சனிக்கிழமை 19 ஜனவரி 2019

தொல்லியல் சிறப்புக் கட்டுரை: காவேரிப்பட்டிணம் நாட்டியத்தாரகை சதிக்கல்

By த. பார்த்திபன்| Published: 15th August 2018 01:03 PM

 

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணத்தில் தேர்ப்பட்டி (தபோவனம்) என்ற இடத்தில் செயல்பட்டு வரும் இராஜராஜேசுவரி மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் ஒரு மரத்தடியில் சாய்த்து வைக்கப்பட்டுள்ள நடுகல் இது. இந்த நடுகல் படம் மண்ணில் சாய்ந்துள்ள நிலையில் ஓராண்டுக்கு முன்னரே சமூக வலைதளங்களில் பதிவேற்றம் கண்டது. இதனை முதலில் பதிவேற்றியவர் யாரெனத் தெரியவில்லை. அண்மையில் திரு. எஸ். விஸ்வபாரதி, உதவிப் பேராசிரியர், அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி அவர்களின் துணையுடன் இக்கல்லைப் பார்க்க நேர்ந்தது.

காவேரிப்பட்டணம், நாட்டியத்தாரகை சதிக்கல்

நடுகல் சிற்பங்களில் இந்நாள்வரை அறிந்த காட்சிகளில் இருந்து மாறுபட்ட உடை, பொருள்கள், சதிமுத்திரைச் சித்தரிப்புகளால் இக்கல் தனித்துவம் பெற்றுள்ளது. இத்தனித்துவத்தை அடையாளப்படுத்தும் முகமாக ‘‘காவேரிப்பட்டிணம் நாட்டியத்தாரகை சதிக்கல்’’ எனப் பெயர் சூட்டி அழைக்கின்றேன். இக்கல்லின் காலம் 17-ஆம் நூற்றாண்டின் மத்தியக் காலம். இக்காலகட்டத்துக்கு முன்னும் பின்னுமாக சுமார் 175 ஆண்டுகாலம் பாராமகாலில் ஏற்பட்ட சமூக, அரசியல் மாற்றங்களை நாம் கணக்கில் கொள்ளத் தவறினால், கல்வெட்டுப் பொறிப்பு இல்லாத இக்கல்லின் சித்தரிப்பின் உள்ளார்ந்த பொருளை உள்வாங்கிக்கொள்வதில் தடைகளும் தவறுகளும் நேரலாம். ஏனெனில் இக்காலகட்டத்தில் இப்பகுதி ஜெகதேவராயர்கள், மைசூர் உடையார்கள், மராட்டியர்கள், டெக்கான் சுல்தான்கள், கடப்பா நவாப்புகள் எனப் பலரது ஆட்சிக்கு ஆட்பட்டு அரசியல் அலைக்கலைப்புகளுக்கு உட்பட்டது மட்டுமல்லாது, பண்பாட்டுத்தளத்திலும் பெரும் மாற்றங்களை அடைந்தது. (பார்க்க அடிக்குறிப்பு 1: 16-17-ஆம் நூற்றாண்டுகளில் ஜெகதேவிபாளையம்சென்னப்பட்னா - பாராமகால்).

நாட்டியத்தாரகை சதிக்கல்

நடுகல்லின் பலகைக் கல்லில் கரடு கட்டப்பட்ட பகுதிக்கு உள்ளடங்கியவாறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கரடின் இடது, வலது மேல் மூலைகளில் மலர்க்கொத்து தொங்குகிறது. வலமிருந்து இடமாக நாட்டியத்தாரகை, மதுக்குடம், தலைவன், ஹூக்கா ஆகிய உருவங்கள் செதுக்கிக் காட்டப்பட்டுள்ளன.

