புதன்கிழமை 17 ஜூலை 2019

மன நிறைவே வாழ்வின் உயர்வு! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்

DIN | Published: 09th July 2019 11:15 AM

தன்னிலை உயர்த்து! 52
 துரியோதனன் ஒருநாள் பீஷ்மர் மற்றும் பெரியவர்களிடம், தங்களது ஆச்சாரியரான துரோணர் தம் பக்கம் வெறுப்பையும், பாண்டவர்கள் பக்கம் அன்பையும் காட்டி வருவதாகக் கூறினான். அதற்கு துரோணர், "கல்வியானது அவரவர் அறிவிற்கு ஏற்றபடிதான் வளர்கிறது. உங்களுக்கு சந்தேகம் இருப்பின் நீங்களே ஒரு முறை அவர்களை ஆராய்ந்து பாருங்கள்' என்றார். உடனே குருகுல மைந்தர்கள் நூற்று ஐந்து பேரும் வரவழைக்கப்பட்டனர். பெரியோர்கள் திருதராட்டிரன் மைந்தர்களிடம், "ஒரு வீடும், சிறிது செல்வமும் அளித்து இந்தச் செல்வத்திற்கு வீடு நிறைந்த பொருட்களை வாங்கி வையுங்கள்' என்று சொல்லி அனுப்பினர். அதேபோல் பாண்டவர்களை அழைத்து வீடும், சிறிது செல்வம் கொடுத்தனுப்பினர்.
 திருதராட்டினுடைய மைந்தர்கள் நூறுபேரும் சிறிது செல்வத்தில் வீடு நிறையப் பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் அது வைக்கோல் ஒன்றுதான் என்று முடிவு செய்தனர். வைக்கோலை வாங்கி வீட்டை நிரப்பி கதவை மூடினர். தருமன் தனது நான்கு தம்பிமார்களுடன் ஆராய்ந்து, ஒரு பகுதி செல்வத்தில் விளக்குகளை வாங்கி வீடு முழுவதும் ஒளியேற்றினார். செல்வத்தின் ஒரு பகுதியை விருந்தினர்களை உபசரிக்கும் பொருட்களை வாங்கினார். மேலும், மலர்களை வாங்கி தோரணம் கட்டி அழகுபடுத்தினார். மீதமுள்ள செல்வத்தில் பன்னீர் மற்றும் சந்தன நறுமணப் பொருட்களால் வீட்டை மணக்க வைத்தனர்.
 பீஷ்மரும், திருதராட்டினனும் முதலில் துரியோதனன் வீட்டிற்குச் சென்றனர். துரியோதனன், "வீடு நிறைந்த பொருளாக வைக்கோல் வாங்கி அடைத்து வைத்துள்ளோம். ஆதலால் நாங்கள் வெளியே நிற்கிறோம்' என்றார். அதனைக் கேட்டதும் வந்தவர்கள் ஏளனமாய் அவர்களைப் பார்த்துவிட்டு, பாண்டவர்கள் வீட்டிற்குச் சென்றனர். அவர்களைப் பாண்டவர்கள் வரவேற்று பட்டுப்பாயில் அமர்த்தி, அறுசுவை உணவு படைத்தனர். அப்போது திருதராட்டினன், "நீங்கள் வாங்கிய வீடு நிறைந்த பொருள் என்ன?' என்று கேட்டார். அதற்கு பாண்டவர்கள், "வீடு நிறைந்த பொருள் ஒளியும், மணமுமின்றி வேறொன்றுமில்லை' என்றனர். அதனைக் கேட்டதும் மனநிறைவடைந்தார் பீஷ்மர்.
 நிறைவு என்பது பொருளால் நிரப்புவதல்ல, அன்பால் நிரப்பி அழகுபடுத்துவது. பொருளை வாங்கி தனக்குச் சேர்த்து வைப்பதல்ல. இருப்பதை, பிறர்க்குக் கொடுத்து மகிழ்வது. நிறைவு, வாழ்வின் உன்னதமான ஒரு மன உணர்வு. ஆரோக்கியமான மனிதனின் அடையாளம், மனநிறைவு. அது மனிதனின் அற்புதமான தருணத்தில் வெளிப்படும் பேருணர்வு.
 ஒரு மன்னரிடம் வேலைக்காரன் ஒருவன் எப்போதும் பாடிக்கொண்டு ஆனந்தமாக வேலை செய்தான். மன்னருக்கு ஆச்சர்யம். "எல்லா செல்வங்களையும் பெற்று, நாட்டிற்கே அரசானான நான் துன்பத்தோடும், வருத்தத்தோடும் இருக்கும்போது, ஒரு சாதாரண வேலைக்காரனான உன்னால் எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாக வாழமுடிகிறது?' என்று அவனிடம் கேட்டார். அதற்கு அவர், "மன்னா, நான் சாதாரணமானவன். எனக்கும் என் குடும்பத்திற்கும், வாழ்வதற்கு அதிகமான பொருட்கள் தேவையில்லை. தலைக்கு மேல் ஒரு கூரை, வயிற்றுக்கு உணவு, ஒரு சாதாரண உடை இவை போதும்' என்றான்.
 மன்னர் அமைச்சரை நோக்கினார். அமைச்சர் மன்னரிடம், "மன்னா! என்னால் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வழிவகை சொல்லத் தெரியாது. ஏனென்றால் மகிழ்ச்சியும், மனநிறைவும் அவரவர் மனத்தைப் பொறுத்தது. ஆனால், ஒருவரை மனநிறைவின்றி வாழ வழிவகை செய்ய முடியும்' என்றார். "அது எப்படி சாத்தியம்?' என்று கேட்க, ஒரு வாரம் அவகாசம் கேட்டார் அமைச்சர். மறுநாள் காலையில் அந்த வேலைக்காரனின் வீட்டின் முன்பு பொற்காசுகள் காசுகள் கொண்ட ஒரு பை கிடந்தது. அதனை எடுத்துப் பிரித்தார். அதில் அவன் பெயரிட்டு "இறைவனின் பரிசு' என எழுதப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்க்க, அதற்குள் பொற்காசுகள் இருந்தன. பொற்காசுகளைப் பார்த்து மகிழ்ந்தான். பின்னர் அவற்றை எண்ணினான். அதில் ஒன்பது பொற்காசுகளே இருந்தன.
 ஒன்பது பொற்காசுகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. பத்து தான் இருந்திருக்கும் என நினைத்தபோது, அவனது மகிழ்ச்சி அவனிடமிருந்து மெதுவாய்க் கடந்து போனது. அந்தப் பத்தாவது பொற்காசு எங்கே போயிருக்கும்? எனச் சுற்றும் முற்றும் தேடினான். அந்தத் தேடுதலில் அவனறியாத கவலை ஒன்று தொற்றிக் கொண்டது. தான் உழைத்து ஒரு பொற்காசைச் சேர்த்துவிட வேண்டும் என ஆசையாய் உறுதியெடுத்தபோது அவனுள் தோன்றிய அழுத்தம், வருத்தமாய் மாறியது. இந்த ஒரு பொற்காசு சேர்க்க எத்தனை மாதங்கள் பாடுபடவேண்டும் என யோசிக்க ஆரம்பித்தபோது, அவனது முகத்தோடு மனத்திலும் கவலை ரேகைகள் பரவ ஆரம்பித்தன. அன்று அந்த வேலைக்காரன் பணிக்குச் சென்ற போது உற்சாகமின்றி இருந்ததைக் கண்டதும், மன்னர் தனது அமைச்சரின் தந்திரத்தை உணர்ந்தார். அதே நேரத்தில் பொற்காசுகள் மகிழ்ச்சியைத் தந்தன. ஆனால், மனநிறைவைத் தரவில்லை என்பதை உணர்ந்தான் வேலைக்காரன். "போதும் என்ற மனம் ஏழையைப் பணக்காரனாக்குகிறது. போதாது என்ற மனம் பணக்காரனை ஏழையாக்குகிறது' என்பார் பெஞ்சமின் பிராங்க்ளின். பணம் மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் போதுமென்ற குணத்தை பெற்றுத்தர இயலாது.
 "ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
 பேரா இயற்கை தரும்'
 என்ற திருக்குறளின் மூலம் ஒருபோதும் திருப்தியடையாத ஆசையை ஒருவன் ஒழித்தால், அது அவனுக்கு எப்பொழுதும் நிலையான இன்பத்தைத் தரும் என்கிறார் நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
 மனநிறைவோடு வாழ்வது ஆரோக்கியத்தின் உச்சகட்டம். மனநிறைவு மனிதனின் அழுத்தத்தைக் குறைக்கும். ஆயுளைக் கூட்டும் பொறாமையைத் தவிர்க்கும். ஆசையை அகற்றும். அன்பைப் பெருக்கும். மொத்தத்தில் ஓர் அற்புத மனிதனை இந்த உலகிற்கு அர்ப்பணிப்பது மனநிறைவேயாகும்.
 வகுப்புகளில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தி மதிப்பெண் அறிவிக்கப்படுவதுண்டு. இயல்பாகவே எண்பது மதிப்பெண் எடுக்கின்ற ஒரு மாணவன் அன்று தொன்னூறு மதிப்பெண் எடுத்ததும் மகிழ்ந்தான். ஆனால், அதே நேரத்தில் அருகிலிருப்பவன் தன்னைவிட அதிகம் மதிப்பெண் பெற்றதும் அதுவரை கிடைத்த மகிழ்ச்சி காணாமல் போனது. மகிழ்ச்சியைத் தாண்டிய உணர்வு, நிறைவு, அது மனிதன் தன்னை பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவனிடமிருந்து பறந்துவிடுகிறது. மனிதன் ஏதாவது ஒன்றை அடைய வேண்டுமென்று அதை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கும்போது அவனிடமிருக்கும் நிறைவு நியாயமற்றுப்போகிறது.
 மாறாக, நிறைவான மனிதன் அன்பின் சொரூபம். ஆற்றலின் வடிவம். அத்தகையவர் எளிதில் உணர்ச்சி வசப்படுவதில்லை. எவரையும் உணர்ச்சிவசப்படவும் விடுவதில்லை. அவர்கள் எதையும் ஏற்கும் மனநிலை கொண்டவர்கள். "நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்ற பாங்கோடும், இவ்வுலகத்தில் செயல்பாடுகளெல்லாம் அனைவருக்கும் பொதுவானவை என்று எண்ணுபவர்கள்.
 கலையாத கல்வியும் குறையாத வயதும்
 ஓர் கபடு வாராத நட்பும்
 கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
 கழுபிணி இலாத உடலும்
 சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
 தவறாத சந்தானமும்
 தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
 தடைகள் வாராத கொடையும்
 தொலையாத நிதியமும் கோணாத கோலும்
 ஒரு துன்பமில்லாத வாழ்வும்
 அருள வேண்டும் என்று கல்வி, நீண்ட ஆயுள், நல்ல நட்பு நிறைந்த செல்வம், என்றும் இளமை, ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், வாக்கு தவறாத குணம், தடைவராது அளிக்கும் கொடை, செங்கோல் வழுவாத அரசன், துன்பமில்லாத வாழ்வு, இவையாவும் இருப்பின் அவன் குறைவில்லாத மனிதன் என்கிறார் அபிராமிபட்டர்.
 நிறைவான மனது என்பது தனது தேவையை மட்டும் பூர்த்தி செய்வதில்லை. மாறாக தன்னைச் சார்ந்தவர்களுக்கும், ஏழை எளியவர்களுக்குக் இரங்குகிறது. "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே!' என்ற தாயுமானவரின் பாடலும், "ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்' என்ற வள்ளலாரின் பாடல் வரிகளும், மனித வாழ்வின் நிறைகளின் மனப்பாங்குகள். இத்தகைய நற்பண்புகளை உருவாக்கும் திறன் கொண்டது மனநிறைவே. நிறைந்த மனதென்பது ஆற்றுக் கேணி போன்றது. அதில் அன்பு அள்ள அள்ள ஊற்றெடுக்கும். அதன் சுவையும் பன்மடங்கு கூடும்.
