புதன்கிழமை 17 ஜூலை 2019

விலங்குகளின் அன்பில் அப்பழுக்கு இல்லை! 

By - ஜி.அசோக்| Published: 07th July 2019 01:23 PM

 

""பிச்சை எடுக்கும் யானையின் கண்களில் அசைகிறது பிறந்த பெருவனம்....'' என்ற மலையாளக் கவிஞர் அய்யப்பனின் கவிதை இருக்கிறது. இதுதான் இந்தக் கதைக்கான முதல் உத்வேகம். கதைக்காகக் கவிதையை மேற்கோள் காட்டி பேசத் தொடங்குகிறார் இயக்குநர் ஜெகதீசன் சுபு. "சிகை' படத்தின் மூலம் சிறந்த அறிமுகம் கொடுத்தவர். இப்போது "பக்ரீத்' படம் மூலம் கதை சொல்ல வருகிறார். ஒட்டகம், அதன் வாழ்வு என இதுவரை தமிழில் பதிவேறாத சூழலில்  வருகிறது படம். 

ஒட்டக பின்னணியில் ஒரு கதை... எப்படி தொடங்கியது....

சாப்பாடு, சம்பளம், துயரம், சந்தோஷம் எனக் கிடைக்கும் வாழ்வு, எல்லோருக்கும் அமைவது இல்லை. கனவு, லட்சியம், வேட்கை எனத் துரத்தும் வாழ்வில் எங்கேயோ போய் நிற்கிறோம். எல்லாம் இருந்தும் மனசு, அன்புக்கு ஏங்குகிறது. வன்மம் இல்லாத உலகுக்குத் தவிக்கிறது. எப்போதும் பரிசுத்தமான காதலுக்குத் தவிக்கிறது. இப்படியான ஒரு பயணத்தில், வட இந்திய கிராமங்களில் சுற்றிக் கொண்டிருந்தேன். ஐந்து மாத தனிமை பயணம் அது. சாப்பாடு, தண்ணீர் என எதுவும் பிடிக்காது.  நம்மூர் இட்லி, சாம்பார் என்று சாப்பாடு ஞாபகத்துக்கு வந்து போகிற அளவுக்கு ஏக்கம் சுற்றும். 

அப்போது ராஜஸ்தான் பக்கம் புஷ்கருக்கு அருகில் ஒட்டகச் சந்தை நடக்கிற நேரம், மூவாயிரம் ஒட்டகங்கள் கூடும் பெரும் சந்தை அது. ஒட்டகம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது, இந்த மண்ணை விட்டு எங்கே போனாலும், ஒட்டகத்தால் வாழ முடியாது. குறிப்பாக மற்ற உணவு எதுவும் பிடிக்காது என்றார்கள்.  அப்போதுதான் எனக்கும், அந்த ஒட்டகத்துக்குமான மன நிலைப்பாட்டை ஒருங்கிணைத்துப் பார்த்தேன். ஒரு ஒட்டகம்  நம்மூருக்கு வந்தால், எப்படியிருக்கும்... அங்கேயிருந்துதான் இந்தக் கதைக்கான புள்ளி தொடங்கியது. அந்த ஒட்டகத்தை இங்கே கொண்டு வருகிறவர், ஒரு விவசாயி என்பதைப் பின்னணியாகக் கொண்டு எழுதி திரைக்கதை அமைத்தேன். தன் ஊரைத் தாண்டாத ஒரு விவசாயிக்கு ஓர் ஒட்டகம் கிடைத்தால்.... இதுதான் இதன் புள்ளி.

அடுத்தக் கட்ட நகர்வாக என்ன நிகழும்...

தன் ஊரிலிருந்து அதிகபட்சம் மூன்று கிலோ மீட்டர் தூரம் கூடப் பயணிக்காத ஒரு விவசாயி விக்ராந்த். அவர் மனைவி வசுந்த்ரா. இவர்களின் மகள். ராஜஸ்தானில் இருந்து இங்கே வரும் ஓர் ஒட்டகம், இவர்களின் வளர்ப்புக்கு வருகிறது. ஆனால், இங்கேவுள்ள சூழல், கால நிலை, வெப்ப மாற்றம், உணவு எனப் பல காரணங்களால் அந்த ஒட்டகத்தால் இங்கே இயல்பாக இருக்க முடிய
வில்லை. சரி, ராஜஸ்தானிலேயே அதைக் கொண்டு போய் விட்டு விடலாம் என முடிவுக்கு வருகிறார் விக்ராந்த். ராஜஸ்தானில் இருந்து இங்கே சுலபமாக வந்து விட்ட ஒட்டகம், இங்கேயிருந்து அங்கே செல்லுவதற்கு ஆயிரம் சட்ட, திட்டங்கள் உண்டு. இந்தச் சூழலில்  ஒட்டகத்தோடு ராஜஸ்தானுக்குப் பயணமாகிறார் விக்ராந்த். கவலைகளையும் எதிர்காலம் குறித்த பதற்றங்களையும் கடக்க முடியாத பிரிவுகளையும் கடந்து இருவரும் பயணம் போகிறார்கள். 

கதையின் உள்ளடக்கமாக என்ன இருக்கும்...

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் மனிதர்களின் பெரும் பிரச்னை. நம்பிக்கை, அன்பு எல்லாம் பொய்யாகும் போதுதான், எல்லாம் கசந்து போகிறது. விலங்குகளிடம் அது எதுவும் இல்லை. அதன் அன்பில் அப்பழுக்கு இல்லை. இந்த மன நிலையை விலங்குகளோடு வாழும் பலரிடம் நான் பார்த்திருக்கிறேன். நம்பிக்கை இன்மை நிறைந்த மனித உறவுகளை மனதளவில் துரத்தியவர்கள், பிராணிகளின் பேசா அன்பை நிழலாக்கி கொள்கிறார்கள்.

இங்கே நிகழ்வதும் அப்படித்தான். இந்தப் பூமியோடும், மனித வாழ்க்கையோடும் பிற உயிர்களுக்கு இருக்கும் தொடர்பு என்பது மிக முக்கியமானது. நமக்குத் தெரிந்ததெல்லாம் நேரடியாக, அதுவும் உயிரினங்களை அழித்து அடையும் நன்மைகள்தான். ஆனால் மறைமுகமாக நாம் உயிர் வாழவே இந்த உயிரினங்கள் மிகவும் அவசியமாக இருப்பதை நாம் அறிந்திருக்கிறோமா? எறும்பிலிருந்து யானை வரை நாம் வாழும் இந்தப் பூமியின் சுற்றுச்சூழலுக்கும்,  நம் உயிருக்கும் பல வகையில் அதன் வழக்கமான நடவடிக்கைகள் மூலம் உதவுகின்றன.

ஒட்டகம், ராஜஸ்தான் வரைக்குமான பயணம் என படப்பிடிப்பில் சவால் தனியாக இருக்குமே....

ஒட்டகத்தை நடிக்க வைப்பதில் எந்தச் சிரமமும் இல்லை. அதை இங்கே கொண்டு வருவதில்தான் ஆயிரம் சிக்கல்கள். 2015-ஆம் ஆண்டிலேயே ஒட்டகத்தைக் கொண்டு வருவது சட்ட விரோதம் என ஒரு தீர்ப்பு உள்ளது. இதில் இன்னொரு விஷயம், ஒட்டகத்தை ராஜஸ்தான் விட்டு அனுப்பவே அங்குள்ள நிர்வாகம் மறுக்கிறது. இதற்கான விவாதம், சட்ட அணுகுமுறையே சுமார் 8 மாதங்கள் வரை போனது. 

பின்னர் அங்குள்ள மாவட்ட ஆட்சியரிடம் பேசி, அவரிடம் கதை சொல்லி அவரின் ஒப்புதலும் கிடைத்தது. அதன் பின்னரே ஒட்டகம் சென்னைக்கு வந்தது. 100 நாள்கள் வரைதான் ஒட்டகம் இங்கே இருக்க அனுமதி. அதற்குள் நடிகர்கள் அதனுடன் பழக வேண்டும். படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று பழக்க வேண்டும் இப்படி நிறையச் சவால்கள். எல்லாமே இப்போது மன நிறைவு.

More from the section

அரசு பள்ளியை தரம் உயர்த்தும் இளைஞர்கள்
இசையறிஞர் ப. முத்துக்குமாரசாமி நினைவாக... இசையோடு வாழ்வு!
மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகள்!
என்றும் இருப்பவர்கள்!
சிதைவின் விளிம்பில் சித்தன்னவாசல்!