நாட்டியத்தாரகையின் உருவம், உடை அணிமணிகள் ஒரு முழுமையான தமிழகப் பண்பாட்டினை வெளிப்படுத்துகிறது. ஆனால் அவளது கணவனின் உருவம் ஒரு மராட்டிய, அரேபிய மணத்தை அணிந்துகொண்டுள்ளது. மேலோட்டமான அல்லது கவனக்குறைவான அணுகல் இவனை ஒரு ஐரோப்பியன், அல்லது முகமதியன் என்று கூறவைக்கும். இவனது தலையலங்காரத் தொப்பி, நீண்ட அங்கி உடை அலங்காரம் இந்த மயக்கத்தைத் தந்துவிடும். இவனுக்கு அருகில் இடதுபுறத்தில் காட்டப்படும் ஹூக்கா என்ற புகைக்கும் கருவி இதற்கு வலு சேர்ப்பதாகவும் அமையும்.

ஒரு பண்பாட்டுச் செய்தியை மட்டும் நினைவில் இருத்திக் கொள்வோம். ஐரோப்பியர்களுக்கும், முகமதியர்களுக்கும் நடுகற்கள் எழுப்பும் மரபு இருந்ததில்லை. அவர்கள் பெண்டீர் சதிக்கு தங்களை உட்படுத்தி மரணத்தை தழுவிக்கொண்டதில்லை.

ஹூக்காவும் சமூக உயர்மதிப்பும்

ஹூக்கா புகைக்கும் கருவி

ஐரோப்பியர்கள் புகையிலை புகைப்பதை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஹூக்கா வழக்குக்கு வந்தது எனக் கருதப்படுகிறது. தண்ணீரால் கடத்தப்பட்டு குளிரான புகையிலைப் புகையைப் புகைக்க உதவும் கருவியே ஹூக்கா. பீஜப்பூரின் தூதர் ஹூக்காவை அக்பர் (பொ.ஆ.1542-1605 / ஆ.யா.1556-1605) பயன்படுத்த ஊக்குவித்தார் என படித்த குறிப்பு நினைவு வருகிறது. இக்காலகட்டத்தைத் தொடர்ந்து ஹூக்கா புகைப்பது, இந்திய மேல்தட்டு மக்களிடையே பிரபலமைடையத் துவங்கியது. மரியாதைக்குரியவர்கள் பயன்படுத்தியதால் பிரபலமடைந்த இக்கருவி, இந்தியாவின் உயர்மட்டக்குடியினர், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரம்மிக்க அரசியலாளர்களால் புகைப்பதற்கான சின்னம் என்ற அடையாளத்தை வெகுவிரைவில் அடைந்தது.

மதுக்குடம்

நடுகற்களில் மதுக்குடம் இடம்பெறுவது பற்றி பல கருத்துகள் உண்டு. படையல் பொருள் என்பதும் உயிர்க்குறியீடு என்பதும் பரவலாக அறியப்படும் கருத்துகள். பிற கருத்துகளைக் கவனத்தில் கொள்வதால் பெருகும் என்பதால் தொடராமல் விடப்படுகிறது.

தலைவன்

சிற்பக்காட்சியில் தலைவனின் வலது கரம் உயர்த்திப்பிடித்தபடி உள்ளது. இடது கரம் கேடயத்தை பிடித்தபடி உள்ளது. கேடயத்தின் வடிவமைப்பை சிறப்பிக்கும் விதமாக கேடயத்தின் அடிப்புறம் காட்டப்பட்டுள்ளது. இதில் இரு பிடி வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் பிடி வழியாக கையின் மணிக்கட்டுவரை நுழைத்து இரண்டாவதாக உள்ள பிடியை விரல்களால் பிடித்துக்கொள்ளும்படி அமைப்பட்டுள்ளது. இவ்வமைப்பு, விரல்களில் இருந்து கேடயம் விடுபட்டாலும் கரத்தில் இருந்து நழுவுவதை தவிர்க்கிறது.

தலைவனின் தலையில் தொப்பி அணிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தலையலங்காரச் சிறப்பை அறியமுடியவில்லை. கழுத்தில் இருந்து கணுக்காலுக்குச் சற்று மேல்வரை இறக்கமாக உள்ள அங்கியை அணிந்துள்ளான். இது அரேபியர் உடையின் வடிவமைப்பில் உள்ளது. மராட்டியர் உடையலங்காரத்திலும் இவ்வடிவமைப்பைக் காண முடியும். ஆனால் இது பாதிரியார்களின் நீளூடையில் (cassock) இருந்து வடிவமைப்பில் மாறுபட்டது. பட்டையான இடைவார்களால் அங்கி இடுப்புப் பகுதியில் இறுக்கிக் கட்டப்பட்டுள்ளது. அதில் குத்துவாள் செருகப்பட்டுள்ளது. முழுக்கையுடன் நேர்த்தியான எடுப்பான கழுத்துப்பட்டையுடன் வடிவமைக்கப்பட்ட உடை அதன் உயர் மதிப்பைக் காட்டுகிறது. கால்களில் காலணி காட்டப்பட்டுள்ளது. அது குதிகால்பட்டை கொண்டுள்ளது. காதுகளில் தொங்கும் குண்டலங்கள்தாம் இவன் அரேபியனோ, ஐரோப்பியனோ, மராட்டியனோ அல்லன் என்பதை தெளிவிக்கிறது. இவனது பிற அணிமணி அலங்கரங்களை அறியமுடியவில்லை. இவை அங்கியின் உள்ளே மறைந்தன போலும்.

இவன் இப்பகுதியின் தலைவனாகவோ, செல்வமும் அதிகாரமும் மிக்க மேல்மட்டக்குடியில் பிறந்தவனாகவோ இருந்துள்ளான். அந்நியப் பண்பாட்டிலும் மோகம் கொண்டிருந்தவனாகவும் இருந்துள்ளான். உடையும், ஹூக்காவும் இதனை உறுதி செய்கின்றன. இதனுடன் இந்தியாவின், உயர்மட்டக்குடி, மற்றும் அதிகாரம்மிக்க அரசியலாளர்களால் பகட்டான வாழ்க்கையின் அடையாளங்களை உடனுக்குடன் பெறும் வசதிகளைக் கொண்டவனாகவும் இருந்துள்ளான். (அடிக்குறிப்பு 1-ல் கண்டுள்ள காலகட்டத்தோடு பொருத்திக் காணவும்).

நாட்டியத்தாரகை

இவனது மரணத்துடன், தன்னை சதிக்கு உட்படுத்திக்கொண்ட மனைவியாக செதுக்கிக் காட்டப்பட்டுள்ளவள் சிறந்த நாட்டியத்தாரகையாக காட்டப்பட்டுள்ளாள். நாட்டிய மகளிர் அணியும் பட்டாடை உடையலங்காரமும், கணுக்கால் வரை தொங்கும் நீண்ட பின்னல் வேலைப்பாடு உடைய சடைமுடி அலங்காரமும் புனைந்துள்ளாள். நாட்டிய அடவுகளோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளாள். நீண்டு தொங்கும் காதுகளில் விருத்தக் குண்டலங்களை அணிந்துள்ளாள். காதுக்கு மேல் செவிப்பூவும் காட்டப்பட்டுள்ளது. கழுத்தில் கண்டிகை, சரப்பளியுடன் மார்பில் தொங்கிப்புரளும் பெரிய ஹாரமும் அணிந்துள்ளாள். இரு கைகளிலும், முட்டியில் இருந்து, முழங்கை வரை பலவகையான வளைகள் அடுக்கடுக்காய் அணிந்துள்ளாள். நாட்டிய முத்திரை அசைவுகொண்ட வலத்து கரத்தில் கிலுகட்டை போன்ற ஒரு இசைக்கருவியை ஏந்தியுள்ளாள். இடது கரம் மடங்கி உயர்ந்து விரிந்த கரத்தைக் கட்டுகிறது. விரிந்த உள்ளங்கையில் வட்டமான சிறுஇதழ்களால் ஆன மலரைக் கொண்டுள்ளாள். இம்மலர் தங்கம் போன்ற உயர் மதிப்புடைய உலோகத்தில் செய்யப்பட்டதுபோல் உள்ளது. பொதுவில், சதிப் பெண்கள் சதி முத்திரையாக கையை விரித்துக் காட்டுவது, அல்லது கரத்தில் பூங்கொத்து, பூச்செண்டு, பூபந்து, எலுமிச்சை பழம் ஆகியவற்றில் ஒன்றினை கொண்டிருப்பர். இங்கு விரித்த கரத்தில் உள்ளங்கைக்கு அடக்கமாக மலரின் உருவத்தை காட்சிப்படுத்துகிறாள். இவ்வாறான சதி முத்திரையை இந்த ஆசிரியர் அறிவது முதல்முறையாகும். போலவே, அடவுகளில் இசைக்கருவி உள்ள காட்சியும் முதல்முறையாகப் பார்க்கமுடிகிறது. இசைக்கருவியை இசைத்தபடி நாட்டியமாடுவது இவளது தனிச்சிறப்பாக இருந்துள்ளது எனலாம்.

இசைக் கருவியும், சதி முத்திரையும்

சதிக்கல் செய்தி

‘‘காவேரிப்பட்டணம் நாட்டியத்தாரகை சதிக்கல்’’ என்று பெயரிடப்பட்டுள்ள கல்வெட்டுப் பொறிப்பற்ற இச்சதிகல்லின் சிற்ப நுணுக்கங்கள் கொண்டு பின்வரும் செய்தியை அடையமுடிகிறது. காவேரிப்பட்டிணத்தின் தலைவனாகவோ, உயர்மட்டக்குடியில் பிறந்தவனாகவோ, அதிகாரம்மிக்க அரசியலாளாகவோ இருந்த ஒரு வீரனுக்கு எடுக்கப்பட்ட சதியோடு கூடிய நடுகல் இது. இவன் இவனது சமகாலத்தில் நாட்டின் பிறபகுதிகளில் கிட்டும் பகட்டான வாழ்க்கையின் அடையாளங்களை உடனுக்குடன் பெறும் வசதிகளைக் கொண்டவனாகவும் இருந்துள்ளான். மேலும், அரேபிய, மராட்டிய அரசர்கள், மேல்மட்டத்தினரின் ஆடை முதலான பண்பாட்டைப் பின்பற்றியவனாகவும் இருந்துள்ளான். அவனது மேலாடையும், ஹூக்கா புகைக்கும் கருவியும் அவனது உயர்மட்ட, செழுமியான வாழ்வியலை அடையாளப்படுத்துவதாக உள்ளது.

இவன் இறந்தவுடன் புகழுடைய நாட்டியத்தாரகையாக இருந்த இவன் மனைவி தன்னை சதிக்கு உட்படுத்திக்கொண்டு அவனோடே தன் உயிரையும் மாய்த்துக்கொண்டிருக்கிறாள். இவள் சிறந்ததொரு நாட்டியத்தாரகையாக இருந்துள்ளதை சதி உருவத்திலும் நாட்டிய உடை அணிமணி அலங்காரம், அடவுகளைக் வெளிப்படுத்தும் உருவம் ஆகியவை கொண்டு வடிக்கப்பட்டதிலிருந்து அறியலாம். இன்று பரதநாட்டிய உடை என்ற அலங்காரமான பட்டாடையை நேர்த்தியாக அணிந்துள்ளமை கவனிக்கத்தக்க வடிவமைப்பாக உள்ளது. அக்காலத்தில் இந்நாட்டியம் சதிர் என்று அறியப்பட்டது. 17-ஆம் நூற்றாண்டின் மத்தியக் காலத்தில் இருந்து இக்காலம் வரை ஏறத்தாழ 350 ஆண்டுகளாக இந்த நாட்டிய உடையின் வடிவில் மாற்றமில்லை என்பதை இது உணர்த்துகிறது, நாட்டிய மரபில் உடை மற்றும் சடை மரபின் தொடர்ச்சி அறுபடாது பின்பற்றப்படுகிறது என்பதற்குச் சான்றாகவும் இக்கல் விளங்குகிறது.

