திங்கள்கிழமை 25 மார்ச் 2019

கணையாழி பதித்த இலக்கியத் தடங்கள்!

By -இடைமருதூர் கி.மஞ்சுளா| Published: 17th February 2019 12:00 AM

கணையாழி தொடங்கப்பட்ட காலம் சுதந்திர இந்திய வரலாற்றில்  ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருந்த காலம். தனிப்பெரும் ஆளுமையாக இருந்த பண்டித ஜவாஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரி பதவி ஏற்றுக்கொண்ட காலம். அப்போது, "நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் டில்லி நிருபராகப் பணியாற்றிக்  கொண்டிருந்த கஸ்தூரி ரங்கனின் இலக்கிய தாகம்தான் இப்படியோர் இதழ் தொடங்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தது.  

அதுமட்டுமல்ல,  அன்றைய  தமிழ்ப் பத்திரிகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் இதழாக "கணையாழி' மலர்ந்திருக்கிறது என்பதை அதன் முதல் இதழ் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.  

1965 ஜூலை முதல்  1970 ஜூலை வரையிலான கணையாழிகள் அப்படியே அச்சு அசலாக ஐந்து தொகுதிகள் வெளிவந்துள்ளன. இந்தக் காலகட்டத்தில் வெளியான கணையாழியைப் படிக்காதவர்கள், படிக்கத் தவறியவர் அனைவருக்கும் இவ்வைந்து தொகுதிகளும் ஒரு வரப்பிரசாதம். இவ்வைந்து தொகுதிகளிலும் பற்பல புதுமைகள்.

""டெம்மி அளவில் 24 பக்கங்கள் கொண்டதாக 40 காசு விலையில், ஜூலை 1965 என்று முதல் பக்கத்தில் அச்சடித்து வந்த முதல் "கணையாழி'யில் தில்லிக்கு அப்போது வந்திருந்த ஜெயகாந்தனுடன் ஒரு பேட்டி, கலைமகளில் அரசியல் கட்டுரை எழுதிவந்த கே.சீனிவாசன் கட்டுரை, ஓரிரண்டு கதைகள், சினிமா, நாடகம் பற்றிய தகவல்கள், விமர்சனங்கள், ந.பிச்சமூர்த்தி கவிதைகள் பற்றி ஒரு அலசல் என்றெல்லாம் அதில் இருந்தன. அட்டைப் படமாக இந்தியா தேசம், அதற்குள் நேருவும் சாஸ்திரியும் - அதுதான் அட்டைப்படக் கட்டுரையும்'' என்று முதல் இதழின் தொடக்கத்தை, "கணையாழியின் கதை' என்கிற தலைப்பில், வே.சபாநாயகம் மிக விரிவாக விவரித்திருக்கிறார்.

"தினமணி'யின் முன்னாள் ஆசிரியர் கஸ்தூரி ரங்கனால் நிறுவப்பட்ட "கணையாழி' தமிழ் இலக்கியத்தின் அடையாளம் என்றுதான் கூறவேண்டும். கணையாழி நூற்றுக்கும் அதிகமான எழுத்தாளர்களுக்கு  அடையாளம் தந்திருக்கிறது.  அந்த அடையாளம் இன்றுவரை தொடர்கிறது என்பதே கணையாழியின் மிகப்பெரிய சாதனை! அதுமட்டுமல்ல, நமது பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து வரும் ஓர் அற்புதமான இதழும்கூட.  

தினமணிக்கும், கணையாழிக்கும் நெருங்கிய உறவு உண்டு. மணிக்கொடி இதழின் ஆசிரியர் குழுவில்  "தினமணி' நாளிதழின் ஆசிரியராக இருந்த டி.எஸ். சொக்கலிங்கம் இடம்பெற்றிருந்தார் என்றால், கணையாழியின் ஆசிரியர்களாக  இருந்த கஸ்தூரி ரங்கனும், மாலனும் தினமணியின் ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் அந்த நெருங்கிய உறவு.

""தில்லி எழுத்தாளர்கள், சுப்புடு, "கடுகு' என்கிற பி.எஸ். ரங்கநாதன், பூர்ணம் விசுவநாதன், நா.பா., தி.ஜானகிராமன், லா.சு.ரங்கராஜன், என்.எஸ். ஜகந்நாதன், கே.எஸ். சீனிவாசன் போன்றோரின் ஐந்து நட்சத்திரத் தரத்தில் படைப்புகள் கணையாழியில் வெளிவரத் தொடங்கின'' என்று கி.க. பெருமிதப்படுவதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

கடந்த நூற்றாண்டையும் இந்த நூற்றாண்டையும் இணைக்கும் இணைப்புப் பாலமாக இப்போதும் அதே தகுதியோடும்,  தனித்தன்மையோடும் தொடர்ந்து கொண்டிருக்கிறது "கணையாழி' இதழ்.  மணிக்கொடியில் தொடங்கி இன்றுவரை இலக்கிய இதழ்கள்தாம் படைப்பிலக்கியவாதிகளுக்கும் கவிஞர்களுக்கும்  அறிமுகக் களம் வழங்கியிருக்கின்றன. அதில் மிகப்பெரிய பங்கு கணையாழிக்கு உண்டு.

