செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

ஓர் ஊரின் கதை

DIN | Published: 11th September 2018 11:21 AM

தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி - 2018 சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250 பெற்ற சிறுகதை
ஊருல தெருக்கள் இருக்கும். ஆனா, ஒரு தெருவே ஊராய் இருக்குமா?
இருக்கே!
நம்பிக்குறிச்சிங்கிற ஊர், அப்படி ஒரு தெருதானே!
ஒரு காலத்துல ஓகோன்னு இருந்த ஊர். இப்ப, வெற்று அடையாளங்களோட, கட்டட மண்ணும் குட்டிச் சுவருமாக் கிடக்கு.
சோலைவனம் போலப் பூத்துச் செழிச்சிருந்த ஊராக்கும் இது!
இப்ப கரடு தட்டிப் போன காட்டுப் பகுதி மாதிரில்ல காணப்படுது.
ஓ!
எப்பேர்ப்பட்ட மனுசங்க நடமாடின மண் இது!
இங்க மொதல் வீடே தபால் பண்ணைத் தாத்தா வீடுதான். கறுப்பா இருந்தாலும் கம்பீரமா, லெட்சணமா இருப்பாங்க. வெள்ளை மீசையைக் கெத்தா முறுக்கி விட்ருப்பாக.
அவுக ஊர்வழி போறப்ப தூள் கௌப்பிருவாக. வெள்ளை வெளேர்ன்னு வேட்டி சட்டையோட அவுக கிளம்புனாகன்னா, வச்சே கண்ணை எடுக்காமல் ஊர் பார்க்கும்.
இந்த ஊருக்கே வடுகம்பட்டி செல்லையாதான் சலவை பண்றது. நம்பியாற்றுத் தண்ணியில வெளுக்கிறப்ப துளி அழுக்கு இருக்காதில்ல.
பச்சைக்கலர் பார்டர் போட்ட வெள்ளைநிறத் தேங்காய்ப்பூ டவலை ரெண்டு உதறுத் தோள் மேலே போட்டுக்கிட்டு அவுக போறதே தன் அழகுல்லா. இடது கையாலே மீசையைத் திருகி விட்டுக்கிட்டே பேசுவாக. கம்பீரமாய் இருக்கும்.
ஆனாத் தோட்டக்கார ராசிங்கனைக் கண்டுட்டாப் போறும். பேச்சோட தொனியே மாறிப் போயிடும். உருகி, உருகி வழிவாக. கால நேரம் பார்க்காமப் பனங்காட்டுக்கு ஓடிப்போயி, சுண்ணாம்பு தடவாத கள்ளப்பதனீரைக் கொண்டாந்து குடுப்பான்ல்ல.
ஆனா,
கள்ளைக் குடிச்ச அடையாளமே அவுகிட்ட இருக்காது. மத்தக் குடிகாரங்களைப்போல சந்தியில நின்னு ஆதாளி எல்லாம் பண்ணமாட்டாக. கமுக்கமா இருந்துக்கிடுவாக. கிராம முன்சீப் ஐயா வீட்டுப் பெரிய திண்ணையில் போய் சத்தங்காட்டாமப் படுத்துக் கிடப்பாங்க.
வேலம்மை அண்ணியைச் சும்மா சொல்லக்கூடாது. தாத்தாவத் தரையில நடக்கச் சம்மதிக்க மாட்டாக.
அவுகளுக்கு குடிக்கறது பிடிக்காதுதான். வேற வழி சகிச்சிக்கிட்டு போவாக.
அண்ணியோட கோபம் ராசிங்கன் பேர்லதான் பாயும்.
