திங்கள்கிழமை 25 மார்ச் 2019

சென்னையை மிரட்டும் குடிநீர்ப் பிரச்னை: நீர் உந்து நிலையங்கள் சீரமைக்கப்படுமா?

DIN | Published: 18th February 2019 02:30 AM

திருவள்ளூர்: கோடைக்காலங்களில் சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், திருவள்ளூர் அருகே அமைக்கப்பட்ட நீர் உந்து (பம்பிங் ஸ்டேஷன்) நிலையங்கள் போதிய பராமரிப்பின்றி புதர் மண்டிக் கிடக்கின்றன. அவற்றைச் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதைத் தொடர்ந்து, திருவள்ளூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் போதிய மழை இல்லாததால் ஏரிகளிலும், ஆழ்துளைக் கிணறுகளிலும் நீர் ஆதாரம் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து 12 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டிய நிலையில், அங்கு போதிய நீர் ஆதாரம் இல்லாததால் குறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதைக் கொண்டு குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு கால்வாய்களில் நீர் திறக்க முடியாத நிலை உள்ளது.

 இதுபோன்ற நேரங்களில் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தனிநபர் விளைநிலங்களில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, அளவுக்கேற்ப கட்டணம் செலுத்தி, தண்ணீர் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அவ்வாறு எடுக்கப்படும் நீரை சேகரிக்க திருவள்ளூர்-செங்குன்றம், திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலைகளில் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் முதல் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 11 நீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன. இப்பகுதிகளில் இருந்து விவசாயிகளிடம் பெறப்படும் தண்ணீரை நீர் உந்து நிலையங்களுக்கு கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்து, சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்காக அனுப்பப்பட்டு வந்தது. இதற்காக ஒவ்வொரு நீர் உந்து நிலையத்திலும், பாதுகாப்பு சுற்றுச்சுவர் வசதியுடன் ராட்சத மோட்டார் அறைகளும் அமைக்கப்பட்டன.

 இதேபோல், திருவள்ளூர்-செங்குன்றம் சாலையில் கீழனூரில் 20 லட்சம் கொள்ளளவு கொண்ட நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளின் அனுமதியுடன் பல்வேறு பகுதிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று வரும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு கட்டணமும் அளிக்கப்பட்டு வந்தது.

 இதனிடையே, போதிய மழை பெய்யாததாலும், ஏரிகளில் நீர் தேங்காததாலும், விளைநிலங்களில் இருந்து அதிகமான தண்ணீர் எடுக்கப்பட்டது. இதனால் விவசாயத்துக்கு போதிய நீரின்றி விவசாயிகள் மிகவும் அவதிக்குள்ளாயினர். அதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக தனிநபர்கள் சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் தர மறுத்தனர்.

 இந்நிலையில், குடிநீர்த் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட நீர் உந்து நிலையங்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் குழாய்கள் பராமரிப்பின்றி கிடக்கின்றன. அதேபோல் நீர் உந்து நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. இதனால், ராட்சத மோட்டார் மற்றும் குழாய்கள் துருப்பிடித்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், தண்ணீர் சேகரமாகும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் மாதங்களில் தனிநபர்களிடம் இருந்து நீரை விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலை உள்ளது. அதனால், குடிநீருக்காக பயன்படுத்தும் நீர் உந்து நிலையங்களைப் பராமரித்து தயாராக வைத்திருக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதுகுறித்து நீர் உந்து நிலையங்களின் கண்காணிப்புப் பொறியாளர் ஒருவர் கூறியது:

 தற்போதைய நிலையில் போதிய மழை பெய்யாததோடு, ஏரிகளில் நீரும் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் கோடைக்காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதுவரை விவசாயிகளிடம் இருந்து தண்ணீர் வாங்குவதற்கான தகவல் எதுவும் வரவில்லை. இரண்டு ஆண்டுகளாக நீர் உந்து நிலையங்களைப் பயன்படுத்தாத நிலையில், அவை முள் புதர் சூழ்ந்து காணப்படுகின்றன. இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அறிவிப்பு வரும்போது, நீர் உந்து நிலையங்களில் பராமரிப்பு செய்து அவற்றைத் தயாராக வைப்போம் என்றார் அவர்.
 - சு.பாண்டியன்
 

More from the section

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா?
மக்களவை, பேரவை இடைத் தேர்தல்கள்வேட்புமனு தாக்கல்:  நாளை கடைசி
மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அறிவிப்பு: கமல்ஹாசன் போட்டியிடவில்லை
உள் தமிழகத்தில் இன்று வெப்பநிலை உயர வாய்ப்பு
திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா தேரோட்டம்