 தன்னிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்வது தான் மனநிறைவு. அது வாழ்வின் நிறைவுமாகும். மனநிறைவு முதலில் தன்னை ஏற்றுக் கொள்ளும், இவ்வுலகையும் ஏற்றுக் கொள்ளும். அத்தகையோரைத்தான் உலகம் ஏற்றுக் கொள்கிறது. வாழ்வில் குறைவு என்று எப்போதும் இல்லை. நிறைவு ஒன்றே உள்ளது என்ற சிந்தனை அவசியம். மேலும், நமக்கு எவ்வளவு தேவையென்று நினைக்கின்றோமா அதைவிடக் குறைவான அளவே உண்மையான தேவையாய் இருக்கும். போதுமென்ற குணம் இயற்கையிலே மனிதனிடமிருக்கும் ஓர் உன்னத குணம். ஆடம்பரம் என்பது நாமே உருவாக்கிக் கொள்கின்ற வறுமை. "தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியடையாத மனிதன், தனக்குத் தேவையானவற்றிலும் திருப்தியடைவதில்லை' என்கிறார் சாக்ரடீஸ். மனநிறைவுடன் வாழ்வது என்பது கிடைப்பதை மகிழ்ந்து கொள்வதின் நன்றிக்கடனாகும். அவ்வாறு தன்னிடமிருக்கும் பொருளுக்கு மதிப்பு கொடுப்பவரால் மட்டுமே மனநிறைவைப் பெற முடிகிறது. தனக்குக் கிடைத்தவற்றைப் மனநிறைவோடு ஏற்றுக் கொள்பவர்கள், மன அமைதியை அறுவடை செய்கின்றனர்.
 நிறைவேறாத ஆசைகள் நிராசைகளாகவும், பேராசைகளாகவும், இம்மண்ணில் சூறாவளியாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இச்சூறாவளியில் சிக்கிக் கொண்ட மனிதர்கள் மீண்டு வருவது கடினமே.
 ஒரு மன்னரைக் காண துறவி வந்தார். அவரைக் கண்டதும் மன்னன் மிகுந்த பணிவோடு முனிவரே, "தங்களுக்கு என்ன வேண்டும்?' என்றார். அதற்கு துறவி, "மன்னா! எனது பிச்சைப் பாத்திரம் நிறையும் வரை உங்களால் இயன்றதைத் தாருங்கள்' என்றார். "முனிவரே! இவ்வளவுதானா, உடனே தருகிறேன்' என்றார். முனிவரும் சிரித்துக் கொண்டே தனது திருவோட்டை நீட்டினார். "பொற்காசுகளால் அந்தத் திருவோட்டை நிரப்புங்கள்' என்று ஆணையிட்டார் மன்னர். ஒரு தாம்பூலத்தட்டு நிறைய பொற்காசுகள் கொண்டுவரப்பட்டு திருவோட்டில் போடப்பட்டன. ஆனால், அது நிறையவில்லை. பிறகு பொன்னும், பொருளும் கொண்டு வந்து போடப்பட்டன. அப்பொழுதும் நிறையவில்லை. மன்னர் ஆச்சரியத்தில் உறைந்தார். அரசாங்க கஜானாவே காலியானது. அப்பொழுதும் நிறையவில்லை.
 மன்னர் முனிவரிடம், "எப்படி இந்தத் திருவோட்டை நிரப்புவது?' என்று கேட்டார். அதற்கு முனிவர், "மன்னா! இந்தத் திருவோட்டை உங்களால் மட்டுமல்ல, இவ்வுலகில் வேறு எவராலும் நிரப்ப முடியாது. ஏனென்றால், இது பேராசையால் இறந்துபோன மனிதனின் மண்டை ஓடு' என்றார்.
 நிறைவற்ற மனது வாழ்வைத் தாழ்த்தும்;
 நிறைவான மனது வாழ்வை உயர்த்தும்!
 கட்டுரையாசிரியர்:
 காவல்துறை துணை ஆணையர்,
 நுண்ணறிவுப் பிரிவு.
 (நிறைவு பெற்றது)
 
 
 

More from the section

மன்னனும்... மாணவர்களும்!
கணினிக்கு ஓர் இணையதளம்!
கட்டுமானத் தொழில்; இளைஞர்களுக்கு பயிற்சி!
ஒப்பீடு!
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 200 - ஆர்.அபிலாஷ்