"இந்த ராசிங்கம் பயல வீட்டுக்குப் பக்கமே தலை காட்டாதலேன்னு எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாச்சு. பயல் கேக்க மாட்டங்கானே! தோட்டக் காட்டைப் போட்டுப் போட்டு ஓடி ஓடி வாரானே. இவுக, ஒடனே அவனைப் பனங்காட்டுப் பக்கமா அனுப்பி, சிலுவை அந்தோனிட்டப் போயி "வெள்ளைப் பதனி' யை வாங்கியாறச் சொல்ல வெரட்டுதாக. அவனும் இதுல சொகங்கண்ட பயலாப் போய்ட்டான். இதுல குடிச்ச மிச்சத்தை அவன் குடிக்கலாமில்ல! அதான் நான் ஏசினாலும், பேசினாலும் கூட்டாக்காம ஓடியாறான். யார் செஞ்ச புண்ணியமோ, மனுசன் கள்ளைக் குடிச்சதும் திண்ணையில சுருண்டுருதாக. வெளிய எறங்கி ஆதாளி பண்ணாத வரை சேமம்,'' என்று தன்னுள் புலம்பிக் கொள்வான்.
அண்ணியைச் சாதாரணமா எண்ணிற முடியாது.
இங்கே உள்ள பிள்ளையார் கோவில், அம்மன் கோவில் எல்லாத்திலியும் அண்ணிதான் முதன்மைப்பட்டு நின்னு செய்வாக.
அண்ணிக்கு வெபரம் கூடுதல்.
பிள்ளையார் கோவில் பட்டருக்கும், அம்மன் கோயில் பூசாரிக்கும், இன்னின்ன காரியங்களை, இப்படிச் இப்படிச் செய்யணும்னு வழி காட்டுததே அண்ணிதான்.
அந்தக்கால அரிச்சுவடி படிச்சு, எழுதவும் படிக்கவும் தெரிஞ்சுவச்சிருக்கவுக அண்ணி மட்டும் தான் இங்கே. இந்த ஊர்ல மத்தப் பொம்பகளைக பூராவும் கைநாட்டுப் போடுதவுகதான்.
பேப்பர் வாசிப்பாங்க, ரேடியோ கேப்பாக, நாட்டு நடப்புப் பூராத் தெரியும்.
யாருக்கு என்ன உதவி வேணும்ன்னாலும், அண்ணியத் தேடில்லா ஓடி வருவாக.
அண்ணி சிவபுராணம் படிக்கிறப்ப கேட்கணும். மனசு உருகி வழியும். ஏற்ற இறக்கங்களோட திருவாசகம் படிக்கதக் கேட்டா, மாணிக்க வாசகப் பெருமானே கெறங்கிப் போய்டுறாப்ல உயிரோசையோட இருக்கும்.
என்னிக்கு என்ன விரதம் இருக்கணும், எப்படி இருக்கணும்கிறதை அழாகச் சொல்லிக்குடுப்பாக.
அண்ணியோட தலைமையிலதான், ஐப்பசி மாசம் துலா முழுக்கு நடத்துவாக பொண்டுக எல்லாரும்.
மழை கொட்டித் தீர்த்தாலும் துலா முழுக்கை நிப்பாட்ட மாட்டாக. நந்தி மண்டபத்துக்கு வடபக்கம் மாக்கோலம், மஞ்சக்கோலம் போட்டு, பிள்ளையார், காவேரி, அகத்தியரை எல்லாம் வச்சுக் கும்புடுவாக. காற்றும் மழையும் இருக்கிறப்ப அகல் விளக்குக் குடத்துக்குள்ள நின்னு எரியும்.
கோயில் நந்தவனப் பூக்களோட, பெட்டைக்குளம் சாயபு பங்களாவிலேர்ந்து முல்லைப் பூக்களையும் பறிச்சிட்டு வந்து அர்ச்சனை பண்ணுவாக.
பொழுதுக்கால் சாஞ்சிட்டா, தெருப் பூராவும் மணிச்சத்தம்தான்.
வெளக்குப் பூஜை பண்ணுவாக.
ஊதுவத்தியும், சாம்பிராணியும் தெருவைக் கடந்தும் மணக்கும்.
திண்ணைச் சுவர்கள்ல இருக்கிற மாடக்குழிகள்ல அகல் விளக்கு வச்சு, அந்தி இருட்னதும் ஏத்துவாக. தெருவே அழகா இருக்கும்.
