புதன்கிழமை 20 மார்ச் 2019

பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு

DIN | Published: 22nd February 2019 08:20 PM


நெல்லை பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

நெல்லை மாவட்டம் வரகனூரில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக, இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், 

"திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் வட்டம்,  வரகனூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பட்டாசு தொழிற்சாலையில் இன்று (22.2.2019) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தத் தகவல் கிடைக்கப்பெற்றவுடன், தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கவும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிருவாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். 

எனது உத்தரவின் பேரில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடினர் நலத் துறை அமைச்சர் வி. எம். ராஜலெட்சுமி, மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், தீயணைப்புத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் ஆறு நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க திருநெல்வேலி மாவட்ட நிருவாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். 

இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/-ரூபாயும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

More from the section

ஒரு கோடி சாலைப் பணியாளர்கள்: திமுக தேர்தல் அறிக்கை
ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக தேர்தல் அறிக்கை
பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: ஏப்.19-இல் தேர்வு முடிவுகள்
முதல் நாளில் 22 பேர் வேட்பு மனு தாக்கல்
கொத்தடிமை தொழிலாளர் மீட்புப் பணி: வாகனம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி