சனிக்கிழமை 20 ஜூலை 2019

மருத்துவப் படிப்பு: தரவரிசை பட்டியலில் இருந்து 2 பேர் நீக்கம்

DIN | Published: 11th July 2019 02:22 AM


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இரண்டு மாநிலங்களில் விண்ணப்பித்த 2 மாணவர்களின் பெயர்கள் தரவரிசைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 
மேலும், இவ்வாறு இருவேறு இடங்களில் விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களைக் கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் நடைபெற்றது. அதில், மொத்தம்  59,756 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழு தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து அவை பரிசீலனை செய்யப்பட்டு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 11,741 மாணவர்கள், 19,612 மாணவிகள் என மொத்தம் 31,353 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.  நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலில் 9,366 மாணவர்கள், 16,285 மாணவிகள் என மொத்தம் 25,651 பேருக்கு தரவரிசைகள் வழங்கப்பட்டிருந்தன.
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வரும் நிலையில், தரவரிசைப் பட்டியலில் 218 வெளிமாநிலத்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது. மேலும், அவர்கள் இரு மாநிலங்களில் விண்ணப்பித்திருப்பதாகவும் கூறப்பட்டது.
அவர்களில் 77 பேரின் பெயர்கள் ஆந்திர மாநில தரவரிசைப் பட்டியலிலும், 130 பேரின் பெயர்கள் கர்நாடக மாநில தரவரிசைப் பட்டியலிலும், 12 பேரின் பெயர்கள் தெலங்கானா மாநில தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலியாக இருப்பிடச் சான்று பெற்று 2 மாநிலங்களில் விண்ணப்பித்தவர்களை கண்டுபிடிக்கும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஸ்ரீகாந்த், குப்பள நாக சாய் தேஜஸ்வர் ஆகிய இரு மாணவர்களின் பூர்விகச் சான்றில் குளறுபடி இருப்பது கண்டறியப்பட்டு அவர்களது பெயர்கள் தமிழக தரவரிசைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ கூறியதாவது:
கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவிகளின் இருப்பிடச் சான்று, ஜாதி சான்று உள்பட பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன. எவரேனும், வேறு மாநிலத்திலும் விண்ணப்பித்திருப்பது தெரியவந்தால் அவருடைய பெயர் தமிழக தரவரிசைப் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்கப்படும். அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களில் வெளிமாநிலத்தவர் எவரும் பயனடையாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
 

More from the section

குமரி மாவ‌ட்ட‌த்தி‌ல் சூறை‌க் கா‌ற்றுட‌ன் மழை: 20 ஆயிர‌ம் வாழைமர‌ங்க‌ள் சேத‌ம்: மி‌ன்சார‌ம் து‌ண்டி‌ப்பு
பா‌ம்ப‌ன் மீன‌வ‌ர் வலையி‌ல் சிக்கிய 13.5 கிலோ அரிய வகை ப‌ஞ்சு கலவா‌ய் மீ‌ன்
கு‌ற்றால‌ம் அருவிகளி‌ல் வெ‌ள்ள‌ப்பெரு‌க்கு: பேரருவி, ஐ‌ந்தருவியி‌ல் குளி‌க்க‌த் தடை
கீழடி அகழா‌ய்வி‌ல் கூடுதலாக பழ‌ங்கால சுவ‌ர் க‌ண்டுபிடி‌ப்பு
அரசு விழாக்களில் எம்.எல்.ஏ.க்களை அழைக்க வேண்டும்: பேரவைத் தலைவர்