புதன்கிழமை 20 மார்ச் 2019

அதிகரித்து வரும் வட மாநிலத் தொழிலாளர்கள்: தீர்வுதான் என்ன?

DIN | Published: 18th February 2019 02:30 AM

திருச்சி: வரையறை ஏதுமின்றி ஆண்டுதோறும் அதிகரித்துவரும் வடமாநிலத் தொழிலாளர்களின் வருகையை மத்திய, மாநில அரசுகள் வரன்முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தென்னிந்திய தொழில்துறையினரிடம் வலுப்பெற்றுள்ளது.

 நாடு முழுவதும் 2011-இல் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் மொழிகள் குறித்த புள்ளிவிவரங்களை அண்மையில் மத்திய அரசு வெளியிட்டது. இதனுடன் 2001இல் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு பட்டியலை ஒப்பிட்டுப் பார்த்தால் தென்னிந்திய மொழிகள் பேசுவோரின் எண்ணிக்கை வட மாநிலங்களில் குறைந்தும், வட மாநில மொழிகள் பேசுவோர் எண்ணிக்கை தென்னிந்தியாவில் அதிகரித்தும் உள்ளதைக் காணமுடிகிறது.

 குறிப்பாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகள் பேசுவோரின் எண்ணிக்கை வட மாநிலங்களில் குறைந்துள்ளது. ஹிந்தி, ஒடியா, வங்கம் உள்ளிட்ட வட இந்திய மொழிகளை பேசுவோரின் எண்ணிக்கை தென்னிந்தியாவில் அதிகரித்துள்ளது.

 2001-இல் வட மாநிலங்களில் 8.2 லட்சமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 2011கணக்கெடுப்பின்படி 7.8 லட்சமாகக் குறைந்துள்ளது. இதேபோல, 2001-இல் வட மாநிலங்களில் 8 லட்சமாக இருந்த மலையாள மொழி பேசுவோரின் எண்ணிக்கை 7.2 லட்சமாகக் குறைந்துவிட்டது. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தென்னிந்திய மாநிலங்களில் வட மாநிலத்தவர்கள் 58.2 லட்சமாக இருந்தனர். இது, 2011 கணக்கெடுப்பில் 77.5 லட்சமாக அதிகரித்துவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 20 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர். பிகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிஸா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துதான் தொழிலாளர்களாக அதிகளவில் வருகின்றனர். 2021 கணக்கெடுப்பில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் என்ன?: தென்னிந்தியாவில் தொழில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் கட்டுமானத் தொழில், திருப்பூர் பின்னலாடைத் தொழில், நாமக்கல் கோழிப் பண்ணைத் தொழில், சிறிய உணவகங்கள் தொடங்கி கார்ப்பரேட் உணவகங்கள் வரை, மதுக் கூடங்கள் மற்றும் அனைத்து வகை சேவைத் துறைகளிலும் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உள்ளன. இதனால், புற்றீசல்போல வட மாநிலங்களில் இருந்து புறப்பட்டு வந்துவிடுகின்றனர்.

 3 வேளை உணவு, ஒதுங்க இடம் மட்டுமே போதும் என்ற நிலையில் கடும் உழைப்புக்குத் தயாராக வரும் இந்தத் தொழிலாளர்களை தென்னிந்திய மாநிலங்கள் வரவேற்கின்றன.

 குறிப்பாக தமிழகத்தில் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றனர். வேலைவாய்ப்பு இல்லாவிட்டாலும் சீனாவிலிருந்து குப்பைகளாக இறக்குமதி செய்யப்படும் பல்வேறு வகையான பொருள்களை விற்பதற்காக சாலையோரம் புறம்போக்கு நிலங்களில் குடில்கள் அமைத்து குடும்பம், குடும்பமாக வசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். காவிரிப் பாசன பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகளிலும் வட மாநிலத்தவர் வருகை அதிகரித்துவிட்டது. மத்திய, மாநில அரசுகளின் மெகா திட்டங்கள் மற்றும் பாலம், சாலை, கட்டடம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்களும் 70 சதவீதம் வட மாநிலத் தொழிலாளர்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால், இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் சொற்ப அளவு மட்டுமே.

 குறைந்தபட்ச ஊதியம்: ஒரு தொழிலாளி தனது குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமன்றி குழந்தைகளின் கல்வி, சுகாதாரத் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய அளவு ஊதியம் பெறுவது லிவிங் வேஜ் என குறிப்பிடப்படுகிறது.

