புதன்கிழமை 20 மார்ச் 2019

ரஃபேல் தீர்ப்பு: பிப்ரவரி 26-இல் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை

DIN | Published: 22nd February 2019 09:37 PM


ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுஆய்வு மனுக்கள் பிப்ரவரி 26-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக அந்நாட்டுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ரூ.58,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் செளரி, வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். 

அவற்றை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே. கௌல், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கி அமர்வு , "ரஃபேல் போர் விமானக் கொள்முதல்  நடவடிக்கைகளில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. கொள்முதல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிடுவதற்கான அவசியம் ஏற்படவில்லை" என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கி, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்திருந்தது.

உச்சநீதிமன்றத்தின் அந்த தீர்ப்புக்கு எதிராக 4 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதை விசாரணைக்காக பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், இந்த மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

முன்னதாக, வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் இந்த மறுஆய்வு மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என நேற்று தெரிவித்திருந்தார். அதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, "ரஃபேல் விவகாரம் தொடர்பாக 4 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் பிழைகள் காரணமாக ஒரு மனு நீதிமன்ற பதிவாளரிடம் உள்ளது. அந்த மனுக்களை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. அது சற்று கடினமான பணியாகும். அந்த மனுக்களை விசாரணைக்காக பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்திருந்தது.

More from the section

ஒரு கோடி சாலைப் பணியாளர்கள்: திமுக தேர்தல் அறிக்கை
ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக தேர்தல் அறிக்கை
பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: ஏப்.19-இல் தேர்வு முடிவுகள்
முதல் நாளில் 22 பேர் வேட்பு மனு தாக்கல்
கொத்தடிமை தொழிலாளர் மீட்புப் பணி: வாகனம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி