வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

ட்ரோன்களை இயக்க விருப்பமா?

By - இரா.மகாதேவன்| Published: 11th September 2018 04:59 PM

அண்மைக் காலமாக திருமண விழாக்கள், திருவிழாக்கள், பள்ளி, கல்லூரி ஆண்டு விழாக்கள் போன்றவற்றில் ட்ரோன் (Drone) எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் வீடியோ, புகைப்படங்கள் எடுப்பதை பார்த்திருப்போம். தரையில் இருந்து கை கட்டுப்பாட்டு கருவி மூலம் இயக்கப்படும் இந்த குட்டி விமானங்களின் பயன்பாடு இன்று பல்வேறு துறைகளிலும் இடம் பெறத் தொடங்கியுள்ளது.   

அனுமதி பெறாமலும், முன் அறிவிப்பு இல்லாமலும்   இதுபோன்ற குட்டி விமானங்கள் சிலரால் இயக்கப்படும்போது, அது  பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்துவதோடு,   அதை இயக்கியவர்கள் சட்டப் பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடுவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

இதற்கு முன்னதாக நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்திய ராணுவம் மட்டுமே இந்த ட்ரோன்களை பயன்படுத்தியது. என்றாலும், தொழில்நுட்ப வளர்ச்சி, சர்வதேச வர்த்தகம், இந்திய வர்த்தக}தொழில் முன்னேற்றம் கருதி, இதற்கான கொள்கை விதிகளை வகுத்து, சில கட்டுப்பாடுகளுடன் ட்ரோன்களை தனியார் நிறுவனங்கள் வணிகரீதியாக இயக்குவதற்கு இந்திய விமானப் போக்குவரத்துத் துறை தற்போது அனுமதி அளித்துள்ளது.

இந்த விதிமுறைகள் வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. இந்த விதிமுறைகளை அனைவரும் அறிந்து வைத்திருப்பது, குறிப்பாக, ட்ரோன்கள் இயக்குவதில் ஆர்வமுள்ள இளைஞர்கள் அறிந்து வைத்திருப்பது அவர்கள் சட்டப் பிரச்னைகளில் சிக்காமல் இருப்பதற்கும், அவற்றை தங்களுடைய தொழில் சார்ந்து, வேலைவாய்ப்பு சார்ந்து பயன்படுத்திக் கொள்ளவும் உதவும்.

நில அளவை, கண்காணிப்பு, போக்குவரத்து மேற்பார்வை, தேடுதல் மற்றும் மீட்பு, தீயணைப்பு, தட்பவெப்ப கண்காணிப்பு போன்றவற்றில் ட்ரோன்கள் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவையல்லாமல், வேளாண்மை, ஃபோட்டோ, வீடியோ, சரக்கு சேவைப் பணிகளிலும் இவற்றின் 
பயன்பாடு அதிக அளவில் உள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறையின் அனுமதிப்படி, ட்ரோன்கள் 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 250 கிராம் வரை எடையுள்ளவை நானோ (Nano) என்றும், 2 கிலோ வரை எடையுள்ளவை மைக்ரோ (Micro) என்றும், 25 கிலோ வரை எடையுள்ளவை ஸ்மால் (Small) எனவும், 150 கிலோ வரை எடையுள்ளவை மீடியம்  (Medium) என்றும், அதற்கு அதிகமான எடை உள்ளவை லார்ஜ் (Large) என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அரசின் விதிப்படி, 18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தபட்சம் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு 10}ஆம் வகுப்பு முடித்தவர்கள் மட்டுமே ட்ரோன்களை இயக்க வேண்டும். அவர்களும், விமானப் போக்குவரத்துத் துறையின் அங்கீகாரம் பெற்ற பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இவையல்லாமல், ட்ரோன் இயக்குவோர் குறிப்பிட்ட அந்தப் பகுதியில் உள்ள காவல் துறையின் அனுமதி, வான் போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவின் அனுமதி (Air Traffic Control } ATC))  விமானப்படையின் தடையில்லா சான்று (Air Defence Clearance}ADC), விமான தகவல் மையம் (Flight Information Centre}FIC) ஆகியவற்றின் அனுமதியைப் பெறவேண்டும்.

இந்த விதிகள் Remotely Piloted Aircraft Policy (RPA Policy) என அழைக்கப்படுகிறது. எனவே, இந்த ட்ரோன்களுக்கு அடையாள எண் (Unique Identification Number}UIN), ஆளில்லா குட்டி விமானங்களை இயக்குவதற்கான உரிமம் (Unmanned Aircraft Operator Permit}UAOP) ஆகியவற்றைப் பெறவேண்டும். மேலும், இது தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். எனினும், நானோ ட்ரோன்கள், மைக்ரோ ட்ரோன்களுக்கு உள்ளூர் காவல் நிலையத்தில் அனுமதி பெறவேண்டும்.

இந்த ட்ரோன்கள் அனைத்தும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு அலுவலரின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப நுண்ணறிவு முகமையின், தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம், மத்திய நுண்ணறிவு முகமை (CIA) ஆகியவற்றின் கண்காணிப்பில் இருக்கும். 

எனினும், ட்ரோன்களைத் தயாரிக்கவும், பயன்படுத்தவும் விண்ணப்பித்தால், அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ள நிலையில், விமானப் போக்குவரத்துத் துறை 7 வேலை நாள்களில் உரிமங்களை வழங்கும். இந்த 
உரிமம் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். ஆனால், திருத்தவோ, மாற்றவோ முடியாது.

ட்ரோன்களை பகல் நேரத்தில் மட்டுமே இயக்க வேண்டும். ஒருவர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ட்ரோன்களை இயக்கக் கூடாது. 

மும்பை, தில்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களில் இருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள்ளும், இதர விமான நிலையங்களில் இருந்து 3 கி.மீ. சுற்றளவுக்குள்ளும் ட்ரோன்களை 
இயக்கக் கூடாது.

நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக தடைசெய்யப்பட்ட இடம், கட்டுப்படுத்தப்பட்ட இடம், அபாயகரமான இடங்களிலும், சர்வதேச எல்லையில் இருந்து 25 கி.மீ. தொலைவுக்குள்ளும் ட்ரோன்களை இயக்கக் கூடாது. மேலும், கடற்கரையில் இருந்து கடல்பகுதியில் 500 மீ. தொலைவுக்கு மேலும், ராணுவ தள பகுதிகளில் 3 கி.மீ., முக்கியமான அரசு கட்டடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் 5 கி.மீ. சுற்றளவுக்குள்ளும் ட்ரோன்களைப் பறக்கவிடக் கூடாது.

அதோடு, ட்ரோன்களில் விலங்குகளையோ, மனிதர்களையோ அல்லது அபாயகரமான பொருள்களையோ வைத்து அனுப்பக்கூடாது. ட்ரோன்களால் எந்தவிதத்திலும் பொதுமக்களுக்கோ, அவர்களின் உடைமைகளுக்கோ சேதம் ஏற்படக்கூடாது. ட்ரோன்களுக்கு 3}வது நபர் காப்பீடு செய்யப்படுவது அவசியம். இந்த விதிகளில் எது மீறப்பட்டாலும், இந்திய தண்டனைச் சட்டம் பிரகாரமும் (ஐடஇ), அண்ழ்ஸ்ரீழ்ஹச்ற் அஸ்ரீற்}1934}இன் பிரகாரமும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

More from the section

பிளாஸ்டிக் பைக்கு மாற்று "ரிஜெனோ' பை!
விண்கல பூமியில் 54 இளம் மாணவ விஞ்ஞானிகள்!
வேலை...வேலை...வேலை...
உன்னத உறவே நட்பு! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.
உணவு பதப்படுத்துதலில் பொறியியல் படிப்புகள்!