புதன்கிழமை 17 ஜூலை 2019

திரைக் கதிர்

By - ஜி.அசோக்| Published: 07th July 2019 02:49 PM

 

பாலியல் தொல்லை, சம்பளப் பிரச்னை, ஓரம்கட்டப்படும் பிரச்னை, குடும்பப் பிரச்னை என வெவ்வேறு பிரச்னைகளை பல ஹீரோயின்கள் எதிர்கொண்டிருக்கின்றனர். நடிகை அஞ்சலியும் அதற்கு விதிவிலக்கல்ல. சில ஆண்டுகளுக்கு முன் தனது சித்தியுடன் அஞ்சலிக்கு பிரச்னை ஏற்பட்டு சினிமாவிலிருந்து ஒதுங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 

நடிகர் ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியவர் இன்றுவரை மீளவில்லை. பிரச்னைகள் ஒருபக்கமிருந்தாலும் நடிப்பை விட்டுவிலகாமலிருக்கிறார் அஞ்சலி. இப்போதும் காதல் புகைச்சல் அடங்கவில்லை. 

"என்னுடன் நடித்த பல ஹீரோக்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. ஜெய் மட்டும்தான் இன்னும் திருமணம் ஆகாமலிருக்கிறார். நான் எப்போது திருமணம் செய்துகொள்வேன் என்று எனக்குத் தெரியாது. அப்படி திருமணம் செய்தால் ஒரு தமிழரைத்தான் திருமணம் செய்வேன்' என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அஞ்சலி.   அஞ்சலியின் இந்த பதிலையடுத்து ரசிகர்கள், நீங்கள் தேர்வு செய்யப்போகும் தமிழன் ஜெய்தானா? என கேட்டு வருகின்றனர். அதற்கு பதில் எதுவும் அளிக்காமல் மௌனமாக இருக்கிறார்.

"தங்கல்' ஹிந்தி படத்தில் ஆமிர்கானின் மகளாக நடித்த ஜைரா வசீம், காஷ்மீரைச் சேர்ந்தவர். தொடர்ந்து "சீக்ரெட்' சூப்பர் ஸ்டார் படத்திலும் நடித்தார்.  இப்படத்துக்காக தேசிய விருது பெற்றார். இந்த நிலையில் நடிப்பிலிருந்து விலகுவதாக ஜூலை }2 இல் அறிவித்தார். இது பற்றி அவர் கூறும் போது... "தங்கல் படத்தில் நடிக்க வரும்போது சினிமாவில் நடிப்பது பெருமையாக இருந்தது. தொடர்ந்து படங்களில் நடித்த போதும் நான் சிலருக்காவது ரோல் மாடலாக இருப்பேன் என மகிழ்ந்தேன். ஆனால் இப்போது எனது மதத்திலிருந்து நான் தூரம் செல்வதாக உணர்கிறேன். மதம் மீதான எனது நம்பிக்கைக்குப் பங்கம் வந்திருப்பதாகக் கருதுவதால் நான் சினிமாத் துறைக்கு முழுக்குப் போடுகிறேன். இனி படங்களில் நடிக்க மாட்டேன்' என்றார்.

தனுஷுடன் "மயக்கம் என்ன', சிம்புவுடன் "ஒஸ்தி'  படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய. இந்த இரு படங்களிலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். நடிப்புக்கு "மயக்கம் என்ன', கமர்ஷியலுக்கு "ஒஸ்தி' இரு வகையாக இவரது தமிழ் சினிமா பயணம் தொடங்கியது. ஆனால், அடுத்தடுத்த வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். திடீரென சினிமாவிலிருந்து விலகி சொந்தமாகத் தொழில் தொடங்கினார். இந்த நிலையில் வெளிநாட்டைச் சேர்ந்த ஜோ லிக்கல்லோ என்பவரைக் காதலித்து வந்தார். இந்தக் காதலை பற்றி சில மாதங்களுக்கு முன்புதான் அவர் வெளி உலகிற்குத் தெரிவித்தார். இதையடுத்து ஜோ லிக்கல்லோ உடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இந்த நிலையில் தமிழில் மீண்டும் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இப்போது தான் திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும் விரைவில் காதலரை மணப்பேன் என்றும் ரிச்சா தெரிவித்துள்ளார். கடந்த 2 வருடங்களாக அவர் ஜோவைக் காதலித்து வருகிறார்.

 

தெலுங்கு, கன்னடத்தில் பல படங்களில் நடித்தவர் தன்யா ஹோப். தமிழில் அருண் விஜய் ஜோடியாக "தடம்' படத்தில் நடித்திருந்தார். இப்போது "இன்று நேற்று நாளை' படம் தெலுங்கில் உருவாகிறது. இதை மோகன் இயக்குகிறார். சந்தீப் கிஷன் கதாநாயகனாக  நடிக்கிறார். இதில் சந்தீப் ஜோடியாக நடிக்க தன்யா ஒப்பந்தமாகியுள்ளார். "இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகம் தமிழில் உருவாக இருக்கிறது. அந்த படத்தை இயக்கிய ரவிக்குமார் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். அவர் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் நடிப்பில் படம் இயக்கி வருகிறார். இதனால் "இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகத்தை அவரது அசோசியேட் இயக்குநர் கார்த்திக் இயக்குகிறார். பட கதாநாயகன், கதாநாயகி ஆகியோர்  இன்னும் முடிவாகவில்லை.  

 

"அட்டகத்தி', "காக்கா முட்டை' என படத்துக்குப் பின் தன்னை வளர்த்துக் கொண்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.  உடலளவிலும், நடிப்பிலும் அத்தனை மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார். 

சில மாதங்களுக்கு முன் நடித்த "கனா' படத்தில் கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண் கிரிக்கெட்டில் எப்படி சாதிக்கிறார் என்ற கதாபாத்திரம் ஏற்றிருந்தார். இந்த வேடம் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்ததுடன் தெலுங்கில் இப்படத்தின் ரீமேக்கிலும் நடிக்க வாய்ப்பை பெற்றுத் தந்தது. "கனா' படம் தெலுங்கில் "கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி' பெயரில் ரீமேக் ஆகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீஸரை சிரஞ்சீவி வெளியிட்டார். அத்துடன் ஐஸ்வர்யாவை அழைத்து பாராட்டுத் தெரிவித்தார். "சிரஞ்சீவி பேசறேன்' என்ற குரலை தொலைபேசியில் கேட்டதும் துள்ளிக்குதித்த ஐஸ்வர்யா அவரது பாராட்டுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இதுபற்றி இணையதள பக்கத்தில், "அதுவொரு பெரிய ஆச்சரியம். மெகா ஸ்டார் சிரஞ்சீவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி டீஸரை மிகவும் ரசித்ததாகக் கூறினார். அவர் பேசியதை எண்ணி இன்றைக்கும் ஆச்சரியத்தில் இருக்கிறேன். அவருக்கு நன்றி. இது எனக்கு கிடைத்த பெரிய கவுரவம்' என குறிப்பிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா.

More from the section

வறண்ட விதர்பாவில் பேரீச்சம் பழ புரட்சி!
700 நெல் வகைகள்!
சொன்னால் நம்பமாட்டீர்கள்!
திரைக் கதிர்
பேல்பூரி