புதன்கிழமை 17 ஜூலை 2019

எல்லாம் கூகுள் மயம்!

DIN | Published: 09th July 2019 11:51 AM

சமூக ஊடகங்களில், குறிப்பாக கட்செவியில் (Whatsapp), கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையை குறித்து ஒரு காணொளியும் அதனுடன் தொடர்புடைய செய்தி ஒன்றும் சமீபத்தில் பலரால் வேகமாகப் பகிரப்பட்டது. அது சுந்தர் பிச்சை அவர் படித்த ஐ.ஐ.டி. க்கு செல்வதற்காக மேற்கு வங்கத்தின், கரக்பூர் தொடர்வண்டி நிலையத்தில் எந்தவித படாடோபமுமின்றி நடைமேடையில் காத்திருந்ததை பற்றியது. கடந்து ஆண்டு மட்டும் ரூ.1,300 கோடிகளை தனது வருமானமாக, சம்பளம் உட்பட, பெற்ற சுந்தர் பிச்சையின் எளிமையும் தன்னடக்கமும் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டது.
சுந்தர் பிச்சை தலைமைப்பொறுப்பில் இருக்கும் கூகுள் என்பது அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை (Cloud Computing), இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயல்படுகிறது. கூகுள் தேடுபொறி இதன் முதன்மையான சேவை ஆகும்.1998 -இல் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டின் வருமானம் இந்திய பண மதிப்பில் ஏறக்குறைய பத்து இலட்சம் கோடி. 
இன்று உலகெங்கும் அதிகமாக உச்சரிக்கப்படும் பெயரும், பயன்படுத்தப்படும் தேடு பொறி இயந்திரமும் இதுதான். இன்று உலகின் ஒவ்வொரு மூலையிலும், ஒவ்வொரு நொடியும் யாரோ பல்லாயிரக்கணக்கானோருக்கு கணிப்பானாக, காலநிலை வழிகாட்டியாக, திசை தூரம் காட்டுபவராக, நுகர்வோர் குறைதீர்ப்பு பணியாளாக, மொழிபெயர்ப்பாளராக, நேரக்காப்பாளராக, நாட்காட்டியில் நிகழ்வுகளை திட்டமிட கைகொடுக்கும் உதவியாளராக, நினைவூட்டல் (Reminder) தோழனாக, புகைப்படத் தேடல் (Photo search) மற்றும் வெளிநாட்டு பணத்தின் மதிப்பைக் கணக்கிட என்பது போன்ற எண்ணிலடங்காப் பணிகளுக்கு தவிர்க்க முடியாத துணைவனாக கூகுள் உருவாகியிருக்கிறது.
கூகுளின் இன்றியமையாத்தன்மை இன்று மாணவர்களை அவர்களது சுயமிழந்த பலவீனமானவர்களாக மாற்றியிருக்கிறது என்றால், அது மிகையில்லை. நேரம் பார்க்க கடிகாரம், கூட்டல்... கழித்தல்... கணக்குப் பார்த்திட கணிப்பான், செய்தியும்.... பாடல்களும் கேட்டிட வானொலி மற்றும் தொலைக்காட்சி சாதனங்கள், புகைப்படம் அல்லது நிழற்படம் எடுத்திட ஒளிப்படக் கருவி என்று தனித்தனியாக கருவிகள், மின்னணு சாதனங்கள் இருந்த நிலை மாறி, எல்லாமே இன்று ஒரு கையடக்க ஆண்ட்ராய்ட் கைபேசிக்குள் வந்துவிட, அதில் மைய நாற்காலி போட்டு கம்பீரமாக அமர்ந்திருக்கிறது கூகுள். 
ஒன்றோடு ஒன்றை கூட்டவோ கழிக்கவோ வேண்டுமென்றால் கூட... கணிப்பானை தேடும் நிலையில் மாணவர்கள். மாணவர்களின் மூளை வளர்ச்சிக்கும், செயல்திறனுக்கும் அடித்தளமாக இருந்த வாய்ப்பாடு படிக்கும் பழக்கம் இன்று வழக்கொழிந்து போய்விட்டது. "வாய்ப்பாடு' புத்தகம் என்றொன்று தனியாக இருந்தது, இன்றைய தலைமுறை மாணவர்களுக்குத் தெரியவே தெரியாது. இப்படியொரு நிலைவந்ததால்தான் குருப் - IV முதல் இந்திய ஆட்சிப் பணிகளுக்கான தேர்வுவரை கேள்வியாக கேட்கப்படும் அறிவுத்திறன்சோதனை, கணக்கு மற்றும் கணக்கு சார்ந்த வினாக்களுக்கு விடையளிக்க பெரும் பட்டதாரிகள் எல்லாம் காலம் போன காலத்தில் வாய்ப்பாடு படிக்க வேண்டியது அவசியமாகியிருக்கிறது. 
சாதாரணமாக பள்ளி மற்றும் கல்லூரி பாடப்புத்தகங்களில் கிடைக்கும் தகவல்களைக் கூட, கையில் இருக்கும் புத்தகங்களை ஒழுங்காகப் படிக்காத காரணத்தால், ஏதோ எங்கு தேடினும் கிடைக்காத அறிய தகவலாக கூகுளில் தேடுகிற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. பல நூறாண்டுகளாக வீட்டின் சமையலுக்கு வழக்கமாக வாங்கும் உப்பு எங்கு கிடைக்கும் என்று தேடுகிற அளவில் இருக்கின்ற இந்த பலவீனத்தை எனது பேராசிரியர், "இந்தக் காலத்து பசங்க, அவனுக வீட்டு கதவு எண், அம்மா.... அப்பா பெயர், அவனோட பிறந்த தேதி வரைக்கும் கூகுள்ல தான் தேடுறான்ப்பா'' என்று நக்கலாக கூறுவார்.
கூகுள் ஒரு தகவல் களஞ்சியமாக, பெட்டகமாக இருக்கிறது என்பதே ஒரு பொதுவான நம்பிக்கை. அது ஓரளவு உண்மையே. முழுமையாகப் பயன்படும் வகையில் உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும். "தீமைத் தன்மை இல்லாதிருத்தல்' என்பது கூகுளின் அதிகாரப்பூர்வமற்ற நோக்காக அறியப்படுகிறது. ஆனால், கூகுள் நமக்களிக்கும் எல்லா தகவல்களும் சரியானதுதானா? பிழைகளற்றதா? முழுமையானதா? என்பதற்கு எந்தவித உத்திரவாதமுமில்லை. 
கூகுள் தேடுபொறி இயந்திரம் (Search Engine) படிக்கின்ற மாணவர்களின் தேடலுக்கு உதவுவதற்கு பதிலாக, மாணவனின் அடிப்படையை உருவாக்கக்கூடிய, வளர்க்கக் கூடிய அறிவை தேடுவதற்கு பெருந்தடையாக இருக்கிறதோ என்கிற அச்சம் நமக்கு ஏற்படுகிறது.
மனிதன் தன் அன்றாட வாழ்க்கையின் செயல்களை இலகுவாக்க, சுலபமாக்க, எளிதாக்க எண்ணிலடங்காக் கருவிகளை, இயந்திரங்களைக் கண்டுபிடித்திருந்தாலும் அவை மனிதர்களைப் பலப்படுத்த வேண்டுமே தவிர, பலவீனப்படுத்தக் கூடாது. மாணவர்கள் இந்த பலவீனத்தை உணர்ந்து, சரியான தேடுதல்மூலம் அவர்களை பலமானவர்களாக உருவாக்கிக் கொள்வது நல்லது.
கே.பி. மாரிக்குமார் 
 

More from the section

மன்னனும்... மாணவர்களும்!
கணினிக்கு ஓர் இணையதளம்!
கட்டுமானத் தொழில்; இளைஞர்களுக்கு பயிற்சி!
ஒப்பீடு!
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 200 - ஆர்.அபிலாஷ்