16-17-ஆம் நூற்றாண்டுகளில் ஜெகதேவிபாளையம் - பாராமகால் பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் - சமூக மாற்றங்களைப் பிரதிபலிப்பவனாக இவன் உள்ளான். இவ்வாறான மாற்றங்களுக்கும் இக்கல் சாட்சியாகிறது. இக்கல் வெளிப்படுத்துவது குறிப்பாக மராட்டியர் பண்பாடா, முகமதியர் பண்பாடா என்ற கேள்வி எழுந்தால், உடையாலும், மேட்டுக்குடி வெளிப்பாட்டிலும் முகமதியர் பண்பாட்டை ஆணும், வாழ்வியலில் சதிக்கு உட்படுத்திக்கொள்ளும் சிந்தனை கொண்ட தமிழக, மராட்டியர் பண்பாட்டை இருவரும் கொண்டிருந்தனர் என்ற முடிவை அடையலாம்.

காவேரிப்பட்டிணம் - கலைகளின் உறைவிடம்

காவேரிப்பட்டிணம் சோழப் பேரரசுக் காலம் முதலே செல்வச் செழிப்புமிக்க இடமாக இருந்துள்ளது. பெண்ணையாறும், நல்ல விளைநிலங்களும் இதன் செழுமைக்குக் காரணமாக இருந்திருக்கும். உள்நாட்டு வணிகத்தலம் என்ற பொருளைத் தரும் பட்டணம் என்ற ஊர்ப்பெயரில் பெற்றுள்ள பின்னொட்டு, காவேரிப்பட்டிணம் சிறந்த வணிகத்தலமாக இருந்துள்ளது என்பதையும் காட்டுகிறது. காவேரிப்பட்டணம் மற்றும் காவேரிப்பட்டணத்தை அடுத்த பெண்ணேசுவரமடம் கலைகளின் உறைவிடமாக இருந்துள்ளன. கோயின் முகப்பில் நடப்பட்டுள்ள 10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வீணை வாசிக்கும் பெண்ணின் நினைவுக்கல்லும், பெண்ணையாற்றங்கரையில் இருந்து எடுத்துவரப்பட்டு தருமபுரி அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள 13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மத்தளம் வாசிக்கும் கலைஞனின் நினைவுக் கல்லும் கலைகளின் உறைவிடமாக காவேரிப்பட்டணம் இருந்துள்ளதைக் காட்டும். இப்பின்னணியில் நாயக்கர் காலம் வரை காவேரிப்பட்டிணத்தில் கலைஞர்கள் சிறப்பிடம் பெற்று இருந்துள்ளனர் என்பதை ‘‘காவேரிப்பட்டணம் நாட்டியத்தாரகை சதிகல்’’ உரத்துச் சொல்கிறது.

