புதன்கிழமை 20 மார்ச் 2019

மருந்து தரக் கட்டுப்பாட்டு வரம்புக்குள் எம்ஆர்ஐ, சி.டி.ஸ்கேன்: மத்திய அரசு திட்டம்

DIN | Published: 19th February 2019 03:16 AM


சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட 8 வகையான மருத்துவ உபகரணங்களை மருந்துகளுக்கான வரையறைப் பட்டியலில் மத்திய அரசு கொண்டு வர உள்ளது.     அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அந்த புதிய நடைமுறை அமலாக்கப்படவிருக்கிறது. இதையடுத்து அந்த உபகரணங்களின் தரம், உற்பத்தி, விலை நிர்ணயம், விற்பனை மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பின் கீழ்  ஒழுங்குமுறைப் படுத்தப்பட உள்ளன.

அவ்வாறு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பின்னர், விரும்பிய விலைக்கு மருத்துவ உபகரணங்களை உற்பத்தியாளர்கள் விற்பனை செய்ய இயலாது; அதேபோன்று அவற்றை உற்பத்தி செய்வதற்கும், தரத்தை உறுதி செய்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

இதன் மூலம்,  தவறான மருத்துவ உபகரணங்கள் சந்தைக்கு வராமல் தடுக்க முடியும் என்றும், பொது மக்களுக்கு மருத்துவ சேவைகளை தரமாக வழங்க முடியும் என்றும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும், மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஒருபுறம் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய இத்தகைய ஒழுங்குமுறை விதிகள் இருந்தாலும், மற்றொரு புறம் மருத்துவ உபகரணங்களுக்கு அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. மத்திய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது. இதனால் பல்வேறு எதிர் விளைவுகள் ஏற்படுகின்றன.

உதாரணமாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக,  ஏஎஸ்ஆர் எனப்படும் செயற்கை இடுப்பு மூட்டு உபகரணத்தை ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. உயர் தொழில்நுட்பத்திலான உபகரணம் என மருத்துவர்கள் கூறியதை நம்பி நாடு முழுவதும் 4,700-க்கும் அதிகமானோர் அறுவை சிகிச்சை மூலம் அதனைப் பொருத்திக் கொண்டனர்.

ஆனால், அதற்கு அடுத்த சில நாள்களிலேயே அதனால் ஏற்பட்ட எதிர்விளைவுகள், அவர்களது வாழ்க்கையே முடக்கிப் போட்டது. தரமற்ற அந்த உபகரணத்தின் காரணமாக பலர் நடக்க இயலாமல் ஊனமாகினர்.

இதையடுத்து, சர்ச்சைக்குரிய அந்த செயற்கை மூட்டு உபகரணத்தை சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டது ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம். இத்தனைக்கும் கடந்த 2005-ஆம் ஆண்டிலேயே செயற்கை மூட்டு உபகரணங்கள் அனைத்தும் மருந்து தரக் கட்டுப்பாட்டு வரையறைக்குள் கொண்டு வரப்பட்டு விட்டன.  அப்படி இருந்தும்,  பெரும் பாதிப்புகளை அந்த உபகரணங்கள் ஏற்படுத்திச் சென்றன.

இந்த நிலையில், ஒழுங்குமுறைப் படுத்தப்படாமல் இருக்கும் பல மருத்துவ உபகரணங்களை தரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 8 உபகரணங்களை மருந்துகள்  என்ற வரையறையின் கீழ் வகைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான அறிவிக்கை கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியானது.

உடலுக்குள் பொருத்தப்படும் அனைத்து வகையான மருத்துவ உபகரணங்கள், சி.டி. ஸ்கேன், எம்ஆர்ஐ சாதனம், இதயத் துடிப்பை சீராக்கும் மின் அதிர்வு கருவி, டயாலிசிஸ் கருவிகள், ஊடுகதிர் (எக்ஸ்-ரே) சாதனங்கள்,  புற்றுநோயை கண்டறியும் பிஇடி கருவி, எலும்பு மஜ்ஜை செல்களை பிரிக்கும் கருவி ஆகியவை அந்த வரையறைக்குள் கொண்டு வரப்படும் என அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து மத்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் கூறுகையில், புதிய அறிவிக்கையின் மூலம் மருத்துவ உபகரணங்களின் விலையும், தரமும் உறுதி செய்யப்படும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் இருந்து கிடைத்த பிறகு அதனை அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றனர்.
 

More from the section

ஒரு கோடி சாலைப் பணியாளர்கள்: திமுக தேர்தல் அறிக்கை
ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக தேர்தல் அறிக்கை
பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: ஏப்.19-இல் தேர்வு முடிவுகள்
முதல் நாளில் 22 பேர் வேட்பு மனு தாக்கல்
கொத்தடிமை தொழிலாளர் மீட்புப் பணி: வாகனம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி