புதன்கிழமை 20 மார்ச் 2019

ராகங்களை பாடலாக பாட முடியும்; புத்தகங்களாக வெளியிட முடியாது

DIN | Published: 19th February 2019 03:21 AM
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்த இளையராஜா.


ராகங்களை பாடலாக பாட முடியும். ஆனால் புத்தகங்களாக வெளியிட முடியாது என இசைஞானி இளையராஜா தெரிவித்தார். 

விருதுநகர் செந்திக்குமாரா நாடார் கல்லூரியில் இசைஞானி இளையராஜாவின் 75-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று இளையராஜா பேசியது: 

பலர் கோயிலுக்கு சென்றாலும் வேறு சிந்தனைகள் வரும். அந்த நேரத்தில் ஜனனி... ஜனனி... எனத் தொடங்கும் பாடலை நினைத்துப் பாருங்கள் உங்களது மனம் சுத்தமாகிவிடும். நான் சிறுவனாக இருந்தபோது ஆர்மோனியப் பெட்டியுடன் சுற்றி வருவேன். 
கடந்த 1960-இல் விருதுநகர் தொகுதிக்கு  கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உலகநாதன் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். அப்போது விருதுநகர் வந்திருக்கிறேன். இசையின் மூலம் மாணவ, மாணவிகள் மேன்மை பெற வேண்டும். திரைமறைவில் இருந்து உங்களை என்னால் சிரிக்கவும், அழ வைக்கவும் முடியும் என்றார்.
 இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 
காதல், குடும்பம் உள்பட பல்வேறு படங்களுக்கு இசை அமைத்த உங்களுக்கு எந்த படம் இசை அமைப்பதில் சிரமமாக இருந்தது என்ற கேள்விக்கு, எந்தப் படத்திலும் இல்லை, இசை என்பது எனது உடலில், ஆன்மாவில் ஊறி கிடக்கிறது. 
மூளையை போட்டு கசக்கினால் இசை வராது. இசையில் பிடித்த இசை, பிடிக்காத இசை என இரண்டு மட்டுமே உள்ளது. அதில் நல்ல இசை, கெட்ட இசை என எதுவும் இல்லை. 
இசைக்கு என இருந்த நூல்கள் அழிந்துவிட்டதால், இளையராஜா இசைக்காக ஒரு நூல் எழுத வேண்டும் என ஒரு மாணவி கேட்ட கேள்விக்கு, உளியின் ஓசை என்ற படத்தில் இசைக்கென உள்ள நூல்கள் குறித்து பேசியுள்ளேன். 
என்னிடம் இசையை பற்றி பேசக்கூடிய அளவிற்கு இதுவரை நான் யாரையும் சந்திக்கவில்லை. இதை அகம்பாவம், கர்வத்தோடு கூறுவதாக நினைத்து விடாதீர்கள். 
இசையை படித்து யாராவது மாமேதையானவர்கள் உள்ளார்களா, ராகங்களை பாடலாக பாட முடியும். புத்தகங்களாக வெளியிட முடியாது என்றார்.
முன்னதாக கல்லூரிப் பேராசிரியர் ஜெயக்குமார் வரவேற்றார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

More from the section

ஒரு கோடி சாலைப் பணியாளர்கள்: திமுக தேர்தல் அறிக்கை
ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக தேர்தல் அறிக்கை
பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: ஏப்.19-இல் தேர்வு முடிவுகள்
முதல் நாளில் 22 பேர் வேட்பு மனு தாக்கல்
கொத்தடிமை தொழிலாளர் மீட்புப் பணி: வாகனம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி