சனிக்கிழமை 20 ஜூலை 2019

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை:பி.சி., ஓ.சி. பிரிவு இடங்கள் முழுவதும் நிரம்பின

DIN | Published: 12th July 2019 01:34 AM


 எம்பிபிஎஸ் படிப்பில் பொதுப் பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முழுமையாக நிரம்பிவிட்டன. அதேபோன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும் நிரம்பியுள்ளன.
இதனால், பி.சி, ஓ.சி. வகுப்பினருக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இனி இல்லை என்றும், அடுத்து வரும் நாள்களில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட அந்த வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவதாகவும் மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
அதேவேளையில், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான பிடிஎஸ் இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. அந்த இடங்களைத் தேர்வு செய்ய விரும்பும் பி.சி., ஓ.சி. வகுப்பினர் மட்டும் கலந்தாய்வில் பங்கேற்குமாறு தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டுக்கென 3,968 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோன்று பல் மருத்துவக்கான பிடிஎஸ் படிப்புகளுக்கு 1,070 இடங்கள் உள்ளன.
நிர்வாக ஒதுக்கீட்டை எடுத்துக் கொண்டால் தனியார் கல்லூரிகளில் மொத்தம் 
852 எம்பிபிஎஸ் இடங்களும், 690 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. 
பொதுக் கலந்தாய்வு தொடங்கிய மூன்று நாள்களில் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார், கோவை, வேலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கரூர், பெருந்துறை ஐஆர்டி உள்பட 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள பி.சி, ஓ.சி, இடங்கள் முழுவதும் நிரம்பின.
அதேபோன்று சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்களும் நிரம்பியுள்ளன. 
எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் மட்டுமே ஒரு சில இடங்கள் அங்கு உள்ளன. 
தற்போது தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமே காலியாக இருக்கின்றன. இந்தச் சூழலில்தான், மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு செயலர் செல்வராஜ் அதுதொடர்பான அறிவிப்பு ஒன்றை வியாழக்கிழமை வெளியிட்டார்.
பி.சி., ஓ.சி. வகுப்பு மாணவர்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பிடிஎஸ் படிப்புகளில் சேர விரும்புவோர் மட்டும் இனிவரும் நாள்களில் 
கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
 

More from the section

எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு: முதல்வர் அறிவிப்பு
கோதாவரி - காவிரியை இணைக்க, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
நீட் வந்த பிறகு அகரம் மூலமாக ஒரு அரசுப் பள்ளி மாணவரைக் கூட மருத்துவராக்க முடியவில்லை: சூர்யா வேதனை!
நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு
விடுதலை வீரர் அர்த்தநாரீச வர்மாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்