வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

திரைக் கதிர்

DIN | Published: 22nd January 2019 12:10 PM

• ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு "மணிகர்ணிகா' என்ற இந்தி படம் தயாராகி வருகிறது. ராணி லட்சுமி பாயாக பிரபல கங்கனா ரனாவத் நடிக்கிறார். அத்துடன், ராதாகிருஷ்ணா ஜகர்லமுடியுடன் இணைந்து படத்தை இயக்கியும் உள்ளார். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றிலும் டப் செய்து இந்தப் படம் வெளியிடப்படுகிறது. இது தொடர்பான புரமோஷனுக்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தார் கங்கனா. "தேசபக்தி பற்றிய ஒரு கதையில் நான் நடிக்கும் முதல் படம் இது. 12 ஆண்டுகளாக இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்கவில்லையே என வருத்தம் இருந்தது. இந்தியாவின் மிக முக்கிய ஆளுமைகளான விஜயேந்திர பிரசாத், டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி உட்பட பல முக்கியமான திறமையாளர்களுடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் தொடங்கியபோது என் உடல் எடை 50 கிலோ. மிகவும் ஒல்லியாக இருந்தேன். ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும்போது, என்னுடைய உடல் அதற்கு உகந்ததாக இல்லை என என் சண்டைப் பயிற்சியாளர் கூட சொன்னார். தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பது சிரமமாக இருந்தது. ஆக்ஷன் காட்சிகள்தான் முதலில் எடுக்கப்பட்டன. அதன்பிறகு தான் ட்ராமா காட்சிகளை நான் இயக்கினேன். இந்தப் படத்துக்காக நிறைய நேரம் எழுத்தாளர்களுடன் செலவு செய்தேன், அது எனக்கு உதவியாக இருந்தது. காட்சிகளைப் படம்பிடிப்பது எளிதாக இருந்தது. ஆனால், எந்தக் காட்சியை வைப்பது, எந்தக் காட்சியை எடுப்பது என்பதில்தான் சவாலாக இருந்தது. வழக்கமான ஒரு கதாபாத்திரம் அல்ல. அதைச் செய்ய எனக்கு நிறைய நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் தேவைப்பட்டது. அனைத்து மொழி மக்களையும் இந்தக் கதை சென்றடையும் என நம்புகிறேன்''என்று தெரிவித்தார்.

• இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மிகப்பெரிய விழா எடுக்கிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம். அவரின் 75-வது பிறந்த நாளை, பிரம்மாண்டமான முறையில் கொண்டாட முடிவு செய்து, "இளையராஜா 75' என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வரும் பிப்ரவரி 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் இந்த விழா நடைபெற இருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. சென்னை மகேந்திரா சிட்டியில் இதன் தொடக்க விழா மற்றும் டிக்கெட் விற்பனை நடைபெற்றது. இதில், இளையராஜா, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர். இளையராஜா பேசும்போது... "என்னைக் கடவுள் அளவுக்கு உயர்த்தி இங்கு சிலர் பேசினார்கள். அது தவறு. என்னை உயர்த்தி, கடவுளை தாழ்த்தக் கூடாது. நான் சாதாரணமான மனிதன். உங்களைப் போன்றே நானும் ரத்தம், சதை கொண்ட மனிதன். நான் இசை வழங்குபவன் அவ்வளவுதான். இதில் வேறுபாடு எதுவும் கிடையாது. என் இசை நிகழ்ச்சியின் தொடக்க விழாவே பிரமாண்டமாக இருக்கிறது. பிப்ரவரியில் நடக்கும் நிகழ்ச்சி இன்னும் பிரமாண்டமாக இருக்கும் என நினைக்கிறேன்'' எனத் தெரிவித்தார். 2-ஆம் தேதி பாராட்டு விழாவும், 3-ஆம் தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பாராட்டு விழாவில், இந்திய மட்டுமில்லாமல் பல வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபலங்களும் பங்கேற்கின்றனர். தமிழக முதல்வர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பின்னணி பாடகர் எஸ்.பி.பி., நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழக பிரபலங்களை இந்த விழாவில் பங்கேற்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இரு நாள்களிலும் தமிழ்ப் படப் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

• சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுன் பணியாற்றியவர் எஸ்.பி.முத்துராமன். 75 படங்களை இயக்கியுள்ள இவர், பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். இவருக்கென பிரத்யேக அலுவலகம் இப்போதும் ஏவி.எம். ஸ்டுடியோவில் உண்டு. அங்கிருந்துதான் தன் வேலைகளை அவர் கவனிப்பார். இந்தநிலையில், யோகிபாபு எமதர்மராஜாவாக நடிக்கும் "தர்மபிரபு' படத்திற்காக எமலோக தளத்தை மிகப்பெரிய செலவில் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். அங்கு ஏதேச்சையாக சென்ற எஸ்.பி.முத்துராமன் அந்த தளத்தை பார்வையிட்டார். அவருக்கு படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தைச் சுற்றிக் காட்டினர். அதைப் பார்த்தவர், " இந்த ஏவி.எம். ஸ்டுடியோவில் எத்தனையோ பெரிய பெரிய தளங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அதெல்லாம் அந்த காலம். இக்காலத்தில் இப்படியொரு பிரம்மாண்ட தளத்தைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று பாராட்டினார். மேலும், அப்படத்தின் கதையையும் கேட்டறிந்து, கதை நன்றாக இருக்கிறது. நிச்சயம் வெற்றி பெரும் என்றும் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், "முன்பெல்லாம் படப்பிடிப்பு தளங்கள் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் அடுத்தடுத்த தளத்தில் ஒரே நேரத்தில் நடக்கும். ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பார்கள். இப்பொழுது வெறிச்சோடி கிடக்கிறது. அப்படியே ஒன்றிரண்டு நடந்தாலும், அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து ஒரு சிறிய வணக்கத்துடன் முடித்துக் கொள்கின்றனர்'' என்று தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

• கோலிவுட்டில் அறிமுகமாகி பாலிவுட் வரைக்கும் உச்சம் தொட்டவர் ஸ்ரீதேவி. தமிழகத்தில் சிவகாசியில் பிறந்த இவர், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தவர். ரஜினி, கமல், சிரஞ்சிவி, மோகன்லால் உள்ளிட்ட தென்னிந்திய உச்ச நட்சத்திரங்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்து புகழ் பெற்றார். பின்னர், பாலிவுட் சென்றவர் அங்கேயும் தனக்கென தனித்துவம் பெற்று பிரபலமானார். பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் போனி கபூரை காதல் மணம் புரிந்து குடும்பத்துடன் மும்பையில் தங்கினார். கடந்த ஆண்டு தனது உறவினர் வீட்டு திருமண விழாவில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி, அங்கு தங்கியிருந்த ஹோட்டல் குளியலறை தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்தார். தற்போது அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தி மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தமிழில் அஜித் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் அவர், தன் மனைவி ஸ்ரீதேவியின் வாழ்க்கையை மையமாக வைத்து ஹிந்தி மற்றும் பல்வேறு மொழிகளில் படம் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்கும் நடிகைக்கான தேர்வு நடந்து வருகிறது. 

• அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிப் பெற்ற படம் "கனா'. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றிவிழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது, "எனக்கு கிரிக்கெட் விளையாட தெரியாது என்றாலும், என்மீது நம்பிக்கை வைத்து முன்பயிற்சி அளித்து நடிக்க வைத்தனர். என்னைத் தேடி வரும் எல்லா படத்திலும் நடிக்க வேண்டும் என்று என் அம்மா ஆசைப்படுவார். ஆனால், "கனா' படத்தை பார்த்துவிட்டு, "இனிமேல் நீ நடிக்காவிட்டாலும் பரவாயில்லை. இந்த ஒரு படம் மட்டுமே உன் வாழ்நாளுக்கு போதும்' என்று சொன்னார். அவரது பாராட்டு என்னை உண்மையிலேயே நெகிழ வைத்தது. பத்து வயதில் என் தந்தையை இழந்தேன். ஆனால், அந்த குறையே தெரியாத அளவுக்கு அம்மா என்னை வளர்த்து ஆளாக்கினார். என்றாலும், படத்தில் நான் சத்யராஜின் மகளாக நடித்தபோது, என் தந்தையின் இழப்பை உணர்ந்து பார்த்தேன். இப்போதெல்லாம் படம் ஓடுகிறதோ, இல்லையோ வெற்றிவிழா கொண்டாடி விடுகிறார்கள். ஆனால், "கனா' படத்துக்கு நடப்பது நிஜமான வெற்றிவிழா'' என்றார். மற்ற படங்களை விமர்சித்த ஐஸ்வர்யாவின் இந்த பேச்சுக்கு வலைதளத்தில், ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு தனது சுட்டுரையில், ""யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது. விளையாட்டாக சொன்னதுதான் அந்த வார்த்தை. அது மற்றவர்களின் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.

More from the section

நகைச்சுவையும் ஓவியங்களும்!
இரண்டு சிங்கங்கள்
மிகப்பெரிய  கோயில்  விளக்கு!
தேன்காரிகளின் ரீங்காரங்கள்
சிரி... சிரி... சிரி... சிரி...