சனிக்கிழமை 23 மார்ச் 2019

எல்லா சந்திப்புக்களும் கூட்டணி பற்றியது மட்டுமே அல்ல: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் பியூஷ்  கோயல் 

DIN | Published: 19th February 2019 07:13 PM

 

சென்னை: எல்லா சந்திப்புக்களும் கூட்டணி பற்றியது மட்டுமே அல்ல என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்த பின் மத்திய அமைச்சர் பியூஷ்  கோயல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சென்னை அடையாறில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் செவ்வாய் மாலை பேச்சுவார்தை நடந்து வந்தது. பாஜக சார்பாக மத்திய நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.   

ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.  அதையே பியூஷ் கோயலும் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். 

இந்த சந்திப்புக்குப் பின்னர் பியூஷ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க அவரது இல்லத்திற்குச் சென்றார். அவருடன் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்னன் மற்றும் வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.      இந்த சந்திப்பானது சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல் கூறியதாவது:

உடல்நல பாதிப்பிற்கு உள்ளான விஜயகாந்த் மீண்டு வந்திருப்பது மகிழ்ச்சி. அவரையும் சகோதரி பிரேமலதாவையும் சந்தித்தது மகிழ்ச்சி. விஜயகாந்த் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற தமிழக மக்கள் சார்பாக நானும் வாழ்த்துகிறேன்.

விஜயகாந்த் திரைத்துறையில் ஒரு முக்கியமான புள்ளி. மத்திய அரசு திரைத்துறைக்கு செய்துள்ள உதவிகள் குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.      

பிரதமர் மோடி மற்றும் எங்கள் கட்சித் தலைவர் அமித் ஷா சார்பாக அவருக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தேன். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டணி குறித்து எதுவும் பேசப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'எல்லா சந்திப்புக்களும் கூட்டணி பற்றியது மட்டுமே அல்ல; இது தனிப்பட்ட முறையில் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்கான சந்திப்பு' என்று அவர் கூறினார்.

Tags : tamilnadu NDA BJP ADMK poll pact DMDK vijayakanth piyush goel meet

More from the section

கள்ளக்குறிச்சியில் சுதீஷ் வேட்புமனு தாக்கல்
சிலை திருட்டு வழக்கு டி.எஸ்.பி. காதர் பாட்சா கைது
கன்னியாகுமரியில்  பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
தமாகா தேர்தல் பணிக்குழு அமைப்பு
புதுச்சேரி: வைத்திலிங்கம் வேட்புமனு தாக்கல்