 உணவு, உடை மற்றும் தங்கும் வசதி என அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் பிழைப்பாதார ஊதியமே குறைந்தபட்ச ஊதியம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் 1943, 1944-இல் தொழிலாளர் நிலைக் குழுவின் கூட்டங்களிலும், இதன் தொடர்ச்சியாக 1945-இல் முத்தரப்பு தொழிலாளர் மாநாடுகளில் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் தேவை குறித்து விவாதிக்கப்பட்டது. 1946 ஏப்ரல் 11-இல் நாடாளுமன்றத்தில் குறைந்தபட்ச ஊதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், 1948 மார்ச் மாதம் இது சட்டமானது. ஆனால், வட மாநிலத் தொழிலாளர்களுக்கு இந்த சட்டப்படி ஏதும் வழங்க வேண்டியதில்லை. ரூ.100 தொடங்கி அதிகபட்சம் ரூ.300 வரை கூலி வழங்கினாலே 16 மணிநேரம் கூட கடுமையாகப் பணியாற்றத் தயாராகவுள்ளனர்.

 தொழிலாளர் நலச் சட்டங்கள் கூறுவது என்ன?: இந்தியாவில் 1970-ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்துதல் சட்டம் இயற்றப்பட்ட பின்புதான், ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 1976-ஆம் ஆண்டு துப்புரவுத் தொழிலாளர், பாதுகாவலர்கள் உள்ளிட்டப் பிரிவுகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்து மத்திய அரசு சட்டம் பிறப்பித்தது. ஆனால் அந்தச் சட்டத்தை 2001-இல் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இதனால், அங்கிங்கெனாதபடி எங்கும், எதிலும் வட மாநிலத் தொழிலாளர்கள் என்றாகிவிட்டது.

 அச்சுறுத்தல்கள் என்ன?: வட மாநிலத்தவர் வருகையால் தமிழகத்தில் வசிப்போரின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஏடிஎம் கொள்ளை, ரயில் பெட்டிகளில் பழைய ரூபாய்கள் கொள்ளை, நகைக் கடை கொள்ளை, வங்கிகளில் துளையிட்டு கொள்ளை என அடுத்தடுத்து அரங்கேறிவரும் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் அதைத் தடுக்க முயலும் காவலாளிகள், உரிமையாளர்கள் கொல்லப்படுவதும் வட மாநிலத்தவர்களால்தான் என்பதற்கு தமிழகக் காவல்துறையில் பதிவாகியுள்ள வழக்குகளே ஆதாரம். உரிய பதிவுகள் இல்லாததால் மௌலிவாக்கம் கட்டட விபத்து போன்ற தருணங்களில் இறந்தவர்களை அடையாளம் கண்டு சடலங்களை ஒப்படைப்பதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.

 தீர்வுதான் என்ன?: அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் மகா சம்மேளன பொதுச் செயலர் கே. ரவி கூறியது: மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களில் உள்ளதைப் போன்று எந்த வேலையாக இருந்தாலும் உள்மாநிலத் தொழிலாளர்களுக்கு 80 சத ஒதுக்கீடு என்ற சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும். 1979 ஜூன் மாதம் கொண்டு வரப்பட்ட இந்தியாவுக்குள் புலம்பெயரும் தொழிலாளர்களுக்கான வரன்முறை சட்டத்தை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதிய சட்டத்தையும் அமல்படுத்த வேண்டும்.

 மேலும், தொழிலாளர் மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றையும் தவறாமல் அமல்படுத்த வேண்டும். புலம்பெயர்ந்து வரும் வெளி மாநிலத்தவர்களை ஒவ்வொரு மாநிலத்திலும் முறையாகப் பதிவு செய்து, வாரியங்களில் உறுப்பினராக இணைக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டால் வட மாநிலத்தவர் வருகை வரன்முறைக்குள் வந்துவிடும். தொழிலாளர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். உள்மாநிலத் தொழிலாளர்களும் பாதுகாக்கப்படுவர் என்றார் அவர்.
 -ஆர். முருகன்
 

More from the section

ஒரு கோடி சாலைப் பணியாளர்கள்: திமுக தேர்தல் அறிக்கை
ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக தேர்தல் அறிக்கை
பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: ஏப்.19-இல் தேர்வு முடிவுகள்
முதல் நாளில் 22 பேர் வேட்பு மனு தாக்கல்
கொத்தடிமை தொழிலாளர் மீட்புப் பணி: வாகனம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி