செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

சென்னையில் ஒரு நாள் சந்தை!

DIN | Published: 11th September 2018 10:45 AM

சென்னை வளசரவாக்கம் ஆவின் சந்திப்பில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் விளைபொருள்கள் சந்தையில் விற்பனையானது என்றால் நம்ப முடிகிறதா! இதற்கு முழுமுதற் காரணம் பண்ருட்டி அருகேயுள்ள ஆனத்தூர் விவசாயி எஸ்.தியாகராஜன் தான். இவர், "சன்னீ பீ' என்ற அமைப்பின் மூலம் சென்னையில் 12 இடங்களில் காய்கறி விற்பனையகம் நடத்தி வருகிறார். இது மட்டுமின்றி உயர்தர உணவகங்கள், விமானப் பயணிகளின் உணவுக்கும் காய்கறிகளை சப்ளை செய்கிறார். இந்த ஒருநாள் சந்தை குறித்து எஸ். தியாகராஜன் கூறுகையில்:

"காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விளையும் முக்கிய விளைப் பொருட்கள் பலவற்றை நாள்தோறும் விவசாயிகளிடமிருந்து 40 மெட்ரிக் டன் அளவில் கொள்முதல் செய்து குறைந்த பட்சம் 6 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரத்துக்குள் விநியோகிக்கிறோம்.
இதனால், விவசாயிகளின் எதிர்பார்ப்பு என்ன என்பதை உணர்ந்த காரணத்தால் பிரம்மாண்டமான அரங்கை அமைத்து3 மாதத்திற்கு ஒருமுறை காய்கறி சந்தை நடத்தி வருகிறோம். இதன் மூலம் விவசாயிகள் இடைத்தரகர் இன்றி மக்களிடம் நேரடியாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்தோம்.
முதன்முறையாக ஜனவரி 2018- இல் காய்கறி சந்தையை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவிலும், 2-ஆவதாக வேளச்சேரி ஃபினிக்ஸ் மாலிலும், 3-ஆவதாக வளசரவாக்கம் ஆவின் சந்திப்பிலும் நடத்தியுள்ளோம். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த சந்தையில் தமிழகம் மட்டுமின்றி மஹாராஷ்ட்ரா, இமாச்சலபிரதேசம், கர்நாடக சிக்பல்லாபூர், பெங்களூரிலிருந்து பெருவாரியான விவசாயிகள் தங்களது விளைப்பொருள்களுடன் வந்திருந்தனர்.
சுமார் 160 வகையான காய்கறிகள், பழ வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பார்வையிட்டனர். அன்றைய ஒரு நாள் மட்டும் சுமார் ரூ. 7 லட்சம் வசூலானது அந்தத் தொகை அனைத்தும் விவசாயிகளுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டது. 
முதல் முறை நடத்திய சந்தையில் 60 விவசாயிகளும், 2 -ஆவது முறை நடத்திய சந்தையில் 75 விவசாயிகளும், தற்போது 3 -ஆவதாக நடத்திய சந்தையில் 100 விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர். 
இந்த சந்தையில் அதிக அளவில் பப்பாளி, சிம்லா ஆப்பிள், மாதுளை பழங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கினார்கள். விவசாயிகளுக்கான தங்கும் வசதி, உணவு போன்றவற்றை நாங்கள் இலவசமாக வழங்கி வருகிறோம்'' என்கிறார் தியாகராஜன். 
- ஏ.எஸ்.கணேஷ்
படங்கள் : அண்ணாமலை
 

More from the section

எம்ஜிஆரின் கண் கண்ட கடவுள்!
சிந்தை கவர்ந்த  திருவிழாக்கள் 55: கராட்சு குன்சி மிதவைகள் திருவிழா
என்றும் இருப்பவர்கள்! - 3. கு.அழகிரிசாமி
சீன- தமிழர் உறவு: கல்வெட்டு சொல்லும் உண்மைகள்!
பயணங்களில் அபூர்வம் நிகழ்கிறது!