*

அடிக்குறிப்பு 1

16-17-ஆம் நூற்றாண்டுகளில் ஜெகதேவி பாளையம்சென்னப்பட்னா - பாராமகால்

ஜெகதேவிபாளையம் விஜயநகரப் பேரரசின் அதன் பட்டத்து இளவரசர்களால் ஆளப்பட்ட முளுபாகல் ராஜ்ஜியத்தின் சில பகுதிகள் கொண்டு 16-ஆம் நூற்றாண்டில் இறுதிக்காலங்களில் உருவான நாட்டுப்பிரிவாகும். இந்நாட்டுப் பகுதி உருவாக்கத்தில் ஜெகதேவராயர்களின் தீரத்துக்குப் பெரும் பங்கு உண்டு. டெக்கான் சுல்தான்களின் ஒருவரான பீஜப்பூர் சுல்தானை எதிர்த்த சந்திரகிரிப் போரில் விஜயநகரப் பேரரசுக்கு ஆதரவாக தீரம் காட்டியவர் முதலாம் ஜெகதேவராயர். இதற்காக பொ.ஆ.1578-ல் விஜயநகரப் பேரரசர் சீரங்கராயர் முதலாம் ஜெகதேவராயருக்குத் தன்மகளை மணமுடித்துத் தந்ததுடன், இப்பகுதி ஆளப் பரிசளிக்கப்பட்டது. பொ.ஆ.1589-ல் கோல்கொண்டாவின் குத்ஷா பேனுகொண்டா மீது படையெடுத்தபொழுது, ஜெகதேவிப்பாளையத்தை உருவாக்கிய ஜெகதேவராயரின் மகன் இரண்டாம் ஜெகதேவராயன் குத்ஷாவின் முற்றுகையை வீரத்துடன் எதிர்த்து முறியடித்ததால் இதற்குப் பரிசாகப் பெற்றதே சென்னப்பட்டனா ஜாகீர். இந்த ஜாகீர், அன்றைய மைசூர் மாநிலத்தின் பெங்களூரின் சில பகுதிகள், மைசூர், தும்கூர், ஹாசன், கோலார் மாவட்டங்களைக்  கொண்ட பகுதி ஆகும். ஜெகதேவராயர்கள் காலத்தில் இந்நாட்டுப் பிரிவு ஜெகதேவிபாளையம் என்றே அழைக்கப்பட்டது. சென்னப்பட்னா ஜாகீர் இப்பெயரிலேயே நீடித்தது. ஜெகதேவிபாளையம் தோன்றிய 91 ஆண்டுகளுக்குப் பிறகு 1669-இல் பீஜப்பூரின் தளபதியான முஸ்தபாகானுடன் இம்மரபின் கடைசி மன்னன் போரிட்டு மாய்ந்ததுடன் ஜெகதேவராயர் குடும்பத்தினரின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இப்போர் இப்பகுதியிலேயே நடந்திருக்க வேண்டும். ஏனெனில், இப்போருக்குப் பிறகு முஸ்தபாகானின் ஐந்து ஆண்டு கால குறுகிய கால ஆட்சி இங்கே நடந்தது.

இந்நிகழ்வுகளுக்கு முன்னரே சென்னப்பட்னா ஜாகீர், மைசூர் உடையார்களால் வெள்ளப்பட்டு ஜெகதேவிபாளையத்துக்குள் சுருக்கப்பட்டிருந்தனர். இதே காலகட்டத்தில் ஜெகதேவிபாளையத்தின் டென்கனிக்கோட்டை, ரத்னகிரிப் பகுதிகள் இடிபல் ராவ் என்பவரால் ஆளப்பட்டிருந்தது. இவ்வாறு சிறுசிறு பகுதிகளாகப் பிரிந்து ஜெகதேவிபாளையம் மேலும் சுருங்கியதை இடிபல் ராவ் காட்டுகிறார். மைசூர் உடையார் அரசரான கண்டீரவ நரச ராஜ 1647 மற்றும் 1652-ஆம் ஆண்டுகளில் இடிபல் ராவிடமிருந்து வெற்றிகொண்டார்.