அப்ப ஏது தெரு லைட்டுக? கரண்டே கிடையாதே.
மார்கழி மாசத்துல, விடியக்காலம்பற தெருவைப் பாக்கணும். பெரிசு பெரிசாக் கோலம் போட்டு, அதுல பூசணிப்பூ வச்சு அலங்காரம் பண்ணியிருப்பாக. மங்களமா இருக்கும்.
பிள்ளைகள் இதை வேடிக்கை பாப்பாக. எந்த வீட்ல கோலம் போட்ருக்கு. எந்த வீட்ல பூசணிப்பூ அதிகமாய் வச்சிருக்குன்னு எண்ணி எண்ணிப் பாப்பாக.
கோமக்கா வீட்டு முன்னாடிதான் ரொம்ப நேரம் நின்னு வேடிக்கை பாப்பாக. ஏன்னா, நுணுக்கு நுணுக்கிப் படம் போட்டாப்ல கோலம் போட்ருப்பாக. மஞ்சப் பொடி, காவிப்பட்டை, குங்குமம், நீலப்பொடி எல்லாம் தீற்றி கோலம் பிரமாதமாய் இருக்கும்.
தாலாட்டுப் பாட்டு, எசவுப்பாட்டு, நலுங்குப் பாட்டு, ஒப்பாரிப் பாட்டெல்லாம அவுக பாடிக் கேக்கணும். காதுகளும், மனசும் அம்புட்டுக் கூத்தடிக்கும்; சந்தோசப்படும்.
எந்த வீட்ல, என்ன விசேசம்ன்னாலும், முதன்மையாய் நின்னு நடத்துறது கோமக்காதான்.
எப்பவும் பாட்டு, பேச்சு, சிரிப்பு, கும்மாளம்ன்னு இருப்பாக. அதனாலேயே என்னவோ கொஞ்சம் குண்டாய் இருப்பாக அவுக. தூக்க முடியாம உடம்பைச் தூக்கிட்டு நடக்கிறப்ப சிரிப்பா வரும். வெளில தெரியாமச் சிரிச்சுக்கிடுவாக மத்த ஆளுக.
அவுக அண்ணன் சிந்துபூந்துறையில இருக்கதாலே, அடிக்கடி அங்க போய்டுவாக.
திருநெல்வேலி டவுனுக்குப் போயி எப்படியும் அஞ்சாறு சினிமாப் பாக்காம வரமாட்டாக. வந்ததும் அவுக வீட்டுத் திண்ணை பூராவும் ஊர்ல உள்ள பொம்பளைகளும், பிள்ளைகளும் கூடிருவாக.
என்னவோ கோமாக்காவே சினிமாவுல நடிச்சது போல இவுக நெனைச்சுட்டு, அவுகளை அதிசயம் போலப் பாப்பாக. அவுகளும் முகபாவங்களை மாத்திக்கிட்டு, கையும், காலையும் ஆட்டி ஆக்ட் பண்றாப்லயே கதை சொல்வாகல்ல. ஒருவாரம், பத்துநாள் போல சினிமாக் கதையைக் கேட்டேப் பொழுதை ஓட்டிருவாக.
மத்தப்படி வேலம்மை அண்ணி வீட்டுத் திண்ணையும் கொஞ்சம் தேய்மானம் ஆகும். அண்ணி புராணக்கதை சொல்ல ஆரம்பிச்சா, ஒருத்தரும் திறந்த வாயை மூட மாட்டாக.
அருணகிரியர் கதை, பத்ரகிரியர் வரலாறு, ஆண்டாள் கதைன்னு பாட்டும் பாடில்ல கதை சொல்வாக.
