சனிக்கிழமை 23 மார்ச் 2019

கட்டாயக் கல்யாணம் என்றால் அப்படித்தான் அவசரமாக நடக்கும்: அதிமுக கூட்டணி அறிவிப்பு குறித்து திருநாவுக்கரசர் 

DIN | Published: 19th February 2019 04:56 PM

 

புது தில்லி: கட்டாயக் கல்யாணம் என்றால் அப்படித்தான் அவசரமாக நடக்கும் என்று அதிமுக - பாமக கூட்டணி அறிவிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவது குறித்து முறையான அறிவிப்பு செவ்வாய் காலை வெளியானது. அதன்படி பாமக 7 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், அத்துடன் ஒரு மாநிலங்களவை இடமும் பாமகவுக்கு வழங்கப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதேசமயம் திருநாவுக்கரசர், சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் தில்லியில் முகாமிட்டு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கட்டாயக் கல்யாணம் என்றால் அப்படித்தான் அவசரமாக நடக்கும் என்று அதிமுக - பாமக கூட்டணி அறிவிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தில்லியில் ராகுல் காந்தியுடனான ஆலோசனை நிறைவு பெற்றததைத் தொடந்து திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுஅவர் கூறியதாவது:

அதிமுக கூட்டணி என்பது ஒரு மூழ்கும் கப்பல். யார் அவர்களோடு சேர்ந்தாலும் அவர்களும் மூழ்கத்தான் போகிறார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பலவீனமடைந்து விட்டது. பாஜகவுக்கு இங்கு அஸ்திவாரமே கிடையாது. எனவே யார் அவர்களுடன் இந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அது வெற்றியடைய போவதில்லை.

திமுகவுடன் கூட்டணி தொடர்பான எங்களது பேச்சு வார்த்தை எந்த பிரச்னையுமின்றி சுமுகமாக முடிந்துள்ளது. இழுபறியில் எதுவும் கிடையாது. வெகு வெகு விரைவில் முறையான அறிவிப்புகள் வெளிவரும் என்று அவர் தெரிவித்தார். . 

அதிமுக கூட்டணி அறிவிப்புகள் முதலில் வெளிவந்துள்ளது பற்றிய ஓரு கேள்விக்கு, கட்டாயக் கல்யாணம் என்றால் அப்படித்தான் அவசரமாக நடக்கும் என்றும், இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று ராமதாஸ் முன்பு அறிவித்தது தொடர்பான கேள்விக்கு, ஒருவேளை இபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையிலான கட்சியை திராவிட கட்சி கிடையாது என்று அவர் நினைக்கலாம் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

மேலும் பேச்சு வார்த்தையின் போது ராகுல் காந்தி, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்தியதோடு, நன்றாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார். ராகுல் மற்றும் பிரியங்கா தேர்தல் பிரசாரத்திற்கு வருவார்கள் என்பதையும் அவர் உறுதி செய்தார்.      

Tags : tamilnadu parliment election alliance ADMK PMK EPS OPS ramadoss DMK congress thirunavukkarasar delhi rahul alliance talks

More from the section

கள்ளக்குறிச்சியில் சுதீஷ் வேட்புமனு தாக்கல்
சிலை திருட்டு வழக்கு டி.எஸ்.பி. காதர் பாட்சா கைது
கன்னியாகுமரியில்  பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
தமாகா தேர்தல் பணிக்குழு அமைப்பு
புதுச்சேரி: வைத்திலிங்கம் வேட்புமனு தாக்கல்