலிதா அம்மையார் மறைவிற்குப்பிறகு நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி, ஓ.பி.எஸ் அவர்கள் ஜெயலலிதா காலில் விழுந்து முதல்வராக வந்தவர். ஆனால், இப்போது இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் காலில் விழுந்து அல்ல, காலிலே தவழ்ந்து மண்புழு தவழ்வது போல் தவழ்ந்து வந்தவர். ஆட்சி நடக்கிறதே தவிர ஒரு மெஜாரிட்டி நிலையில் இந்த ஆட்சி இருக்கின்றதா? தயவு செய்து நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி நாம் காத்திருக்கின்றோம். விரைவில் அது வரப்போகின்றது, அதை தள்ளிவைக்க வாய்ப்பே கிடையாது, சட்டப்படி 5 வருடத்திற்கு ஒரு முறை நாடாளுமன்றத் தேர்தல் வைத்தாக வேண்டும்.

மத்தியில் ஆட்சி மாற்றம் 5 வருடத்திற்கு ஒரு முறை. அது முறையாக நடக்கின்றதா இல்லையா என்று தேர்தல் வைத்து தீர்மானிக்கின்ற நிலை நிச்சயம் வரப்போகின்றது. அதில் எவ்வித மாற்றமும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், இந்த மாத இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ தேதி அறிவிக்கப்படவிருக்கின்றது. ஏப்ரல், மே மாதத்திற்குள் இந்தியா முழுவதும் நடாளுமன்றத் தேர்தல் முழுமையாக முடிவுற்று மத்தியில் ஒரு புதிய ஆட்சி உருவாகப் போகிறது. உறுதியாக சொல்லுகின்றேன். திராவிட முன்னேற்றக் கழகம் சுட்டிக்காட்டக்கூடிய பிரதமர் தலைமையில் அமையக்கூடிய ஒரு ஆட்சி மத்தியில் அமையவிருக்கின்றது. அதில் மாற்றம் கிடையாது. ஆகவே தான். நாடாளுமன்றத் தேர்தல் எதிர்நோக்கி காத்திருக்கின்றோம். அந்தத் தேர்தலோடு இந்த 18 தொகுதியினுடைய சட்டமன்ற இடைத்தேர்தல் ஓராண்டு காலமாக இந்த 18 தொகுதிகளில் எம்.எல்.ஏ இல்லாமல் அனாதை தொகுதிகளாக இருந்து கொண்டிருக்கின்றது. மேலும் 3 தொகுதிகள். மொத்தம் 21 தொகுதிகள்.

கஜா புயலால் டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அம்மக்கள் எந்தளவிற்கு அவதிப்பட்டார்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். மாநில அரசு மத்திய அரசிடம் 14 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டார்கள். ஆனால், வந்த தொகை வெறும் 2000 கோடி மட்டுமே. இந்த நிலையிலே தான் பல கோடி ரூபாய் செலவு செய்து விளம்பரங்கள் செய்திருக்கிறார்கள்.

நான் உறுதியோடு தெரிவிக்க விரும்புகிறேன். நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறதா? 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரப்போகிறதா? இல்லை ஒட்டுமொத்த சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரப்போகிறதா? என எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அப்படி தேர்தல் வருகிற நேரத்தில் சரியான தீர்ப்பை வழங்குவதற்கு நீங்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஊராட்சிகளில் ஊராட்சி சபைக் கூட்டங்களை நாம் நடத்தி வருகிறோம். ஜனவரி 3 ஆம் தேதி திருவாரூரில் நான் தொடங்கி வைத்து இன்றைக்கு 95 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது. உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நேரத்திலேயே நான் தமிழகத்தின் அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் சென்றவன். அப்போது மட்டுமல்ல, பள்ளிப் பருவத்திலே, கல்லூரி பருவத்திலே இளைஞர் அணி என்கிற அமைப்பை உருவாக்கி ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று கழகக் கொடியினை ஏற்றி வைத்த பெருமை உண்டு. அது இன்றைக்கு கம்பீரமாக பறந்து கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல், எடப்பாடிக்கு பொறாமை. ஒரே ஒரு பந்தயம். உங்களை எல்லாம் சாட்சியாக வைத்துக்கொண்டு சொல்கிறேன். இந்தக் கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம், சங்கராபுரம் பகுதியில் ஏன் ஒட்டுமொத்த விழுப்புரம் மாவட்டத்தில் யார் துணையும் இல்லாமல் நான் வருகிறேன்.  குழந்தையில் இருந்து வயது முதிர்ந்தவர்கள் யாராவது ஒருவர் என்னைத் தெரியவில்லை எனச் சொல்லட்டும். என்னைப் பார்த்தவுடன் இவன் தான் ஸ்டாலின்; கலைஞரின் மகன் என சொல்லக்கூடிய அளவுக்கு என்னுடைய பயணம் இருந்திருக்கிறது.

அதையே திருப்பிக் கேட்கிறேன். எடப்பாடி பழனிசாமி போலிஸ் துணை இல்லாமல், இங்கே வேண்டாம். அவருடைய சேலம் மாவட்டம், அங்கு கூட வேண்டாம். உன்னைத் தேர்ந்தெடுத்த எடப்பாடி தொகுதியில் தன்னந்தனியாக நில். உன்னை யார்? யார்? என்று கேட்கிறார்களா இல்லையா என்று பார்ப்போம். எங்களைப் பார்த்து கேலி செய்யும், கிண்டல் செய்யும் நிலையில் நீ இருக்கிறாய் என்றால், அம்மையார் ஜெயலலிதா மறைந்த காரணத்தால் உடைந்து போன அந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, அது என்றைக்கு விழப்போகிறதோ? கவிழப்போகிறதோ? என தெரியவில்லை. விரைவில் மக்கள் அதற்கு ஒரு நல்ல தீர்ப்பை தருவார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கெல்லாம் நீங்கள் தயாராகுங்கள்! தயாராகுங்கள் எனக்கேட்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags : Tamilnadu marriage DMK stalin speech admk OPS EPS

More from the section

ஐஆர்சிடிசியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
மக்கள் நீதி மய்யம், வளரும் தமிழகம் கட்சி இடையே கூட்டணி ஒப்பந்தம்: 2 தொகுதிகள் ஒதுக்க முடிவு
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு தொடர்புண்டு: உதயநிதி ஸ்டாலின்
திமுகவினர் விஞ்ஞான மூளை படைத்தவா்கள்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு
கடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி