சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

ஆடுதுறை 53 புதிய நெல் ரகம் அறிமுகம்

DIN | Published: 19th January 2019 01:04 AM


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை நெல் ஆய்வு நிலையத்தில் ஆடுதுறை 53 (ஏடிடீ 53) என்ற புதிய நெல் ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்நிலையத்தின் இயக்குநர் வெ. ரவி தெரிவித்திருப்பது:
இந்நிலையம், ஆடுதுறை 53 என்ற புதிய நெல் ரகத்தை விவசாயிகள் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளது. இது, 105 முதல் 110 நாள்கள் வயதுடைய குறுகிய கால நெல் ரகம். காவிரி பாசனப் பகுதிகள் மட்டுமல்லாமல், அனைத்து நெல் பயிரிடப்படும் பகுதிகளுக்கும் குறுவை மற்றும் கோடை பருவங்களில் பயிரிட ஏற்ற உயர் விளைச்சல் ரகம் இது. ஆற்றில் தண்ணீர் தாமதமாகத் திறந்துவிடும் சூழலில் அக்டோபர் மாதத்துக்குப் பின்னர் பயிரிடுவதற்கு ஏற்ற ரகம். இது, கடந்த 20 ஆண்டுகளாக விவசாயிகளிடையே பிரபலமாகப் பயிரிடப்படும் ஆடுதுறை 43 (ஏடிடீ 43)-ஐ விட கூடுதல் தரமும், மில் அரைவைத் திறனும்,  உயர் விளைச்சல் திறனும் கொண்டது.
இந்தப் புதிய நெல் ரகமானது, ஏடிடீ 43 மற்றும் ஜெஜிஎல் 384 கலப்பிலிருந்து வம்சாவளித் தேர்வு மூலம் உருவாக்கப்பட்டது. இந்த ரகம் 105 - 110 நாள்களில் சராசரியாக ஹெக்டேருக்கு 6,334 கிலோ மகசூலும், அதிகபட்ச மகசூலாக ஹெக்டேருக்கு 9,875 கிலோ மகசூலும் தர வல்லது. மேலும், கச்சிதமான செடி அமைப்பும், மிதமான கச்சித அமைப்புடைய அடர்ந்த கதிர்களையும், நெருக்கமான நெல் மணிகளையும் கொண்டது.  
இந்த ரகத்தில் 1,000 நெல் மணிகளின் எடை 14.5 கிராம் இருக்கும். சன்ன ரக வெள்ளை அரிசி அதிக அரைவைத்திறன் (62 சதவீதம்), முழு அரிசி காணும் திறன் (65 சதவீதம்), சிறந்த உமி நிறம் கொண்டது. உயர் துத்தநாகம் (26.06 பிபிஎம்) மற்றும் இரும்புச்சத்து (14.70 பிபிஎம்) கொண்ட இந்த ரகத்தில் சமையல் செய்யப்பட்ட அரிசி வெண்மை நிறமாகவும், நடுத்தர அமைலோஸ் மற்றும் குறைந்த ஒட்டும் தன்மை உடையதாகவும் உள்ளது.
மேலும், தண்டுத் துளைப்பான்,  இலை மடக்குப்புழு, குலை நோய்,  இலை உறை அழுகல், செம்புள்ளி நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறனும் கொண்டது.
 

More from the section

திமுக கூட்டணி வெற்றி பெற்றால் கல்விக் கடன், விவசாயக் கடன்கள் ரத்து: ஸ்டாலின் உறுதி
மக்களவை தேர்தலில் போட்டியிட வரும் 25ம் தேதி முதல் விருப்பமனு விநியோகம்: திமுக அறிவிப்பு
ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை வேலை வேண்டுமா? 
மக்களவைத் தேர்தல் நேரத்தில் கொஞ்சம் இதைப் பற்றியும் பேசலாமா?
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழிசை சௌந்தரராஜன் சந்திப்பு