திங்கள்கிழமை 25 மார்ச் 2019

தாமதமாகும் விழுப்புரம்-நாகை நான்கு வழிச் சாலை திட்டப் பணி!

DIN | Published: 18th February 2019 02:30 AM

விழுப்புரம்: விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே ரூ.6,431 கோடியில் பிரம்மாண்டமாக அமையவுள்ள நான்கு வழிச்சாலை திட்டப் பணி நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகி வருகிறது.
 விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி, கடலூர் வழியாக நாகப்பட்டினத்துக்கு நான்கு வழிச்சாலைத் திட்டப் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 180 கி.மீ. தொலைவிலான இந்த நான்கு வழிச்சாலைப் பணி ரூ.6,431 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. இது தற்போது, 194 கி.மீ. தொலைவாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
 விழுப்புரத்தில் தொடக்கம்: இந்த நான்கு வழிச்சாலை (என்.எச்.45ஏ) , சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் (என்.எச்.45), விழுப்புரம் அருகே ஜானகிபுரம் புறவழிச்சாலையுடன் இணைந்து தொடங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது இந்த வழித்தடத்தில் இருவழிச்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக தரம் உயர்த்தியும், புதிய புறவழிச்சாலைகள், மேம்பாலங்கள், தரைவழிப் பாலங்கள், அணுகு சாலைகள், சாலையோர வாகன நிறுத்த மையங்களும் அமைகின்றன.
 தமிழகம்-புதுவை வழியான சாலை: இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 148.3 கி.மீ. தொலைவும், புதுவை மாநிலத்தில் 31.6 கி.மீ. தொலைவும், நான்கு வழிச்சாலைகளாக அமைகின்றன. தமிழகப் பகுதியான விழுப்புரத்தில் 22.10 கி.மீ., கடலூரில் 67.55 கி.மீ., நாகையில் 58.25 கி.மீ. என மொத்தம் 148.90 கி.மீ. சாலையும், புதுவையில் 17.55 கி.மீ, காரைக்காலில் 14.10 கி.மீ. சாலையும் அமைகிறது.
 இந்தத் திட்டம் மூலம் விழுப்புரம், புதுவை, கடலூர், நாகை மாவட்டங்களுக்கு அகலமான நான்கு வழிச்சாலை அமைவதால், சென்னை, புதுவை, கடலூர், கும்பகோணம், நாகை சுற்றுப்பகுதிகளில் சாலைப் போக்குவரத்து நெரிசல் குறையும். பயணநேரமும் குறையும். மேலும் கிழக்கு கடற்கரைச் சாலையை இணைக்கும் இத்திட்டம் மூலம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் வாகனப் போக்குவரத்து குறையும்.
 104 கி.மீ. புறவழிச்சாலைகள்: இந்தத் திட்டத்தில், விழுப்புரம்-கெங்கராம்பாளையம் இடையே புறவழிச்சாலை 16.3 கி.மீ., புதுவை அருகே வடமங்கலம்-கடலூர் அருகே தவளக்குப்பம் இடையே அமையும் புறவழிச்சாலை 33.5 கி.மீ., சிதம்பரம் அருகே சி.முட்லூர் புறவழிச்சாலை 1.98 கி.மீ., சிதம்பரம் பழைய புறவழிச்சாலை இணைப்பு 2.77 கி.மீ., கொள்ளிடம் புறவழிச்சாலை 11.13 கி.மீ., நாகை மாவட்டம், சதானந்தபுரத்தில் அமையும் புறவழிச்சாலை 6.12 கி.மீ., காரைக்கால்-வாஞ்சூர் இடையே புறவழிச்சாலை 29 கி.மீ தொலைவிலும் அமைகிறது. மொத்தம் 104 கி.மீ. தொலைவில் புறவழிச்சாலைகள் அமைகின்றன. இதன்படி, மொத்த சாலையில், 58 சதவீதம் புறவழிச்சாலைகளாக அமைகின்றன.
 ட்ரெம்பெட் ரவுண்டானா பாலம்:
 விழுப்புரம் அருகே ஜானகிபுரம் புறவழிச்சாலை சந்திப்பிலிருந்து விழுப்புரம்-நாகை நான்கு வழிச்சாலை தொடங்குகிறது. அங்கு தற்போதுள்ள சென்னை-திருச்சி நான்கு வழிச்சாலையை இணைக்கும் வகையில், ஜானகிபுரம் ரயில்வே மேம்பாலம் அருகே "ட்ரெம்பெட்' வடிவில், ரவுண்டானாவுடன் பிரம்மாண்டமான உயர்மட்ட பாலம் அமைகிறது.
 புதுவை வில்லியனூர் பகுதியில் மற்றொரு ட்ரெம்பெட் பாலம் அமைகிறது. மேலும், இந்தத் திட்டத்தில் மேம்பாலங்கள், தரைகீழ் வாகனம் செல்லும் பாலங்கள் 44, இலகுரக வாகனங்கள் கடந்து செல்லும் சிறு பாலங்கள் 22 ஆகியவை அமைகின்றன. இவை தவிர 16 இடங்களில் ஆறுகள் குறுக்கிடும் பகுதிகளில் பெரிய பாலங்கள், 66 சிறிய பாலங்கள், 798 சிறு பாலங்களும் அமைகின்றன.
 ரயில்வே பாதைகள் குறுக்கிடும் விழுப்புரம், கண்டமங்கலம், பண்ருட்டி, சிதம்பரம், காரைக்கால் பகுதிகளில் 11 இடங்களில், ரயில்வே மேம்பாலங்கள் அமைகின்றன. நான்கு வழிச்சாலையிலிருந்து, ஊர்கள் பிரிந்து செல்லும் இடங்களில் 152 கி.மீ. தொலைவுக்கு அணுகு சாலைகள் அமைகின்றன.