கணையாழியை ஓர் இலக்கிய இதழாக மட்டும் எண்ணிவிட முடியாது.  அதில் அரசியல் விமர்சனங்களும் இருக்கின்றன. ஜெயகாந்தனின் நேர்காணல், அசோகமித்திரனின் சிறுகதை, சுப்புடுவின் சங்கீத விமர்சனம், மருத்துவ ஆலோசனை, குறுநாவல், கார்ட்டூன், நகைச்சுவை துணுக்கு, இலக்கிய விவாதம்,  அரசியல் அலசல், அரசியல் தலைவர்களின் நேர்காணல் என்று உண்மையாகவே ஒரு பல்சுவை மாத இதழாக வெளிக்கொணரப்பட்டிருக்கிறது,  40 பைசா விலையில் அன்றைய முதல் கணையாழி இதழ்.  அதற்கு "புது டில்லி பத்திரிகை' என்கிற அடைமொழியும் தரப்பட்டிருக்கிறது. இப்படியோர் இதழை டில்லியிலிருந்து எப்படி வெளிக்கொணர முடிந்தது என்பது பலருக்கும் வியப்பான செய்தி!

கணையாழியில்தான் குறுநாவல்களுக்கு ஓர் இலக்கிய அந்தஸ்து ஏற்பட்டது. தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டிகளில் வெளியானவை அத்தனையும் முத்தான முத்துக்கள். "கணையாழி' கடைசிப் பக்கத்தைப் பார்க்கும் அளவுக்குப் பரபரப்பை ஊட்டியவர் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்று ஆரம்ப காலங்களில் அறியப்பட்ட எழுத்தாளர் சுஜாதா. 

இளம் எழுத்தாளர்கள் ஆதவன், மாலன், சம்பத், பாலகுமாரன் ஆகியோர் கணையாழியின் மூலம்தான் முத்திரை எழுத்தாளரானார்கள். ஞானக்கூத்தன், எஸ். வைத்தீஸ்வரன், தி.சொ.வேணுகோபாலன், சி.மணி போன்றோர் புதுக்கவிதை எழுதினர். அசோகமித்திரனின் கதை, சுஜாதாவின் கடைசிப் பக்கம், சுப்புடுவின் சங்கீத வித்வான்கள் போன்றவை ஒவ்வொரு இதழையும் அலங்கரித்து, மேலும் படிக்கும் ஆர்வத்தையும் தூண்டின.

இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய், காமராஜர், அண்ணா, கருணாநிதி போன்ற அரசியல் தலைவர்களுடனான நேர்காணல்கள், மூலம் கணையாழி இதழுக்கு ஓர் உயர்ந்த அந்தஸ்தை  ஏற்படுத்தியிருக்கிறது. பின்னாளில் அரசியல் கைவிடப்பட்டு முழுக்க முழுக்க இலக்கிய இதழாகப் பரிணாமம் கொண்டிருக்கிறது. 

இவ்வைந்து தொகுதிகளில் உள்ள பதிவுகள் அனைத்தும் ஒன்றை ஒன்று விஞ்சுகின்றன. கருத்தைவிட்டு அகலாத, காலத்தால் அழியாத பதிவுகள். முந்தைய கணையாழிகளை அப்படியே அச்சு அசலாக  ஓர் எழுத்து கூட மாறாமல் தொகுத்து வெளியிட்டிருக்கும்,  கணையாழியின் இன்றைய ஆசிரியர்  ம.ரா.வின் பதிவும் இங்கு அவசியமாகிறது.

""இத்தொகுப்புகள், ஐம்பது ஆண்டுகளுக்கும் முன் கணையாழியோடு பயணித்தவர்களுக்குக் கடந்த கால நினைவுகளின் ஊற்றுக் கண்களைத் திறக்கலாம்; இன்றைய படைப்பாளிகளுக்குப் படைப்பூக்கச் சுரப்பிகளின் அடைப்பை நீக்கலாம்'' என்கிற ம.ரா.வின் பதிவு நூற்றுக்கு நூறு உண்மை.

÷""நவீன இலக்கியத்தின் போக்குகளைப் புரிந்துகொள்ள முடியாமல், செவ்விலக்கியங்களையும், சிலம்பு, கம்ப காவியம், மணிமேகலை போன்ற காப்பியங்களையும் ஓரளவுக்கு சமய இலக்கியங்களையும், நவீன இலக்கியம் என்று சொன்னால் புதினங்கள், புதுக் கவிதைகளையும் ரசிக்கத் தெரிந்த என்னைப் போன்றவர்களின் இலக்கிய தாகத்தைத் தீர்க்க ஓர் இலக்கியப் பத்திரிகை இருந்தாக வேண்டும். "கண்ணதாசன்', "தென்றல்', "தீபம்', "சுபமங்களா' போன்ற இதழ்கள் நின்றுவிட்ட பிறகும் ஓரளவுக்கு இந்தக் குறையைப் போக்கித் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது "கணையாழி' மட்டும்தான்'' என்கிற கலாரசிகனின் (தினமணி-இந்த வாரம்) பதிவுக்கேற்ப 53 ஆண்டுகளாகத் தொய்வின்றி தொடர்ந்து வருகிறது கணையாழி.  

கணையாழி - ம.ரா.  - ஐந்து தொகுதிகள் 

தொகுதி-1 (1965 ஜூலை-1966 ஜூலை) பக்.418; ரூ.500 தொகுதி-2 (1966 ஆகஸ்ட்-1967 ஜூலை) பக்.396; ரூ.500 தொகுதி-3 (1967ஆகஸ்ட்-1968 ஜூலை) பக்.522; ரூ.500 தொகுதி-4 (1968-ஆகஸ்ட்-1969 ஜூலை) பக்.584; ரூ.500
தொகுதி-5 (1969 ஆகஸ்ட்- 1970 ஜூலை) பக்.686; ரூ.500
வெளியீடு: கணையாழி படைப்பகம், சென்னை;  

தொடர்புக்கு: 08220332055.

More from the section

மனக்கதவு
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நோய்களுக்கெல்லாம் அரசர்!
சிரி... சிரி... சிரி... சிரி... 
செஃப் இயக்கிய படம்!
இளம்  வயது  அமைச்சர்