செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

கையுறை அணியாமல் குத்துச்சண்டை!

Published: 11th September 2018 11:08 AM

கையில் காசில்லாதலால் கையுறை அணியாமல்... காலி வயிறுடன் போட்டிகளில் கலந்து கொண்டு...
நடந்து முடிந்த ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு பதக்க பங்களிப்பில் பன்னிரண்டு புள்ளிகள் பெற்று தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. இத்தனைக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த விளையாட்டு வீரரும் வீராங்கனையும் தங்கப் பதக்கம் பெறவில்லை. 
ஹரியானா பதினெட்டு புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. ஹரியானாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் பதக்கப் புள்ளிகளில் நீண்ட இடைவெளி ஏற்பட காரணமாக அமைந்தவர் ஹரியானவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல். ஆசிய போட்டியின் கிட்டத்தட்ட நிறைவுறும் போது யாரும் எதிர்பார்க்காத ஓர் ஆச்சரியமான தருணத்தில் 49 கிலோ பிரிவில் தங்கப் பதக்கத்தை அமித் தட்டி எடுத்தார். அமித் தோற்கடித்தது உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த குத்துச் சண்டையில் ரியோ ஒலிம்பிக்சில் சாம்பியனான உயர்ந்த ஹசன்போய் துஸ்மதாவ் என்பவரை. 
சென்ற ஆண்டு சர்வதேச தர போட்டி ஒன்றில் ஹசன்போய் அமித் பங்கலை தோற்கடித்திருந்தார். அந்தத் தோல்வியை அமித் ஆசிய போட்டியில் ஹசன்போய்க்கு வாங்கிய கடனை திருப்பி அடைப்பது போல் திரும்பத் தந்து தங்கப் பதக்கம் பெற்றார். இந்த ஆண்டு இன்னொரு போட்டியில் ஹசனை மிஜோரத்தைச் சேர்ந்த நட்லை லால்பியாகிமா தோற்கடித்துள்ளார். அதனால் "ஹசன்போய்யை வெற்றிபெறலாம்' என்ற தன்னம்பிக்கை அமித்துக்கு ஆசிய போட்டி தொடங்கு முன்னே தோன்றிவிட்டது. அது குத்துச் சண்டையில் பிரதிபலித்தது. எதிராளியைச் சமாளிக்கும் உறுதியையும் லாகவத்துடன் இளங்கன்றான அமித் பயமறியாது பாய்ந்து வெற்றி பெற்றுள்ளார். இந்திய ராணுவத்தில் இளநிலை அதிகாரியாகப் பணி புரியும் அமித்திற்கு இருபத்திரண்டு வயதாகிறது. 
இன்றைக்கு அமித்தின் பொருளாதாரம் திருப்திகரமாக இருந்தாலும் தொடக்கத்தில் மிகவும் சிரமப்பட்டுள்ளார். சிலரை வறுமைதான் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. அந்த சிலரில் அமித்தும் ஒருவர். 
"அப்பா விஜேந்தர் சிங் உழவர். எங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. கோதுமை, தானியங்களை பயிரிட்டு வரும் வருமானம் வாய்க்கும் வயிறுக்கும் சரியாக இருந்தது. சொந்த மாநிலமான ஹரியானாவில் வீர விளையாட்டான மல்யுத்தம் குத்துச் சண்டை மிகவும் பிரபலம். அண்ணன் அஜய் குத்துச் சண்டை பயிற்சி செய்து கொண்டிருந்தார். 2006 வாக்கில் நானும் குத்துச் சண்டை பயிற்சியில் சேர்ந்தேன். சில வருடங்களில், வயல் விளைச்சல் குறைந்து போனதால் குடும்பத்தின் பொருளாதார பிரச்னை தலைவிரித்து ஆடியது. அப்போது நான் குத்துச் சண்டை பயிற்சிக்காக பிரபல பயிற்சியாளர் அனில் தன்கரிடம் சேர்ந்திருந்தேன். 
குத்துச் சண்டை பயிற்சியின் போது கையுறை அணிந்து கொள்ள வேண்டும். எனது கையுறை தையல் விட்டு கிழிந்து விட்டது. புதிய கையுறைகள் வாங்க வேண்டுமானால் மூவாயிரம் ரூபாய் தேவை. அந்தத் தொகைக்கு எங்கே போவது? அப்பாவிடம் பணம் இல்லை. எனது கையிலும் காசில்லாதலால் கையுறை அணியாமல் வெறும் கையால் பயிற்சிகளை ஆறு மாதத்திற்கும் மேலாகச் செய்து வந்தேன். அடுத்த பிரச்னை, சத்தான உணவு. குத்துச் சண்டை வீரர்கள் தரமான உணவுவகைகளை உண்ண வேண்டும். அப்போதுதான் உடலில் சக்தி உருவாகும். வீட்டில் சாதாரண உணவுக்கே சிரமம். அப்படியிருக்கும் போது அதிக செலவுகளை இழுத்து வைக்கும் சத்தான உணவுவகைகளுக்கு எங்கே போவது... பல சமயங்களில், ஒன்றும் சாப்பிடாமல் வெறும் வயிறுடன் பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். காலி வயிறுடன் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறேன்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அண்ணன் ஓர் அதிரடி முடிவெடுத்தார். பொருளாதார பிரச்சினை காரணமாக அண்ணன் தனது குத்துச் சண்டை கனவுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு ராணுவத்தில் சேர்ந்தார். "உன்னால் சர்வதேச குத்துச் சண்டை வீரனாக முடியும். அதற்கான அறிகுறிகளை நான் காண்கிறேன்..அதனால் பயிற்சியை முழு மனதுடன் தொடர்ந்து செய் .. நீ பேசப்படுவாய்'' என்று ஊக்குவித்தார். அவர் வேலைக்குச் சேர்ந்ததும்தான் குடும்பத்திற்கு நிரந்தர வருமானம் உறுதியானது. நிம்மதி பெருமூச்சுவிட எங்களால் முடிந்தது. சில சர்வதேச வெற்றிகளுக்குப் பின் நானும் இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்திய ராணுவத்தில் தொடக்க நிலை அதிகாரியாகப் பணி ஏற்றுள்ளேன்'' என்கிறார் அமித்.
"ஆசிய போட்டியில் அமித் வாங்கிய தங்கப் பதக்கம் ஒரு ஏணிப் படிதான். நாங்கள் பட்ட கஷ்டங்கள் அமித் ஒரு ஒலிம்பிக்ஸ் பதக்கம் வாங்க வேண்டும் என்பதற்காகத்தான். அமித் இன்றுவரை பெற்றிருக்கும் பதக்கங்கள் ஒலிம்பிக்ஸ் பதக்கம் நோக்கி அவனை கைபிடித்து அழைத்துச் செல்லும் உற்சாகங்கள். அவை அமித்துக்கு நம்பிக்கைகளையும், தேவையான அனுபவத்தையும் வழங்கும். ஒலிம்பிக்ஸ் பதக்கம் அமித்தின் இலக்கு மட்டுமல்ல... எங்கள் குடும்பத்தின் இலக்கும் கூட'' என்கிறார் அமித்தின் தந்தை விஜேந்தர் சிங். 
- பிஸ்மி பரிணாமன்
 

More from the section

நகைச்சுவையும் ஓவியங்களும்!
இரண்டு சிங்கங்கள்
மிகப்பெரிய  கோயில்  விளக்கு!
தேன்காரிகளின் ரீங்காரங்கள்
சிரி... சிரி... சிரி... சிரி...