நயினார் நோன்பு அன்னிக்கு மட்டும். காஞ்சீரத் தேவர்தான் சித்ரகுப்த நயினார் கதையை வாசிப்பார். ஒவ்வொருத்தரும் சுளகுல அரிசி. பருப்பு, உப்பு, புளி, மிளகாய், தேங்காய்ன்னு எடுத்துட்டு போய், அவரோட வீட்டுக் திண்ணைமேல் வச்சிட்டு, பயபக்தியோட வாசிப்பைக் கேப்பாக.
கோமக்கா வீட்டுக்குத் தெக்குவீடுதான் பாஞ்சாலி அத்தையோட வீடு. ஒத்தை மனுசி. அந்தக் காலத்தில அவளுக்கு நூறுபவுன் நகை போட்டுல்ல பொண் அழைச்சு விட்டாள் அம்மை முத்து அண்ணி நல்ல செல்வாக்கா இருந்தது அவபாடு.
அவளோட பொழுது பூராவும் மாடு கன்றுகளோடவே கழியும்.
தொழுவமே கதின்னு கிடப்பா.
பால் கறக்க, சாணம் அள்ளிப்போட, மாடு கன்னுக குளிப்பாட்ட, தீவனம் வைக்க, அந்தி வெள்ளன புல்லு வெட்டப் போக, மோர் கடைஞ்சு வெண்ணெய் எடுக்கன்னு, வேலை செஞ்சுக்கிட்டே இருப்பா. ஒரு நிமிசம் குத்த வைக்க மாட்டா.
புல்லு வெட்டப் போம்போதும் பாம்படம், தண்டட்டி முடிச்சுன்னு காது நிறையத் தொங்க விட்டுக்கிட்டே போவா. அதுக தோள்பட்டைல வந்து மோதும். கழுத்துல கிளிக்கூட்டு அட்டியல் பதக்கத்தோட கிடக்கும். ஏழெட்டுச் சங்கிலிக தடித்தடியாக் கிடக்கும். கல்லு வச்ச வளையல், தென்னம்பூ வளையல்கள்ன்னு போட்ருப்பா.
திருட்டுப் பயமில்லாம, வண்ணாங்குளம், பெரியகுளம், கீழ்ப்பத்து வயக்காடுன்னு போயிப் புல்லு வெட்டிக் கொணாந்துருவா.
பஞ்சாலி அத்தை வீட்டுக்கு அடுத்தாக்லதான் வீரபாகுத் தாத்தாவோட வீடு. செட்டிநாட்டு வீடுகளப் போலப் பெரிய வீடு. பெரிசு பெரிசா வாசல்கள், பெரிசு பெரிசாச் சன்னல்கள், முட்டைத் தோடு தேச்ச சுவர்கள்னு பாக்கவே அழகா இருக்கும்.
மாடில பூராவும் நெல்குவியல்கள், தானிய தவசங்கள், தேங்காய்கள்னு குவிஞ்சு கிடக்கும். எப்பவும் நாலு வேலை ஆளுக நின்னு, ஏதாவது வேலை செஞ்சுக்கிட்டே இருப்பாக.
நெல்லு அவிப்பாக, தேங்காயைச் சில்லுப்போட்டு வெயில்ல உலர்த்துவாக. எள்ளு, உழுந்து, துவரைன்னு புடைச்சுச் சுத்தம் பண்ணுவாக.
வித்து வித்து ஆம்சம் எடுப்பாக.
அதானே செவகாமி ஆத்தா அடிக்கடி புதுசு நகை போட்டு மினுக்குதா!
"என்னத்த மினுக்கி என்னத்துக்கு அலங்கரிச்ச சவம்தானே அவ! பின்ன, பிள்ளை இல்லாதவளை யாரு மனுசின்னு மதிப்பாக? வீரபாகு என்ன பாவத்தப் பண்ணினானோ? இப்படி மலட்டு மூதேவியக் கட்டிக்கிட்டு அழுதான். சொன்னாக் கேக்க மாட்டாங்கானே! சேவுடன் காதுல ஊதுன சங்லால்ல இருக்கு. பேசாம ரெண்டாம்தாரமா ஒருத்தியக் கட்டிக்கிட்டு பிள்ளை குட்டிகளைப் பெத்தெடுக்கிற வழியைப் பாருன்னா, அசையாமல்ல இருந்து கொண்டாடுகான்'ன்னு, சித்தூராச்சி வாய்க்கு வாய் புலம்பிக்கிட்டேதான் இருக்கா.
