சனிக்கிழமை 20 ஜூலை 2019

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விமானக் கட்டணச் சலுகை: சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் அறிவிப்பு

DIN | Published: 11th July 2019 12:41 AM


சிங்கப்பூருக்கு சுற்றுலா மேற்கொள்ளும் இந்திய பயணிகளுக்கு விமானக் கட்டணத்தில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் விதமாக அந்நாட்டு சுற்றுலா வாரியம் சார்பில் மதுரையில் புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பிராந்திய இயக்குநர் ஜி.பி.ஸ்ரீதர்,  தெற்காசிய இயக்குநர் ஆதிரியன் கோங் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: 

இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் ஐதராபாத், திருவனந்தபுரம், மதுரை, கொல்கத்தா, ராஜ்கோட், குவாஹத்தி, நாக்பூர், ஜலந்தர் ஆகிய 8 நகரங்களில் சுற்றுலா தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 

இந்நிகழ்ச்சிகளில் சிங்கப்பூரில் ஏற்கெனவே உள்ள சுற்றுலா தலங்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படுவதோடு, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா தலங்களான ஜூவல் சாங்கி விமான நிலையம், ரெயின் பாரஸ்ட், லூமினா ஆகியவை குறித்தும் விவரிக்கப்படுகிறது. மேலும் சிங்கப்பூரில் விரைவில் நடைபெற உள்ள உணவுத் திருவிழா குறித்து விவரங்களும் அளிக்கப்படுகிறது. 
சிங்கப்பூருக்கு கடந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து 14.40 லட்சம் பேர் சுற்றுலா சென்றுள்ளனர். சிங்கப்பூருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது. சிங்கப்பூருக்கு கப்பல் மூலம் பயணம் மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலிலும் இந்தியா இடம் பெற்றுள்ளது.

இதனால், இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான பட்ஜெட் சுற்றுலாத் திட்டங்கள், குறுகிய கால சுற்றுலாத் திட்டங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 நாள்களுக்கான சுற்றுலாவைக் கூட மேற்கொள்ள முடியும். சுற்றுலாத் தலங்களில் இரவு நேர பயணங்கள், நீர்வழிப் பயணங்கள், சாகச பயணங்கள் ஆகியவையும் உருவாக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து சுற்றுலா ஆல்பமும் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்திய சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக, சிங்கப்பூருக்கு சுற்றுலா மேற்கொள்ளும் இந்திய பயணிகளுக்கு ஸ்கூட், சில்க் ஏர் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்கள் விமானக்கட்டணத்தில் சலுகையை அறிவித்துள்ளன. இந்த சலுகைகள் ஜூலை 8-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கட்டண சலுகையை அறிந்துகொள்ள விரும்பும் சுற்றுலாப் பயணிகள் விமான நிறுவனங்களின் இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிங்கப்பூருக்கு சுற்றுலா மேற்கொள்ளும் இந்திய பயணிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தருவதற்கு சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்றார்.   

More from the section

அரசு விழாக்களில் எம்.எல்.ஏ.க்களை அழைக்க வேண்டும்: பேரவைத் தலைவர்
10, 11, 12-ஆம்  வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்களும் தமிழில் வெளியிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
ஆண்டாள் கிளியுடன் நீலப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்
தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை அதிகரித்துள்ளது கர்நாடகா