சனிக்கிழமை 16 பிப்ரவரி 2019

ஆசிய விளையாட்டுப் போட்டி - 2018: எதிர்பார்த்ததும் - பெற்றதும்!

Published: 03rd September 2018 12:25 PM

ஆகஸ்ட் 18 -இல் தொடங்கி செப்டம்பர் 2- ஆம் தேதி வரை நடைபெற்று நிறைவடையும் 18- ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு விளையாட்டு ஆர்வலர்கள் பிரியா விடை சில மணிநேரங்களில் தரப்போகிறார்கள். இம்முறை ஆசிய போட்டியில் 277 வீரர்களும், 247 வீராங்கனைகளும் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டனர். வீரர் வீராங்கனைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பதக்கங்களில் எதிரொளிக்கவில்லை. ஆனால் புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 
2010 , 2014 - ஆம் ஆண்டு ஆசிய போட்டிகளில் இந்தியாவிற்கு கிடைத்த இருபத்தைந்து தங்கப் பதக்கங்களில் பத்து பதக்கங்களை வீராங்கனைகள் மட்டுமே வென்றிருந்தார்கள். 1970 - ஆம் ஆண்டு ஆசிய போட்டியில் 400. மீ. ஓட்டத்தில் வெற்றி பெற்ற கமல்ஜீத் சந்து தான் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி. பதினாறு ஆண்டுகளுக்குப் பின் 1986 -இல் நான்கு தங்கப் பதக்கங்களை அடுத்தடுத்து வென்று இன்றுவரைக்கும் ஒரு மகா சாதனைப் பெண்ணாக நிற்பவர் பி.டி.உஷா. அடுத்தடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகளின் பதக்க பங்களிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. 2002 - ஆம் ஆண்டின் ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்கு கிடைத்த பதினொன்று தங்கப் பதக்கங்களில் ஆறு பதக்கங்கள் வீராங்கனைகள் வென்றவை. 2002 ஆசிய போட்டியில் 1500. மீ. ஓட்டப்போட்டியில் நான்கு நிமிடங்கள் ஆறு விநாடிகளில் கடந்த சுனிதா ராணியின் சாதனையை இன்று வரை யாரும் தகர்க்கவில்லை. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து, தங்கப் பதக்கம் பெறும் வீராங்கனைகள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 
இந்தோனேஷியாவில் ஜாகர்த்தா, பாலம்பங் நகரங்களில் நடந்த போட்டியில் இந்தியாவின் நம்பிக்கைகளாக இருந்தவர்கள் நட்சத்திர அந்தஸ்து பெற்றிருக்கும் தடகள ஓட்ட வீராங்கனை ஹிமாதாஸ், சித்ரா, இறகுப் பந்தாட்டக்காரர் பி.வி.சிந்து, சாய்னா நேவால் , ஜிம்னாஸ்டிக் தீபா கர்மாகர், மனு பாகேர், சீமா புனியா, டூட்டி சந்த், ஸ்வப்னா பர்மன், ஓட்ட வீரர் முகம்மது அனஸ், இவர்கள் அனைவரும் உலகப் போட்டிகளில் முத்திரை பதித்தவர்கள். 
ஃபின்லாந்தின் டாம்பையர் நகரில் சமீபத்தில் நடந்த சர்வதேச தடகள கழகத்தின் (ஐ.ஏ.ஏ.எஃப்) இருபது வயதுக்கு கீழுள்ளவர்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் ஹிமா தாஸ். 400 மீட்டர் தூரத்தை 51.46 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். ஹிமா, தடகள ஓட்டத்தில் இந்தியாவின் சார்பாக தங்கப் பதக்கம் பெற்றிருக்கும் முதல் வீராங்கனை. புகழின் வெளிச்சத்தில் ஹிமா உச்சத்தைத் தொட... ஆசிய விளையாட்டிலும் ஹிமா தங்கப் பதக்கத்தைத் தட்டிக் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தாலும் ஆசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் மட்டுமே அவரால் பெற முடிந்திருக்கிறது. 
400 மீ. ஓட்டப் பந்தயத்தில் பி.டி. உஷா 51.61 நொடிகளில் கடந்த சாதனையை முறியடித்தவர் பெணாமல், இவர் அதே தூரத்தை 51.23 நொடிகளில் கடந்தார். ஹிமா பயிற்சி ஓட்டத்தின் போது 51.13 நொடிகளில் கடந்தாலும், அகில இந்திய சாதனை நிகழ்த்தியிருப்பவர் மஞ்சித் கவுர், 51.06 நொடிகளில் 400. மீ. தூரத்தைக் கடந்தார். அகில உலக சாதனை மரிட்டா கோச் என்பவரின் 47.60 நொடிகள். ஹிமாவின் அடுத்த இலக்கு ஐம்பது நொடிகளுக்கு குறைவாக 400. மீ. தூரத்தைக் கடக்க வேண்டும் என்றாலும் 50.59 விநாடிகள் எடுத்துக் கொண்டதால் வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. ஹிமா அசாதாரண உயரங்களைத் தொடுவார் என்ற கணிப்பில் ஹிமாவுடன் மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. தடகளத்திற்கு வெளியே ஹிமா தொடர்பான அனைத்து விஷயங்களையும் இந்த நிறுவனம் கையாளுமாம். இதில் ஹிமா தோன்றும் விளம்பரங்களும் அடங்கும். 
" இந்த ஒப்பந்தத்தின் மூலம், இனி நான் எனது முழு கவனத்தையும் பயிற்சிகளில் செலுத்த முடியும்'' என்று சொல்லும் ஹிமாவின் குடும்பத்தினரின் ஏழ்மை இந்த ஒப்பந்தத்தால் மாறும். 
சித்ரா - கேரளத்தில் பாலக்காட்டைச் சேர்ந்தவர். சென்ற ஆண்டு லண்டனில் நடந்த உலகப் போட்டியில் திறமையிருந்தும் தன்னைத் தேர்வு செய்யாதது குறித்து உரிமைப் போர் நடத்தியவர். அனைத்து கேரளமும் சித்ராவுக்கு ஆதரவு தந்தது. சித்ரா 1500. மீ. தூரத்தை குவாஹாத்தியில் சென்ற ஜுன் 29-இல் சுமார் நான்கு நிமிடங்கள் பதினொன்று விநாடிகள் நேரத்தில் ஓடிக் கடந்து ஆசிய சாதனையை ஏற்படுத்தியிருப்பவர். "ஆசிய போட்டியில் ஏதாவது ஒரு பதக்கம் வென்று தேசியக் கொடியைப் பிடித்துக் கொண்டு அரங்கில் நிற்க வேண்டும். அதுதான் என் கனவு. எனக்கு நடந்தவைகளை நான் மறக்கத் தயாராக இருக்கிறேன்'' என்று சொல்லும் சித்ராவின் கனவு நனவாக வேண்டும். 
ஆகஸ்ட் 29 நிலவரப்படி தங்கப்பதக்கம் பெற்ற பெண் வீராங்கனைகள் இரண்டே இரண்டு பேர். மல்யுத்தத்தில் வினேஷ் பொகாட், கைத் துப்பாக்கி 25 மீ. சுடுவதில் ராஹி ஜீவன் சார்னோபத். பாலக்காட்டைச் சேர்ந்த பி. யு. சித்ரா இந்த வரிசையில் சேர வாய்ப்புண்டு. 
நீளம் தாண்டுதல், 200 மீ. ஓட்டம், 100 மீ. தடை தாண்டுதல் உள்ளிட்ட ஏழு வகையான போட்டிகளைக் கொண்ட ஹெப்டத்லான் போட்டியில் பங்குபெறும் ஸ்வப்னா பர்மனின் இரண்டு கால்களிலும் தல ஆறு விரல்கள். வழக்கமான காலணியில் அதிக விரல்கள் உள்ள பாதத்தை வைத்துக் கொள்வதில் பல அசெüகரியங்கள். 
சமீபத்தில் துருக்கியில் நடந்த உலகப் போட்டி ஒன்றில் தங்கப்பதக்கம் வென்றார் தீபா கர்மாகர். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தீபாவுக்கு பயிற்சியின் போது அடிபட்டு சிகிச்சை பெற்று வந்தார். மீண்டு வந்தவர் மீண்டும் ஆசிய போட்டியில் காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலக நேரிட்டது. 
குறி பார்த்துச் சுடும் போட்டியில் கைத்துப்பாக்கிப் பிரிவில் வீராங்கனையான மனு பார்க்கர் பதினாறு வயதுக்காரர். ஆசிய போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் மிகவும் குறைந்த வயதுக்காரர். கோல்ட் கோஸ்ட் உலகப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். ஆசிய போட்டியில் விலக நேரிட்டது. 
டுட்டி சந்த் ஒடிஷா மாநிலத்தின் ஓட்டப்புயல். 100 மீ. , 200 மீ. தூர தடகள ஓட்டக்காரர். பி.டி.உஷாவுக்குப் பிறகு 100 மீ ஓட்டத்தில் எந்த வீராங்கனையும் தங்கப் பதக்கம் வென்றதில்லை. டுட்டி சந்த் வெள்ளிப் பதக்கம் பெற்றிருக்கிறார். ஒன்றரை கோடி பரிசை ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த மஞ்சித் சிங் நேரம் கிடைக்கும் போது கால்நடைகளைக் கவனிக்கப் போய்விடுவார். நிரந்தர வேலையில்லை இவருக்கு. இவரது அப்பா குண்டு எறிவதில் வீரர். அப்பா சொல்லித்தான் தடகள ஓட்டத்தில் மஞ்சித் பங்கு பெற்று வருகிறார். திருமணமாகி நான்கு மாத மகன் இருக்கிறான் . 800. மீ. போட்டியில் இவர் பெற்ற தங்கப்பதக்கம் அரசு வேலையை வாங்கித் தரும் என நம்பலாம். 
ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஆற அமர நின்று விளையாடி படிப்படியாக உயர்ந்தவர். "பதக்கம் வாங்குவதில் எனக்கு அவசரம் ஏதுமில்லை.. அதனால் இன்று உலகில் ஈட்டி எறிவதில் முதல் ஆறு வீரர்களில் ஒருவனாக இருக்கிறேன்'' என்கிறார். 
அம்பு எய்வதில் வெள்ளிப்பதக்கம் பெற்றிருக்கும் ரஜத் சவுகான் "படித்தவன் உயர்வு பெறுவான்... விளையாடுபவன் உருப்படமாட்டான்'' என்று கேட்டு வளர்ந்தவராம். பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற ஐந்தாவது முறை தேர்வு எழுதியுள்ளார். ஒரு மாதிரியாக தேர்வும் பெற்றுவிட்டார். விளையாட்டு சொல்லித்தரும் கல்லூரியில் சேர உள்ளார். 
"ஆசிய போட்டியில் வெண்கலம் பெறுவது உலகப் போட்டியில் தங்கம் பெறுவதைவிட மகத்தானது' என்று சொல்பவர்கள் வெண்கலப் பதக்கம் பெற்றிருக்கும் இந்திய டேபிள் டென்னிஸ் குழுவினர். ஷரத் கமல், சத்தியன், அந்தோணி அமல்ராஜ் இந்தக் குழுவில் இடம் பெரும் வீரர்கள். ஆசிய போட்டியில் டேபிள் டென்னிஸில் இப்போதுதான் இந்தியா தனது கணக்கை துவங்கியுள்ளது. 
ஸ்குவாஷ் விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் கார்த்திக், சவுரவ் மூவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்திருப்பதால் தமிழக அரசு தலா இருபது லட்சம் பரிசினை அறிவித்துள்ளது. 
400.மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்ற தருண் அய்யாசாமிக்கு முப்பது லட்சம் பரிசினை தமிழக அரசு வழங்கும். 
2016 - ஒலிம்பிக்சில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து அதற்குப் பிறகு பல வெற்றி தோல்விகளை சந்தித்து வந்திருக்கிறார். அண்மையில் உலக சாம்பியன் போட்டியில், ஒலிம்பிக்சில் தன்னை வெற்றி கண்ட கரோலினா மெரினிடம் கசப்பான தோல்வியைப் பெற, வெள்ளிப் பதக்கம் மட்டுமே சிந்துவுக்கு கிடைத்தது. ஆசிய போட்டியில் தன்னை ஐந்து முறை வென்ற சீன தய்பய் வீராங்கனையான தய் ட்சு யிங்கிடம் சிந்து ஆறாவது முறையாகத் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றிருக்கிறார். 2016 ரியோ ஒலிம்பிக்சில் தய் ட்சு யிங்கை சிந்து வென்றுள்ளார். "விளையாட்டில் நான் செய்த தவறுகள் தய்க்கு வெற்றி படிகளாக அமைந்து விட்டன. நான் கொஞ்சம் பொறுமையுடன் விளையாடியிருக்க வேண்டும்'' என்று சிந்து கூறியிருக்கிறார். எதிராளியின் வீச்சிற்கு ஈடு கொடுக்க இன்னும் பயிற்சி தேவை என்பதைத் தானாகவே புரிந்து கொண்டிருக்கும் சிந்துவுக்கு தங்கம் கை தவறிப் போனதை இயல்பாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். சிந்து உண்மையிலேயே வெற்றி தோல்வியை ஒன்றாகக் கருதும் பண்பட்ட விளையாட்டு வீராங்கனை என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார். 
தங்கம் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்த முன்னணி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பலருக்கும் ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கமே கிடைத்திருக்கிறது. தீபா கர்மாகர், மனு பாகேர் போன்றவர்களுக்கு பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை. 
ஆசிய விளையாட்டுப் போட்டியில் எட்டாவது இடத்தைப் பிடித்த இந்தியாவுக்கு சில அதிர்ச்சிகள் கிடைத்துள்ளன. முதல்முறையாக ஆசிய விளையாட்டு போட்டியில் கபடி போட்டி பிரிவுகளில் தங்கப்பதக்கம் எதுவும் இல்லாமல் இந்திய ஆண் - பெண் கபடி அணிகள் திரும்புகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 1990-ஆம் ஆண்டு கபடி அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்திய ஆடவர் அணி கபடிப் போட்டியில் முதலாவதாக வந்து தங்கம் வென்று வந்தது. 2010 , 2014 ஆசிய போட்டியில் இறுதி சுற்றில் ஈரான் அணியை தோற்கடித்து இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. கபடி ஆட்டத்தின் நுணுக்கங்களுடன் மல்யுத்த பயிற்சியும் பெற்ற ஈரான் கபடி வீரர்கள் இந்த ஆசிய போட்டியில் இந்தியாவை தோற்கடித்து அதிர்ச்சியைத் தந்துள்ளனர். கபடி போட்டியில் மாபெரும் சக்தியாக இருந்து வந்த இந்தியா தற்போது கபடியிலும் தோல்வியை தழுவத் தொடங்கியிருப்பதாய் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. 
ஒரு காலத்தில் ஹாக்கி விளையாட்டிலும் இந்திய அணியின் ஆண்கள் அணி ராஜாங்கம் நடத்தி வந்தது. மெல்ல மெல்ல தனது வலுவினை இழந்து முகவரியையே இந்தியா இழந்துவிட்டது.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இந்திய பெண்கள் பிரிவு கபடி இறுதியாட்டத்தில் இரான் பெண்கள் அணியிடம் தோல்வியடைந்தது. "இதை வைத்து கபடியில் இந்தியாவின் ஆதிக்கம் தவிடு பொடியாகிவிட்டது என்று சொல்ல முடியாது. போட்டியில் வெற்றி தோல்வி சகஜம்'' என்கிறார் கோச் ராம்பீர் சிங்
படகுப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக துழாவி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. ஆண்கள் "Quadruple sculls' போட்டியில் சவர்ன் சிங், தத்து பொக்கானல், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் அடங்கிய அணி தங்கப் பாதகத்தைப் பெற்றதில் நிம்மதி.
ஆசிய விளையாட்டில் அறுபது வயதைத் தாண்டிய ஆண்களும் பெண்களும் பங்கு பெற்றுள்ளார்கள் என்றால் நம்ப முடிகிறதா ?
அறுபத்தைந்தைத் தாண்டிய ஹேமா தியோரா, கிரன் நாடார் என்பவர்கள் இந்தியா சார்பில் பிரிட்ஜ் எனப்படும் சீட்டாட்டத்தில் அதே வயதுடைய ஆண்களுடன் சேர்ந்து அணி அமைத்து ஆடி வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்கள். ஆண்கள் அணி தனியாக ஆடி வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் இந்த ஆண்டுதான் முதல் முறையாக பிரிட்ஜ் என்னும் சீட்டாட்டப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பெட்ரோலிய துறை அமைச்சரான முரளி தியோராவின் மனைவிதான் ஹேமா தியோரா. முதலில் பாவம் என்று கருதப்பட்ட சீட்டாட்டத்தில் ஹேமா கல்யாணத்திற்குப் பிறகு லயித்துப் போனாராம். பிறகு சாம்பியன் பட்டம் பெறும் அளவுக்கு சீட்டாட்டத்தில் திறமை பெற்றார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பாக சீட்டாட்டம் ஆடிய கிரண் நாடாருக்கு அறுபத்தேழு வயதாகிறது. கிரணின் கணவர் வேறு யாருமல்ல. ஹெச் சி எல் டெக்னாலஜி நிறுவனத்தின் உரிமையாளர் சிவ நாடார். கிரணும் இந்த சீட்டாட்டத்தில் பல வெற்றிகளைக் குவித்துள்ளார்.
- பிஸ்மி பரிணாமன்


 

More from the section

அன்பும், போராட்டமும்தான் நிரந்தரம்!
மிக மிக அவசரம்
காசியாத்திரை 2
நெஞ்சில் ஒரு ஓவியம்
இளைஞனின் சமூக கோபம்