வீரபாகு கேக்காப்பல இல்லை.
செவகாமி ஆத்தா காதுல விழுந்துறட்டாதுன்னு கவனமாத்தான ஆச்சி புலம்புவா. அவ காதுக்குப் போய்ட்டாப் போறும், சித்தூராச்சி தொலைஞ்சா, பேசியே குலமறுத்துப் போடுவாளே.
பொறகு, சக்களத்தி வர யாருதான சம்மதிப்பா?
வீரபாகுத் தாத்தாவும் மொதல்ல அசைஞ்சு குடுக்கலே. பின்னே, அடிமேலடி அடிச்சா அம்மியும் நகரும்ங்காப்ல, தாத்தாவும் அசைஞ்சிட்டாக.
எத்தாப் பெரிய பணக்காரன்னாலும், ரெண்டாம் தாரமாப் பொண்குடுக்க யோசிப்பாகள்ள.
வீரபாகுத் தாத்தாட்ட இருந்த பணம் குரும்பூர்ச் சிறுக்கியை மயக்கிப் போட்டுதுன்னு செவகாமி ஆத்தா ஏசுனா. சக்களத்தியா வந்துட்டாளேன்னு கரிச்சுக் கொட்டுனா.
ரெண்டாம் கலியாணம்ன்னாலும் வீரபாகுத் தாத்தா போட்சா நடத்துனாகல்ல!
பூம்பல்லாக்குல பட்ணப்பிரவேசம். சுசீந்திரம் திருவாழிக் கம்பர் நாதஸ்வரம். சும்மா பொழிச்சிட்டாருல்லா.
பட்ணப்பிரவேசம்ன்னாலும் ஒரு தெருவுக்குள்ள தானே! பிள்ளையார் கோயில்ல ஆரம்பிப்பாக. வீடு வீடா நின்னு பால் பழம் சாப்டுவாக. பிறகு நல்ல தண்ணிக்கிணத்து மேட்ல ஏறி, வண்ணாங்குளம் வண்டித் தடம் வழியா அம்மை முத்தம்மன் கோயில் வரை போவாங்க. அங்க அம்மன் தரிசனம் ஆனதும் திரும்பிருவாக.
பொண்ணு மாப்ள பல்லாக்குல ஏறினதுமே செவகாமி ஆத்தா ஏச்சிலே
பிடிச்சிட்டால்ல.
"நாசமாப் போற ரெண்டாம் தாரத்துக் காரிக்குப் பூம்பல்லாக்கு வேறயா?இவ கடைசி வரைல போய்க்கிடமாட்டா. இடையிலே பாதியாப் போய்ருவா. வண்ணாங்குளத்தைத் தாண்ட்றக்குள்ளியே விழுந்து நொறுங்கிப் போய்ருவா''
இப்படி ஏசிக்கிட்டே இருந்தா.
ஏச்சுப் பலிச்சுதோ. இயற்கையாவே நடந்துச்சோ வண்ணாங்குளம் மேட்ல ஏறி இறங்குறப்ப ஒருத்தனோட கால் மடங்க, பல்லாக்கு அப்படியே சாஞ்சுபோச்சு. பொண்ணும், மாப்ளயும் வெளில உருண்டுட்டாக.
"அதான் வேணும். அப்படித்தான் வேணும், என்னோட வயத்தெரிச்சல் சும்மா விடுமா? அதான் கடவுளாப் பாத்து விழத்தட்டிட்டார், கை, கால் உடையணும். அப்பதான் எனக்கு நிம்மதி'' என்று காட்டமாக ஏசினாள் சிவகாமி ஆத்தா.
