சனிக்கிழமை 20 ஜூலை 2019

தமிழகத்தைச் சாராத ஒரு மாணவர்கூட மருத்துவ இடம் பெற முடியாது: விஜயபாஸ்கர்

DIN | Published: 11th July 2019 01:35 AM


தமிழகத்தைச் சாராத வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவருக்குக் கூட மருத்துவ இடம் கொடுக்க மாட்டோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சட்டபேரவையில் புதன்கிழமை திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவ இடம் ஒதுக்கப்படுவதாகக் கூறி அரசின் கவனத்தை ஈர்த்துப் பேசினார்.
அதற்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த விளக்கம்:
மருத்துவக் கலந்தாய்வின்போது வெளி மாநிலத்தவர்களுக்கு இடத்தை ஒதுக்காதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று திமுக உறுப்பினர் கூறினார். அது நல்ல கருத்து. தமிழக அரசும் அதில் உறுதியாக இருக்கிறது. இருப்பிடச் சான்றிதழை மாற்றிக் கொடுத்து சேர்ந்து விடுவதாக கடந்த ஆண்டுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்தது உண்மைதான். அதுபோல், இப்போது நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. கண்கொத்தி பாம்பாக முழுமையாக கவனித்து வருகிறோம். 
இந்த ஆண்டு  மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீடுக்காக 35, 013 விண்ணப்பங்கள் வந்திருந்தன. இதில், 3,616 விண்ணப்பங்கள் இருப்பிடச் சான்றிதழ் விவகாரத்தால் நிராகரிக்கப்பட்டுவிட்டன. அதனால், தமிழகத்தைச் சாராத வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஒருவர் கூட மருத்துவ இடம் பெற முடியாது. இதைக் கண்காணிப்பதற்காகவே தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களின் ஜாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவற்றைப் பெற்றுதான் பரிசீலிக்கிறோம். அதுபோல, மாணவர்களிடம் சுயசான்று ஒப்பம் ஒன்றும் கேட்டு பெறுகிறோம். 
அதில், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவை குறித்து அளிக்கும் தகவல் உண்மையானவைதான். அப்படி இல்லாவிட்டால், என் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம்' என்று அதில் குறிப்பிட்டு வாங்குகிறோம். மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைத்து மருத்துவக் கல்லூரியில் சேரும்போது இதுபோன்று சுயசான்று ஒப்பம் பெறுகிறோம். அதனால், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவ இடம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றார். 

More from the section

கோதாவரி - காவிரியை இணைக்க, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
நீட் வந்த பிறகு அகரம் மூலமாக ஒரு அரசுப் பள்ளி மாணவரைக் கூட மருத்துவராக்க முடியவில்லை: சூர்யா வேதனை!
நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு
விடுதலை வீரர் அர்த்தநாரீச வர்மாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்
அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்துக்கு ஏற்றதல்ல: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் ஸ்டாலின்