முஸ்தபாகானுக்குப் பின்னர் இப்பகுதி 40 ஆண்டுகாலம் மராட்டிய மன்னர்களின் அதிகாரத்துக்கு உட்பட்டது. சத்ரபதி சிவாஜியின் தந்தை சாஜியின் பெங்களூர் ஜாகீரின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக இதனைக் கருதலாம். பீஜப்பூர் சுல்தான்கள் தென்பகுதியில் அதிகாரத்தை விரிவடைச் செய்ய விரும்பிய போரில் பீஜப்பூர் சார்பில் சாஜி போரிட்டார். போ.ஆ.1638-ல் மூன்றாம் கெம்பேகவுடாவை வீழ்த்தியதன் பரிசாகப் பெங்களூர் ஜாகீரை பெற்றார் சாஜி. இங்கு தம் முதல் மற்றும் இரண்டாம் மனைவியருடன் தங்கியிருக்க; மூன்றாம் மனைவியின் மகனான சிவாஜியை தனது பூர்வீக ஜாகீரான பூனா ஜாகிரைக் பரிபாலனம் செய்ய அமர்த்தினார். பெங்களூர் மராட்டியரே பின்னர் தஞ்சையை அடைந்து தஞ்சை மராட்டிய அரசை அமைத்தனர். மகாராஜ கடை கோட்டையை சிவாஜி அமைத்தால், மகாராஜ கடை அப்பேர் பெற்றது என்ற வழக்குச் செய்தியும் உண்டு. இங்கு சிவாஜியின் மோடி எழுத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் உள்ளது. மராட்டியர்களுக்குப் பின்னர் சுல்பிர்கான் என்ற முகலாயர் வசமான இப்பகுதி, அவனது எட்டு ஆண்டு ஆட்சியைக் கண்டது. அதன்பின் ஆலம்கீரின் ஆட்சிக்கு வந்தது, அவனால் இப்பகுதி கடப்பா நவாப் அப்துல் நபிக்கு சொத்தாக கொடுக்கப்பட்டது. அவன் இப்பகுதியை 30 ஆண்டுகள் ஏறத்தாழ 1754 வரை ஆட்சிபுரிந்தான். இக்காலத்தில்தான் பாராமகால் என்ற பெயர் உருவானது. பாராமகால் என்பது பன்னிரெண்டு கோடை நாடு என்ற பொருள் படும் ஒரு நாட்டுப்பிரிவாகும். இது இன்றைய தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பெரும்பகுதி மற்றும் வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் வட்டம் ஆகிய பகுதிகள் கொண்ட பகுதி. காவேரிப்பட்டிணம், பாராமகால் கோட்டைகளில் ஒன்றாக, குறிப்பாக தரைக்கோட்டைகளில் ஒன்றாக இருந்தது. ஐதர்-திப்பு காலத்தில் பாராமகால் பெயர் தொடரப்பட்டது. ஆங்கிலேயர்களும் தொடர்ந்தனர்.

இவ்வாறு காவேரிப்பட்டிணம் நாட்டியத்தாரகை சதிகல் ஜெகதேவராயர், மைசூர் அரசர்கள், மராட்டியர்கள், டெக்கான் சுல்தான்கள், கடப்பா நவாப்புகள் எனப் பலரது ஆட்சிக்கு ஆட்பட்டு அரசியல் அலைக்கழைப்புகளுக்கு உட்பட்ட பண்பாட்டுத்தளத்தில் பெரும் மாற்றங்களை அடைச் செய்த காலகட்ட வரலாற்றுக்குச் சான்றாகிறது

*

குறிப்பு

பள்ளி நிர்வாகம், சிறப்பு வாய்ந்த இந்தச் சதிக்கல்லை மரத்தடியில் பாதுகாப்பற்ற வகையில் சாய்த்து வைத்துள்ளது. இதன் சிறப்பை உணர்ந்து ஒரு மேடை அமைத்து இதனைப் பாதுகாக்க முன்வருவார்களா? இதன்மூலம் தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அப்பள்ளி மாணவர்களிடையே பெருகும். வரலாற்று மூலங்களை வழங்கும் தொல்லியல் சார்ந்த அறிவும் மாணவர்களுக்கு வசப்படும்.

- கட்டுரையாளர் . பார்த்திபன் தொடர்புக்கு thagadoorparthiban@gmail.com

Tags : தொல்லியல் நடுகல் தொல்பொருள் நாட்டியத்தாரகை காவேரிப்பட்டணம் ஹூக்கா அரேபியர் முகலாயர் மராட்டியர் பேரரசு சோழர்கள் நூற்றாண்டு

More from the section

திருவண்ணாமலை அருகே 12-ஆம் நூற்றாண்டு தூம்பு கல்வெட்டு கண்டெடுப்பு
குறிஞ்சிப்பாடி அருகே கண்டறியப்பட்ட 2,500 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழி
மூலக்கொல்லை ஓவியம் 2: பகுதி 1
5000 ஆண்டுகளுக்கு முந்தைய மூலக்கொல்லை பாறை ஓவியம்: உலகப் புகழ் பெறத்தக்கது - பாதுகாக்க வேண்டியது நமது கடமை!
நாயக்கர் கால சதி' நடுகல் கண்டெடுப்பு