வெத்திலை பாக்கை மென்னுக்கிட்டே, புருசனையும் சக்களத்தியாய் வந்த குரும்பூராளையும் திட்டித் தீர்ப்பதே அவளின் தினப்படி வேலைகளில் ஒன்றானது.
வீரபாகுத் தாத்தாவுக்குத் தாராளமான மனசு. அம்மங்கோயில் கொடையிலே வில்லுப்பாட்டுச் செலவு பூராவும் தாத்தாதாஜி செய்வாக. அப்ப உசந்த வில்லுப் பாட்டுக்காரி வேலம்மைதான். அவளைத்தான் பாட வைப்பாக. அவ பாடும் போது ஒத்தச் சனம் அசையாது. அப்படியே மந்திரம் போட்டாப்ல மயங்கி இருப்பாக.
கொடை நாள் இல்லாத காலங்கள்ல வேலம்மையைக் கூப்பிட்டுக் திண்ணையில் இருந்து பாடச் சொல்வாக. ஊர் கூடிக் கேப்பாக. பணம், தானிய தவசம்ன்னு அவங்களால ஏன்டதைச் சன்மானமாக் குடுப்பாக. தொழில் இல்லாமப் போற சமயங்கள்ல வேலம்மையைப் போலப் இருக்கிற கலைஞர்களுக்கு இது ஏந்தலாய் இருக்கும்.
அதனால இருந்த தெருவுல அடிக்கடி வில்லுப்பாட்டுக் சத்தமும், உடுக்கை ஒலியும், குடம் அடிக்கிற ஓசையும் கேட்டுக் கிட்டே இருக்கும்.
முன்னயெல்லாம் செவகாமி ஆத்தாதான் கருப்புட்டிக் காப்பி போட்டு விளம்புவா. கடுங்காப்பின்னாலும் ருசியா இருக்கும். இப்ப, மூஞ்சியத் தூக்கிட்டு வெளில வரவே மாட்டா. குரும்பூர்ச் சக்களத்திதான் மூப்புப் பண்ணுவா. சனங்களும் பின்ன அவளை, அக்கா, அத்தை, அண்ணியார்ன்னு கொண்டாடினால் செவகாமி ஆத்தாவுக்குப் பொறுக்குமா?
அதான் இப்ப திண்டுக்கல் முண்டு பண்ணுதா. வீரபாகுத் தாத்தாவுக்கு இம்சை ஆகிப் போயிட்டா. தாத்தா இதைக் கண்டுக்கவே மாட்டார். பண்ணைச் சோலிகளுக்கே நேரம் பத்தலியே , இவ சள்ளுல யார் நிப்பான்னு ஒதுங்கிருவார்.
பொங்கல் அன்னிக்கு, தெருப்பூராவும் ஒண்ணுபோல பொங்கல் பானை ஏத்துவாக. ஒரே நேரத்துல பால் பொங்குதப்ப எல்லார் வீட்லயும் குரவை போடுவாக. அந்தச் சத்தத்துல வண்ணாங்குளத்து ஆலமரக் காக்கைங்க "கா... கா...'ன்னு கரைஞ்சுக்கிட்டே பறந்து அழகைப் பாக்கணும்! மனசு நிறைஞ்சு போகும்.
அந்த மரத்துல கடந்தைக் குளவிக கூடு கட்டி இருக்குன்னு சின்னப்பிள்ளைகளை அண்டவிட மாட்டாக. அதுகல்லாம், விழுதுகள் ஊஞ்சலாட ஆலாப் பறக்கும்.
கோப்ரெட்டி மாமா வீடு பக்கத்துல இருக்கதாலே, ஒரு கடுஞ்குஞ்சியைக் கூட மரத்தடில நடமாடவிட மாட்டாக.
ஒருத்தருக்கு ஒண்ணுன்னா ஊரே கூடிரும். அம்புட்டு ஒற்றுமை!
ஊருன்னா இப்படி இருந்தால்ல நல்லது.
ஊருங்கிற பேர்ல தெருவுதானே!
