வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

சிலை திருட்டு வழக்கு டி.எஸ்.பி. காதர் பாட்சா கைது

DIN | Published: 23rd March 2019 01:33 AM


திருநெல்வேலி மாவட்டம், பழவூர் நாறும்பூநாதர் சிவன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு சம்பவம் தொடர்பான வழக்கில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் காதர்பாட்சா (59)  வெள்ளிக்கிழமை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலி மாவட்டம், பழுவூர் நாறும்பூநாதர் சிவன் கோயிலில் நடராஜர் சிலை காணாமல் போனது. இந்த வழக்கை அப்போது காவல் ஆய்வாளராக இருந்த காதர்பாட்சா விசாரித்து, அந்த வழக்கில் தொடர்பு இல்லாத 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தார். 
இந்த வழக்கு தற்போது கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 
  நாறும்பூநாதர் கோயில் நடராஜர் சிலை கொல்கத்தாவில் உள்ள சுங்க வரி அலுவலகத்தில் இருப்பது தெரியவந்தது. அங்குள்ள அலுவலர்கள், தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அந்த சிலை குறித்த தகவல் அளித்தனர். இதையடுத்து,  சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கொல்கத்தா சென்று, அந்த சிலை யாருக்கு வந்தது, அதன் பின்னணி குறித்து விசாரித்த போது, காவல் துணைக் கண்காணிப்பாளர் காதர்பாட்சா மூலம் வந்தது உறுதியானது. இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார்,  காதர்பாட்சாவை  வியாழக்கிழமை நள்ளிரவில் கைது செய்தனர். 
வெள்ளிக்கிழமை காலை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து காதர்பாட்சாவை 5 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அய்யப்பன்பிள்ளை உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் காதர்பாட்சா அடைக்கப்பட்டார். 

More from the section

முதுகுளத்தூரில் இறந்ததாகக் கூறப்பட்டவர் வாக்களிக்க வந்ததால் பரபரப்பு
ராஜபாளையத்தில் பெரியார் சிலை மீது காவி வண்ணம் பூசியதால் பதற்றம்
மக்களவைத் தேர்தல் எதிரொலி: வெறிச்சோடியது குமரி
பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
தமிழகத்தில் 71% வாக்குப்பதிவு: இயந்திரங்கள் பழுதால் சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்