செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

சமூகப் பொறுப்புணர்வு...பயிற்சி அளிக்கும் அமைப்பு!

DIN | Published: 09th July 2019 11:56 AM

தில்லி- நாட்டின் தலைநகர் என்பதையும் தாண்டி, பல வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது. கல்வி சார்ந்து அதன் வரலாற்றுச் சிறப்புகளுள் ஒன்று தேசிய பால பவன் (National Bal Bhavan). 
சிறுவர், சிறுமிகள், ஆர்வத்தோடு தங்கள் கற்பனையையும், அறிவையும் வளர்த்துக் கொள்வதற்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான இந்த பால பவன் உதவுகிறது. 
எதிர்கால ஆக்கப்பூர்வமான சிந்தனையாளர்கள், வடிவமைப்பாளர்கள், விஞ்ஞானிகள், தலைவர்கள், இரக்கமுள்ள மற்றும் சமூகத்திற்கு பங்களிக்கும் பொறுப்புள்ள குடிமக்களாக குழந்தைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது பால பவன். 
5-16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான இந்த செயல்பாட்டு மையம் பொம்மை ரயில் சவாரி, நூலகம், அறிவியல் பூங்கா, அருங்காட்சியகம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இங்கு பல்வேறு திட்டங்கள் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படுகின்றன. ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ற சூழலையும் குழந்தைகளுக்கு இது வழங்குகிறது. குழந்தைகளின் திறமையை வெளிக்கொண்டு வர வாய்ப்பு வழங்குகிறது. 
இங்கு குழந்தைகளின் படைப்புத் திறன் அடையாளம் காணப்பட்டு, கலை, செயல்திறன், எழுத்து, அறிவியல் புதுமை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோர் "பாலஸ்ரீ திட்டம்' மூலம் கெளரவிக்கப்படுகின்றனர். பால பவனின் தேசிய குழந்தைகள் அருங்காட்சியகம், நாட்டின் ஒரே குழந்தைகள் அருங்காட்சியகமாக விளங்குகிறது. மேலும், சில செயல்பாடுகள் வழியாக பல்வேறு பிரச்னைகள், கருப்பொருள்கள் குறித்தும், சமூகம் தொடர்பான வெகுஜன நடவடிக்கைகள் மூலமும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு உருவாக்கப்படுகிறது. இதையொட்டி, முறையான மற்றும் முறைசாரா கற்றல் மையமாகவும் பால பவன் செயல்படுகிறது.
இங்குள்ள தேசிய படைப்பு வள மையத்தின் (Creative Resource Centre) ஒருங்கிணைந்த பயிற்சித் திட்டம், படைப்புக் கலை, கலை நிகழ்ச்சி, அறிவியல் கல்வி, உடற்கல்வி மற்றும் இலக்கிய திறனாய்வு ஆகியவற்றில் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கிறது. காட்சி கலைப் பட்டறை (Visual Art Workshop) புதுமையான கற்பித்தல் உத்திகளை வகுப்பதில் பாடஆசிரியர்கள், கலை மற்றும் கைவினை ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள் ஆகியவர்களுக்கு ஒரு பொதுவான தளத்தை வழங்குகிறது. குழந்தைகளின் ஒருங்கிணைந்த கற்றலுக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சியாளர்களுக்கு வழி காட்டுதல்கள் மற்றும் கற்றல் வசதிகளை பால பவன் படைப்பு வள மையம் வழங்குகிறது. கலை, அறிவியல் மற்றும் அருங்காட்சியக நுட்பங்களில் ஆக்கப்பூர்வமான கற்பித்தல் நுட்பங்கள் மற்றும் கல்வி கருவிகளை உருவாக்கவும் இந்த மையம் உதவுகிறது. 