ஆசாரிமார் வீடுக நாலும்தான் எட்னாக்ல போச்சு. ஆசாரிமார் பொம்பளைக ஓயாமத் தெருவுக்கு வந்து போறதாலே கலகலப்பாவே இருக்கும். ஆசாரிமாரு வெளியூர் சோலின்னு போறதால ராவிருட்டில்ல வீடு வருவாக. வந்தமா, வெந்நீர்ல குளிச்சமா, சுடுசோறு திண்ணமா, பாய் விரிச்சுப் படுத்தமான்னு அவுக பொழுது ஓடிரும்.
ஊர்ல குடுக்க சுதந்திரிய நெல்லும், வெளிவேலைக் கூலியுமா அவுக பொழுது சீராத்தான் ஓடுது.
பிள்ளைக படிக்கப் போறது கஷ்டம்தான், ரெண்டு மூணு கிலோ மீட்டர் நடக்குணும். வெயில் காலத்துல கஷ்டம் இல்லே. மழைக்காலம்ன்னா, குளக்கரையைச் சுத்திக்கிட்டுதான் போயாகணும். உள்வாய்ல தண்ணி கெடக்கும்.
ஒண்ணு ரெண்டு பேரு ஹாஸ்டல்ல தங்கிப் படிக்காக. ஒருநாள் லீவுன்னாலும் ஊரைப் பார்க்க ஓடியாந்துடுவாக.
ஊர் மேலே அம்புட்டுப் பாசம்!
அவுகதான்னு இல்லே, அவுகளோட சொந்தக்காரவுகளும், இந்த ஊருக்கு வாரதுன்னா குதியாட்டம் போட்டுல்லா வருவாக.
ஊருக்கு மேற்கே நம்பியாறு. கடுங்கோடையிலயும் கொஞ்சம் போலத் தண்ணி ஓடும். கரை நெடுகப் பனங்காடுக, தென்னந் தோப்புக, வாழை, நெல் வயல்கள்னு ஒரே பசுமையா இருக்கும்.
நல்ல தண்ணிக் கெணத்தைச் சுத்தி ஒரே சோலையாய் இருக்கும்.
கண்ணு நிறையிறாப்ல பசுமைன்னா, மனசு நிறையிறாப்ல அவங்களோட அன்பு. கிராம முன்சீப் வீட்டுப் பெரியண்ணி, "வாங்க'ன்னு வரவேற்கிறதே மனசை நிறையப் பண்ணிருமே.
அதான் யாரும் ஓடி ஓடி வருவாக.
இப்ப நான் வந்திருக்கிற மாதிரி.
எனக்கெண்ணும் இந்த ஊர் கிடையாது. மேற்கே இருக்கிற கோட்டைதான் நான் பிறந்து வளர்ந்த மண்ணு.
இங்க பெரியத்தை இருக்காக. சின்ன வயசு முதலே வந்துட்டு இருக்கேன். இந்த ஊரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அன்பையும், கலைகளையும் வளர்க்கிற ஊர். என்னோட கனவு ஊர்ன்னே சொல்லலாம். அதனாலே எங்க போய்ட்டாலும், தவறாம இங்க வந்துட்டுப் போவேன். இந்த மண்ணை ஸ்பரிசிப்பேன். இங்க வீசுற காத்தை ஆழமாய் இழுத்துச் சுவாசிப்பேன்.
ஆனா...,
ஆனா...,
இப்ப ... இப்ப... இப்ப....
ஏக்கங்கள் மட்டுமே மிச்சமாப் போச்சு.
நெஞ்சை நெருடி, கண்களை நனையப் பண்ணகிற ஏக்கங்களே செறிவாய்க் கிடக்கின்றன.
இங்கே யார்தான் குற்றவாளி இல்லே?
எந்த ஊர்தான் குற்றவாளிங்க இல்லாத ஊராயிருக்கு?
சாபமாமே!
சாபம் இப்படிக் கூடவா இடுவாங்க?
அது பலிக்கவும் பலிக்குமா?
