புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

நடிகர்கள் கட்சி தொடங்கிய பிறகு தேர்தலில் போட்டியிடுவதில் தவறு இல்லை: இல.கணேசன்

By ஈரோடு| DIN | Published: 19th March 2019 07:58 AM

நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு தேர்தலில் போட்டியிடுவதில் தவறு இல்லை என்று  பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.  

ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் எங்களது கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பதுதான் எங்களின் இலக்கு. 2014 தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக கட்சிகள்தான் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

இந்தத் தேர்தலில் இந்த மூன்று கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து இருப்பது கூடுதல் பலம்.  மோடியின் 5 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கூறி வாக்கு கேட்போம். கடந்த 5 ஆண்டுகளில் இளைஞர்கள் வேலை அளிப்பவர்களாக உயர்ந்துள்ளனர். முத்ரா திட்டம் மூலம் பெண்கள் பலர் தொழில் முனைவோர் ஆகியுள்ளனர். தொழிற்சாலைகளைத் தொடங்க எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள் தான் வேலைவாய்ப்பே இல்லை எனக் கூறுகின்றன.  

திமுக கூட்டணி பலவீனமானது. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, அவர்களது ஆட்சிக் காலத்தில் செய்ய முடியாத பல சாதனைகளை பாஜக அரசு செய்துள்ளது.   ஊழல் கட்சிகளான திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி சேர்ந்திருப்பது பொருத்தமானதுதான். இவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். பொள்ளாச்சி விவகாரம் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை. அதிமுக பிராந்திய கட்சி என்பதாக இருந்தாலும், தேசியத் தன்மை உள்ள கட்சி என்பதை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் நிரூபித்துள்ளனர். 

தேர்தல் ஆணையக் கட்டுப்பாடுகள் அவசியம்தான். அதே சமயத்தில் தவறு செய்பவர்களைக் கண்டறிந்து நடவடிக்கையெடுக்க வேண்டும். தமிழகத்தில் நடிகர்கள், நடிகர்களாக மட்டுமே இருந்துகொண்டு தேர்தலில் போட்டியிடவில்லை. அரசியல் கட்சியைத் தொடங்கிதான் போட்டியிடுகிறார்கள். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்றார்.  ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கு என்ற ஜி.மணிமாறன், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், எம்எல்ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் இல.கணேசன் மற்றும் பாஜக நிர்வாகிகளை சந்தித்துப் பேசினர்.

More from the section

கோவையில் பலாத்காரக் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு
பச்சையப்பன் கல்லூரி முதல்வர் என். சேட்டு நியமனத்தை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
புயல் தமிழகத்தில் கரையைக் கடக்குமா? கரையை ஒட்டிச் செல்லுமா? ஓரிரு நாளில் தெரியும்!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: போலீஸ் கேட்ட விவரங்களை வெளியிட வாட்ஸ்ஆப் மறுப்பு
குமரி: கோதையாறு நீர் மின்நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் தற்கொலை