தில்லியில் உள்ள பால பவன், தேசிய அளவிலான பட்டறைகள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை மாநில பால பவனுடன் இணைந்து ஒருங்கிணைத்து செயல்படுத்துகிறது. அறிவியல் பூங்காக்கள், வானியல் அலகுகள், அருங்காட்சியகங்கள், கணினி ஆய்வகங்கள், சாகச பூங்காக்கள் போன்ற குறிப்பிட்ட திட்டங்களுக்கு தில்லி பால பவனின் இணைவுபெற்ற மாநில பால பவன்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. 
சர்வதேச அளவில், குழந்தைகளுக்கான முறைசாராக் கல்வி நிறுவனங்களில் ஒரு தனித்துவமான, முன்மாதிரியான நிறுவனமாக தேசிய பால பவன் விளங்குகிறது. அதோடு, பிற நாடுகளுடன் கலாசார பரிமாற்ற திட்டங்கள், குழந்தைகள் கூட்டங்கள், சர்வதேச ஒருங்கிணைப்பு முகாம்களையும் தில்லி பால பவன் ஏற்பாடு செய்கிறது. இதில், பிற நாடுகளின் குழந்தைகளும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
மேலும், சேர்ந்திசை, குழு ஓவியம், குழு பேரணிகள், குழு கலந்துரையாடல்கள், குழு எழுத்து படைப்புகள் மற்றும் படைப்பாற்றல் கண்காட்சிகள், அறிவியல் கண்காட்சிகள், ஒருங்கிணைப்பு முகாம்களை ஏற்பாடு செய்தல், குழுவாக மரக்கன்றுகள் நடுதல், சமூக பொறுப்பை ஊக்குவிப்பதற்கான குழந்தைகள் முகாம்கள் போன்ற மதிப்புமிக்க செயல்பாடுகள் மூலம் சமூகத்தில் ஒருவராக குழந்தைகள் மாற்றப்படுகின்றனர். 
தேசிய பால பவனின் 100 நாள் கல்வி நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக விமான சிமுலேட்டர்களை அமைக்க மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் முடிவு செய்துள்ளது. விமான சிமுலேட்டர் என்பது விமானம் மற்றும் அது பறக்கும் சூழலை செயற்கையாக உருவாக்கும் ஒரு கருவியாகும். தேசிய பால பவனில் விமான சிமுலேட்டர்களை அமைப்பதன் மூலம், விமானப் படையின் செயல்பாடுகளில் மாணவர்களுக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை அளிக்க இந்திய விமானப்படை மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.
குழந்தைகளுக்கு சிமுலேட்டர் பற்றிய தகவல்களை வழங்க வல்லுநர்கள் இருப்பார்கள். இந்த கருவி எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றிய ஆர்வத்தை குழந்தைகளிடம் தூண்டிவிடுவதன் மூலம் பாதுகாப்பு மற்றும் விமானப்படை பிரிவின் மீது மாணவர்களின் கவனம் அதிகரிக்கும் எனவும், இந்த நடவடிக்கை விமானப்படை குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் உருவாக்கும் என்றும் கருதப்படுகிறது.
குழந்தைகளின் அறிவை அதிகரிக்கும் முயற்சியில் விமான சிமுலேட்டர் குறித்து கற்பிப்பது, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தொடர் முயற்சிகளில் ஒன்று. இதையொட்டி, பால பவனின் 100 நாள் நிகழ்ச்சி நிரலில் பணியாற்ற பல்வேறு அமைச்சகங்கள் ஒன்றிணைந்துள்ளன. இந்த திட்டத்தை, இந்திய விமானப் படையுடன் இணைந்து, விமானப் படை தலைமை மார்ஷல் பி.எஸ். தனோவா ஆர்வமாக கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.


- ஆர்.மகாதேவன்

More from the section

மன்னனும்... மாணவர்களும்!
கணினிக்கு ஓர் இணையதளம்!
கட்டுமானத் தொழில்; இளைஞர்களுக்கு பயிற்சி!
ஒப்பீடு!
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 200 - ஆர்.அபிலாஷ்