சனிக்கிழமை 20 ஜூலை 2019

குரூப் 3, 4 தேர்வுகள் மூலம் அரசு பணியாளர்கள் தேர்வு: கல்வித்தகுதியை 12 வாரங்களுக்குள் நிர்ணயம் செய்ய உத்தரவு

DIN | Published: 12th July 2019 02:21 AM


குரூப் 3, குரூப் 4 போன்ற தேர்வுகளின் மூலம் அடிப்படை அரசு பணியாளர்களைத் தேர்வு செய்வதில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித்தகுதியை 12 வாரங்களுக்குள் நிர்ணயம் செய்ய தமிழக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பொறியியல் பட்டதாரியான சக்கரைச்சாமி என்பவர் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வருவாய்த்துறை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2009 -ஆம் ஆண்டு வெளியிட்டது. நான் பொறியியல் பட்டப்படிப்பு (பி.இ.) முடித்திருந்த நிலையில், அதற்கு விண்ணப்பித்து எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றும்,  பி.இ. கூடுதல் கல்வித்தகுதி எனக் கூறி என்னை நிராகரித்து விட்டனர். எனவே என்னை நிராகரித்தது செல்லாது எனவும், எனக்கு வருவாய்த்துறையில் உதவியாளர் பணி வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு: 
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பெரும்பாலான பட்டதாரிகள் குரூப் 4 உள்ளிட்ட அடிப்படை அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். இவர்கள் கூடுதல் கல்வித்தகுதி உடையவர்களாய் இருக்கும் நிலையில், பணிக்குத் தேர்வான பின், அவர்கள் முறையாகப் பணியாற்றுவதில்லை. கூடுதல் கல்வித்தகுதி என்பதால் அவர்களிடம் வேலை வாங்குவதில் அதிகாரிகளும் சிரமத்தைச் சந்திக்கிறார்கள். இதுபோன்ற சூழல் உயர்நீதிமன்றங்களிலும் உள்ளது.
இரண்டாம் நிலை காவலர்களாகவும் பட்டதாரிகள் தேர்வாகின்றனர். அவ்வாறு தேர்வாகும் கூடுதல் கல்வித்தகுதி உடையோர், வேலை நேரம் உள்பட எப்போதும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதிலேயே முனைப்புக் காட்டுகின்றனர். இதனால் அவர்கள் பணிகளை  முறையாகச் செய்வதில்லை. எனவே இந்த வழக்கை பொருத்தவரை மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மேலும் தமிழக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மை செயலர் குரூப் 3, குரூப் 4 போன்ற அடிப்படை அரசு பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான வழிமுறைகளை மறுபரிசீலனை செய்து, குறைந்தபட்சக் கல்வித்தகுதி மற்றும் அதிகபட்சக் கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும். 
இதன் மூலம் தகுதியுடையவர்கள் பொதுத்துறைகளில் தேர்வாக வாய்ப்பாக அமையும். 
எனவே இதுகுறித்து 12 வாரங்களில் தமிழக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை முதன்மை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
 

More from the section

அரசு விழாக்களில் எம்.எல்.ஏ.க்களை அழைக்க வேண்டும்: பேரவைத் தலைவர்
10, 11, 12-ஆம்  வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்களும் தமிழில் வெளியிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
ஆண்டாள் கிளியுடன் நீலப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்
தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை அதிகரித்துள்ளது கர்நாடகா