இயற்கை வஞ்சகம் பண்ணிட்டுது. மழை, தண்ணீர் இல்லே. வேளாண்குடி மக்களாலே என்ன பண்ணமுடியும்?படிச்ச பிள்ளைக வெளியூர்லயே தங்கி வேலை சோலி பாக்காக.
வயசானவுக நம்பியாற்றால்கரையிலே உறங்குனது போக மீதிப் பேரெல்லாம் பிள்ளைகளை அண்டிப் போய்ட்டாக.
ஊரே காலி!
ஊருங்கிறது அந்த ஒரு தெரு மட்டும்தானே!
பிள்ளையார் கோயிலை ஒட்டித் தான் பூக்கட்டுத பண்டாரத்தியோட வீடு.
அவதான் சாபமிட்டவளாம்.
"இந்த ஊரு மண்ணாப் போகட்டும். இண்டு முளைச்சு எருக்கலை பூக்கட்டும்.முள்ளுக்கள்ளி முத்தத்துல முளைக்கட்டும்...'' ன்னு.
சாபமிட்டுக் கொண்டே மண்ணை வாரித் தூற்றினாளாம்.
அப்புறம், வீட்டைக் காலி பண்ணிட்டு ஊரை விட்டே போய்விட்டாளாம்.
இப்ப,
நான் ரொம்க ரொம்ப நேசிச்சு ஊரு, அடையாளமே தெரியாம அழிஞ்சு போய்க் கெடக்கு. வீடுக இருந்த இடம் பூராவும் மண்மேடாய்க் கிடக்கு. அதுல முள்ளு மரங்குளும், காட்டுக் கள்ளுகளும், இண்டஞ் செடியும் எருக்கஞ் செடியும் முளைச்சு, காலி வைக்க இடமில்லாமக் கிடக்கு.
இப்படி இடிஞ்சு தகர்ந்து எதுவுமில்லாமப் போனதுக்கு பண்டாரத்தி இட்ட சாபமே காரணம்கிறாங்க. அவளோட மகளை இங்கே யாரோ கெடுத்துட்டாங்கன்னு
சொல்லிச் சாபம் இட்டாளாம். அது பலிச்சுப் போச்சாம்.
நம்பவா முடியுது?
அட, ஊரை விடுங்க... அவ சாபம் இடுறப்ப அம்மன் கோயிலும் தானே சின்ன ஓட்டுப்புரையா இருந்திச்சு.
அதுக்கு ஒண்ணும் ஆகலியே!
அதுவும் இப்போ பெரிய விமானம், சுற்றுமதில், பளிங்குத்தளம், பரிவார தேவதைகள் ஆலயம்னு பிரம்மாண்ட வளர்ச்சி கண்டிச்சே!
ஊர் அழிஞ்சது கால ஓட்டத்தோட மாற்றம்தான்!
இதுவும் மாறும்.
கண்ணகி எரிச்ச மதுரையை, மாநகரமாய் மறு நிர்மாணம் பெற்றிருக்கே!
நம்பி குறிச்சியும் மறு நிர்மாணம் பெறும்,
இந்த ஊரோட வாரிசுகள் கோவிலை விருத்தி செய்து. கொடைகள் கொடுத்து விழாக்கள் நடத்துவதுபோல, தங்களின் மூதாதையர்கள் வாழ்ந்த மண்ணிலே, மறுபடியும் வீடுகள் கட்டி வாழ்வதற்கு வருவார்கள்.
அப்போது,
பண்டாரத்தியின் சாபம் அர்த்தமிழக்கும்.
ஓர் அருமையான கனவுக்கிராமம் கம்பீரமாய் உருவெடுத்திருக்கும்.
என்னைப் போன்றவர்களின் ஆதங்கம் ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.

உமா கல்யாணி
 

More from the section

இருவர்!
சிரி... சிரி... சிரி... சிரி... 
ஏன் நகைச்சுவையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
படைப்பாளியின் பெயர் மாறிவந்த திரைப்படம்!
திரைக் கதிர்