புதன்கிழமை 23 ஜனவரி 2019

வெறும் ஆக்ஷன் மட்டுமே இருக்காது! 

By  - ஜி.அசோக்| DIN | Published: 14th October 2018 10:00 AM

"திமிரு பிடிச்சவன்'  பாய்ச்சலுக்கு ரெடி. திருவிழா முடித்த சாமி மாதிரி வந்து அமர்ந்தார் இயக்குநர் கணேஷா. ""எங்கே பார்த்தாலும் விஜய் ஆண்டனி போலீஸ் உடையில் கம்பீரமாக மீசையை முறுக்கிட்டு மிரட்டுறாரே...?'' என்றால் வெள்ளையாகச் சிரிக்கிறார். ""அதெல்லாம் நீங்க  உற்றுப் பார்க்க வேண்டும் என்று எடுத்த ஸ்டில்ஸ்தான். விஜய் ஆண்டனியின் முதல் ஆக்ஷன் படம் இது'' என தன்மையாகப் பேசுகிறார் கணேஷா. "நம்பியார்' படத்துக்குப் பின் மீண்டும் கதை சொல்ல வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த கதையை விஜய் ஆண்டனியிடம் சொல்லியிருந்தேன். லைன் கேட்டு விட்டு அதை கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்ட சொல்லியிருந்தார். ஆக்ஷன் படம் என்றாலும், துடித்து அலற வைக்கிற ஆக்ஷன் இருக்காது. எல்லாமே கதையோடு சம்பந்தப்பட்டுத்தான் இருக்கும். விஜய் ஆண்டனியிடம் ஒரு வழக்கை விசாரிக்கிற நிலை வருகிறது. அது சுற்றி சுற்றி அவர் குடும்பம் வரைக்கும் போய் நிற்கிற மாதிரி பாதிப்பு வந்து விடுகிறது.  கதையை மீறி விஜய் ஆண்டனி எதையும் செய்யமாட்டார். ஒரு மெலிதான லைன்தான். அதை இப்போது நடக்கிற சம்பவங்களோடு சேர்த்து சுவராஸ்யம் கூட்டியிருக்கிறேன். எப்படி வர வேண்டும் என நினைத்தேனோ,  அப்படியே திரையிலும் வந்திருக்கிறது'' என்றார். மேலும், அவர் கூறியது:  

கதைக்குள் விஜய் ஆண்டனி வந்து எப்படி உருவெடுத்திருக்கார்...?

விஜய் ஆண்டனிக்கு  முதல் போலீஸ்  படம்.  எந்த  ஒரு  ஹீரோவும்  ஆக்ஷன் ஹீரோவாக திரும்பியதற்கு ஒரு போலீஸ் கதைதான் காரணமாக இருந்திருக்கும்.  பொதுவாக சராசரி மனிதர்களுக்கு அனுபவம் குறைவுதான். மிஞ்சி மிஞ்சிப் போனா தினமும் ஏழெட்டு பேரை புதிதாக சந்தித்து பேசினாலே அதிகம்.  ஆனால், போலீஸ் வாழ்க்கை அப்படியில்லை. ஒரு வழக்கோடு ஆறு மாதம் கூட புழங்க வேண்டியிருக்கும். அப்படிப் பார்த்தால் அவர்கள் சந்திக்கிற மனிதர்கள், அவர்களின் சூழ்நிலை எல்லாமே வித்தியாசமாக இருக்கும்.  சில வழக்குகள் ரொம்பவும் விசித்திரமா, சிக்கலாக, அவிழ்க்க முடியாத புதிரா இருக்கும்.  அதற்கேற்ற மாதிரி இயங்குவதே சிரமமானது. இது ஒரு சாமானிய போலீஸ்  அதிகாரியின் கதை. இது ஒரே ஒரு போலீஸ் அதிகாரியின் கதையும் கிடையாது. நான் பார்த்த, கேட்ட, படித்த நிறைய விஷயங்களின் தொகுப்பு.

கதை அனுமதிக்கிற, பொருந்துகிற அளவுக்குத்தான் ஆக்ஷன். விஜய் ஆண்டனியை  இன்னும் வேற தளத்துக்குக் கொண்டு போகிற படம்.  "திமிரு பிடிச்சவன்'  வெறும் ஆக்ஷன் மட்டும் கிடையாது... கோபம், பாசம், அழுகை, வெறி, கெத்து எல்லாம் சேர்த்து மாஸ் படம்.

லைன் ஓ.கே...  ரசிகர்களிடம் கதை பேசப் போவது என்ன...

இந்திய காவல்துறையில் பணியாற்றும் ஒருவன், பொது மக்களிடம் இருந்து எவ்வளவு விலகி இருக்கிறான், அதிகார மையங்கள் அவனை எப்படியெல்லாம் கேவலமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பது வரை தீவிரமாக யோசித்து திரைக்கதை எழுதியிருக்கிறேன்.  சிறுவர்களின் குற்றங்கள்தான் இந்த கதையின் பிரதானம். அவர்களின் உருவாக்கம் தொடங்கி, அதன் சம்பவங்கள் வரை எல்லாமே இதில் இருக்கும். போலீஸ் கதைகளில் 100க்கு 80 சதவீதம் வெற்றி அடைந்திருக்கிறது. . அதை ரிப்பீட் செய்ததில் சில படங்கள் தோற்றிருக்கலாம்.  திரைக்கதை எழுதும் போதே, சேகரித்த கதைகளே எக்கச்சக்கம் இருக்கும். நானே போலீஸ் ஸ்டோரியில் புதிதாக பத்துக் கதை இயக்க முடியும். ஓர் ஆளை நாம் சந்திக்க மட்டும்தான் செய்வோம். போலீஸ் அந்த ஆளை ஊடுருவிப் பார்க்கும். கண்காணிக்கும். விட்டுட்டு வேடிக்கை பார்க்கும். விட்டுத்தான் பிடிக்கும். நிச்சயம் "திமிரு பிடிச்சவன்'  நீங்கள்  பார்த்த எந்தப் படமும்  மாதிரி இருக்காது.

நிவேதா பெத்துராஜ்.... என்ன ஸ்பெஷல்..?

ஆமாம்.  அவருக்கென தனி ரசிகர் வட்டம் இங்கே உண்டு.  அதை விட  அவரிடம் எந்தப் பிரச்னையும் இல்லை. கதையைக் கேட்டதும் நிவேதா சம்மதம் சொல்லி விட்டார்.  நிவேதாவும் இதில் போலீஸ். விஜய் ஆண்டனி சார் கூடவே பயணிக்கிற மாதிரி ஒரு இடம்.  காதல், அன்பு, நேசம், பாசம் எல்லாம் வேலை செய்கிற இடத்தில் கிடைத்தால் எப்படியிருக்கும். அப்படி ஒரு விதமாக கதை இருக்கும்.  படத்தில் நிவேதாவுக்கு அருமையான ரோல்.  நடித்துக் கொண்டு இருக்கும் போதே அவர் அதை உணர்ந்ததுதான் விசேஷம்.

"நம்பியார்'  படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்தன... ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறலையே..?

இன்னும் என்னைப் பார்க்கிறவர்கள் அந்தப் படத்தைப் பற்றிக் கேட்பார்கள். "ஏன் சார், பெரிய சக்சஸ் இல்லையே?'ன்னு அனுதாப விசாரிப்புகள் கூட நடக்கும். எனக்கு இப்போது என்ன வேண்டும் என்றால்,  தியேட்டரில் என் பக்கத்தில இருக்கிற ஒரு ரசிகன், கைதட்டி, விசிலடித்து என் படத்தை ரசிக்க வேண்டும்.  அதைத்தான் "திமிரு பிடிச்சவன்'  படத்தில் எதிர்பார்க்கிறேன். முதலில் காலூன்ற மக்களுக்கு பிடித்த படத்தைப் கொடுக்க வேண்டும். நமக்கென்று ஓர் இடம் வந்து விட்ட பிறகு நமக்குப் பிடித்த  படத்தைப் கொடுப்போம். இப்படி ஓர் ஓட்டத்தில்தான் ஓடிக் கொண்டு இருக்கிறேன்.  

More from the section

உடல் ஆரோக்கியமும், மன வளர்ச்சியும் அதிகரிக்கும்!
தினம்  ஒரு  மொழி  பேச...!
ரேஸ் பைக் சாம்பியன்!
தமிழ் சினிமா 2018
இசை தூறல்கள்!