மூன்று சுங்கச் சாவடிகள்: விழுப்புரம்-புதுவை இடையே 18-ஆவது கி.மீ., தொலைவில் திருபுவனை பகுதியில் ஒரு சுங்கச் சாவடி, சிதம்பரத்துக்கு முன்பாக புவனகிரி அருகே 86-வது கி.மீ. தொலைவில் ஒரு புறவழிச்சாலையில் ஒரு சுங்கச்சாவடி, காரைக்கால் முன்பாக தரங்கம்பாடி அருகே 146-ஆவது கி.மீ. தொலைவில் ஒரு சுங்கச்சாவடி அமைகின்றன.
 4 ஒப்பந்த நிறுவனங்கள் பணிகளை மேற்கொள்கின்றன.
 விழுப்புரம்-புதுச்சேரி இடையே 0-29 கி.மீ. தொலைவுக்கு புதுதில்லியைச் சேர்ந்த ஓரியண்டல் கட்டமைப்பு நிறுவனமும், புதுவையிலிருந்து-பூண்டியாங்குப்பம் (29-67 கி.மீ) மற்றும் பூண்டியாங்குப்பம்-சதானந்தபுரம்(67கி.மீ.-123.8 கி.மீ.) இடையே உள்ள சாலையை ஐ.ஆர்.பி. கட்டமைப்பு நிறுவனமும், சதானந்தபுரம்- நாகப்பட்டினம் (123 கி.மீ-180கி.மீ.) இடையே வெல்ஸ்பன் கட்டமைப்பு நிறுவனமும், நான்கு வழிச்சாலைப் பணியை மேற்கொள்கின்றன.
 தாமதம் ஏன்?: இந்தத் திட்டத்துக்காக, விழுப்புரம் ஜானகிபுரத்திலிருந்து, விழுப்புரம்-நாகை நான்கு வழிச்சாலைப் பணிகள் தொடங்க, தனி மாவட்ட வருவாய் அதிகாரிகள் தலைமையில் நிலம் கையகப் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில், இடங்கள் வந்துள்ள நிலையில், சாலை எல்லைகள் அளவீடு செய்து எல்லை கற்கள், கொடிகள் பதிக்கப்பட்டுள்ளன.
 விழுப்புரம் மாவட்டத்தில் இந்தப் பணிகளை தொடங்க, விழுப்புரம் அருகே கண்டமானடி பகுதியில், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினரும், கனரக வாகனங்கள், பிளான்ட் அமைத்து கடந்த சில மாதங்களாக முகாமிட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நிதி வந்து சேராததால் ஜனவரி மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டபடி சாலைப் பணி இதுவரை தொடங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
 மார்ச் மாதம் பணிகள் தொடங்கும்: இதுகுறித்து விழுப்புரம்-நாகை சாலைத் திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் சிவாஜியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
 இத்திட்டத்துக்காக நிலம் கையகப்பணி 80 சதவீதம் அளவுக்கு முடிந்து உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை காரணமாகவே சிறிது தொய்வு ஏற்பட்டது. இருப்பினும், அனைத்துப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு, மார்ச் முதல் வாரத்தில் சாலைப்பணிகள் தொடங்கும் என்றார்.
 -இல.அன்பரசு
 
 

More from the section

மக்களவை, பேரவை இடைத் தேர்தல்கள்வேட்புமனு தாக்கல்:  நாளை கடைசி
மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அறிவிப்பு: கமல்ஹாசன் போட்டியிடவில்லை
உள் தமிழகத்தில் இன்று வெப்பநிலை உயர வாய்ப்பு
திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா தேரோட்டம்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி