புதன்கிழமை 17 ஜூலை 2019

மண் உண்டியல்

DIN | Published: 07th July 2019 03:02 PM


மாலா அன்றும் வழக்கம்போல பள்ளியிலிருந்து வீடு திரும்பினாள்.  ஆனால், வீட்டில் நிலை வழக்கத்திற்கு மாறாக இருந்தது.  எடுத்தது எடுத்த இடத்தில் இருக்க வேண்டும் என அன்றாடம் போதிக்கும் அப்பா ஒருபுறம்,  கணவனின் பதட்டத்தில் தானும் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் அம்மா ஒருபுறம் என எதையோ தேடிக் கொண்டிருந்தனர். வீட்டில் வளர்க்கும் ஹஜுனோ எனும் பொமரேனியன் நாய்க்குட்டியும் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டிருந்தது. என்ன விசயம் எனத் தெரிந்தால்தானே இவளும் உதவி செய்வாள். 

""என்னம்மா ஆச்சு இப்படி சாமான்கள் கலைந்து கிடக்கே'' எனக் கேட்டபடி பள்ளிக்கு கொண்டு சென்ற தனது பைகளை வைத்துவிட்டு அம்மா அருகில் வந்தாள் மாலா.  

இவள் குரல் கேட்டு திரும்பி ""மாலா, வந்துட்டியா, எங்கே உன்னோட மண் உண்டியல்? அதைத்தான் தேடிட்டு இருக்கோம், வழக்கமா புத்தக அலமாரி அல்லது துணி அடுக்கி வைத்திருக்கிற பீரோவில்தானே வைத்திருப்பாய்'' எனக் கேட்டாள் அம்மா.  

 கேட்டு முடிப்பதற்குள் மாலா அதிர்ச்சியிலிருந்து மீள முடியா நிலைக்கு தள்ளப்பட்டாள்.  கிட்டத்தட்ட மயங்கிய நிலைதான் மாலாவிற்கு.  

அவளின் அம்மா, மாலாவின் தோளைத் தொட்டு, ""என்னாச்சு மாலா, எங்க வெச்சிருக்கே, என்ன நடந்தது ! ஏன் ஒரே இடத்தையே வெறிச்சுப் பார்க்கிறே ?'' அடுக்கடுக்காய் கேட்டாள் அம்மா.  அப்பாவும் அவள் அருகில் வந்து தோளைப் பிடித்து அவர் பங்கிற்கும் உலுக்க, மாலா நிதானத்திற்கு வந்தாள்.

திடீரென விழிப்பு நிலைக்கு வந்தவளாய் அப்பாவையும், அம்மாவையும் பார்த்தாள்.  அவர்கள் இருவரும் இவளின் நிலையைப் பார்த்ததும் பயந்துவிட்டனர்.  காரணம், அடையாளம் தெரியாதவர்களைப் பார்ப்பது போல மாலா தன் அப்பா, அம்மாவைப் பார்த்தாள்.  பிறகு நிதானத்திற்கு வந்தவளாய் அப்பாவின் கையைப் பிடித்து, ""அப்பா, மன்னிச்சுக்குங்க, நான் இன்று உண்டியலை பள்ளிக்கு எடுத்துச் சென்று, அங்கு வந்த ஆதரவற்றோர் இல்லத்து நிர்வாகிகளிடம் தந்துவிட்டேன்'' என்றாள்.  

வருடம் ஒருமுறை உடைக்கும் மண் உண்டியல்தான்.  அவ்வப்போது கிடைக்கும் சில்லறை நாணயங்களையும், பிறந்த நாள் மற்றும் முக்கிய விழாக்காலங்களில் கிடைக்கும் ரூபாய்களையும் சேமித்து வைக்க அந்த மண் உண்டியலை மாலா பயன்படுத்தி வந்தாள்.  வருடாவருடம் தீபாவளி நேரத்தில் அதை உடைத்து அதை மாலாவின் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்திருந்தனர் பெற்றோர்.  எனவே, அன்றும் தனது விருப்பப்படிதான் செய்திருந்தாள்.  ஆனால், முன்கூட்டியே பெற்றோரிடம் தெரிவிக்காமல் விட்டதுதான் இப்போது பதட்டத்தை உண்டாக்கிவிட்டது.  

அவளின் அம்மா பதற்றத்துடன். ""என்ன மாலா நீ, சொல்லாம இப்படி பண்ணிட்டே, உங்க அப்பா அந்த மண் உண்டியல்ல அவசரத்துல தங்கச் காசு சேர்த்து போட்டுவிட்டார்.  சரி, வருடம் ஒருமுறை உடைத்து எடுக்கும்போது பார்த்துக்கலாம்னு நினைச்சிருக்கார்.  நீ என்னடான்னா, இப்படி செய்துட்டியே'' என்றாள்.  

""எதோ அவசரத்திற்கு தேவைப்படும் என எடுக்கலாம் என நினைத்து உங்கப்பா என்னிடம் கேட்டார்.  இப்ப என்ன செய்வது ?''

""சரி விடும்மா, 4 கிராம் தங்கக் காசுதான் , அந்த ஆதரவற்றோர் இல்லத்திற்குத்தானே போகும்? பரவாயில்லை இனிமேல் இதுகுறித்து யாரும் கவலைப்பட வேண்டாம், இயல்பாக இருங்கள்'' என சமாதானப்படுத்திவிட்டு அவளின் அப்பா நகர்ந்தார்.  வாசலில் அழைப்பு மணி கேட்டது.  மாலாவின் அப்பா கதவருகே சென்று பாதுகாப்பு துளை வழியாக யார் வந்திருக்கிறார்கள் எனப் பார்த்து பிறகு கதவைத் திறந்தார். 

அங்கே பள்ளி அலுவலகத்திலிருந்து மேலாளர் அபுபக்கரும்,  ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி பங்குத்தந்தை ராயப்பனும் வந்திருந்தனர்.  அவர்கள் தாங்கள் வந்த விபரத்தைச் சொல்லி ஒரு கவரிலிருந்து தங்க நாணயத்தை எடுத்துத் தந்தனர்.  உடன் மாலா தந்த நன்கொடைக்கான ரசீதும் தந்தனர்.

ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி, ""எங்களுக்கு இந்த மாதிரி தங்கக் காசு நன்கொடையாகப் பெறுவதில் பலவித சிக்கல் இருக்கிறது என்பதாலும், எதோ தவறுதலாக வந்திருக்கலாம் என்பதாலும் பள்ளி முதல்வரின் அனுமதி பெற்று வந்துள்ளோம்.  உங்க குழந்தையின் ஈகை குணத்திற்கு கர்த்தர் எந்நாளும் ஆசீர்வதிப்பார்.  உங்கள் அனைவருக்கும் எல்லாவித நன்மைகள் உண்டாகட்டும்'' என வாழ்த்தினார்.  

மாலா அப்பாவின் முகத்தையும், அம்மாவின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.  அவர்களின் முகத்தில் புன்னகை மட்டுமல்ல, நிம்மதியும் அதே சமயத்தில் தங்கள் மகளின் செயலைக் கண்டு பெருமிதமும் அடைந்தனர். பள்ளி மேலாளரும் நன்றி சொல்ல வந்திருந்தவர்கள் விடைபெற்றனர்.  வீட்டிலே இப்பொழுது அமைதியும் ஆனந்தமும் பொங்கியது.  அப்பா மாலாவிற்கு என புதிதாக வாங்கி வைத்திருந்த மண் உண்டியலை எடுத்துத் தந்தார்.  மாலா அந்த மண் உண்டியலை வாங்கிக்கொண்டு ஆசையோடு அப்பாவைக் கட்டிக்கொண்டாள்.  கூடவே ஜுனோ நாய்க்குட்டியும் வாலாட்டியபடி மாலாவின் காலடியில் வந்து படுத்துக் கொண்டது. 

 

More from the section

வறண்ட விதர்பாவில் பேரீச்சம் பழ புரட்சி!
700 நெல் வகைகள்!
சொன்னால் நம்பமாட்டீர்கள்!
திரைக் கதிர்
பேல்பூரி