வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

திக்.. திக்... சூழ்நிலையில் தங்கம்!

DIN | Published: 05th September 2018 10:44 AM

ராஹி சர்னோபாத் - கைத் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண். கைத் துப்பாக்கியால் சுடும் ராஹி ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிச் சுற்றில் சந்தித்தது திக் திக் தருணங்கள்.
 வாய்ப்புகள் ஐந்து. அதில் எதிராளியை வெற்றி காண ராஹி குறைந்தது இரண்டு புள்ளிகளாவது அதிகப்படியாக பெற்றாக வேண்டிய கட்டாயம். செம அழுத்தத்தின் பிடியில் ராஹி சிக்கியிருந்தார். அடுத்தடுத்த நிமிடங்களில் என்ன நடக்கும் என்று ராஹிக்கே தெரியாது. ஆனால் எல்லாம் சுபமாக முடிந்தது. ராஹி மிக கவனமாக கடைசிநேர அழுத்தங்களில் மூழ்கிவிடாமல் மனதை ஒருநிலைப்படுத்த ஆசிய போட்டியில் கைத் துப்பாக்கி சுடுவதில் தங்கப் பதக்கம் பெறும் முதல் பெண் வீராங்கனையானார்.
 ராஹி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் கைத் துப்பாக்கி பிரிவில் கலந்து கொண்ட போது, இறுதிச் சுற்றில் 2 புள்ளிகளுக்குப் பின்தங்கியிருந்தார். இறுதிச் சுற்றில் மொத்தம் எட்டு வீராங்கனைகள் மோதினார்கள். அவர்களுக்குத் பத்து சுற்றுகள் தரப்படும். ஒவ்வொரு சுற்றின் போதும் போட்டியாளர் இலக்கை நோக்கி ஐந்து முறை சுடவேண்டும். இலக்கில் சுட்டால் ஒரு புள்ளி சுடுபவருக்குக் கிடைக்கும். நான்கு சுற்றுகள் நிறைவானதும் யார் யார் எத்தனை புள்ளிகள் எடுத்துள்ளனர் என்று கணக்கிடப்படும். அந்த முடிவில் குறைந்த புள்ளிகள் பெற்றவர் ஐந்தாவது சுற்றில் விளையாடாமல் வெளியேறிவிட வேண்டும். அதனால், ஐந்தாவது சுற்றில் ஏழு போட்டியாளர்கள் மட்டுமே இருப்பார்கள். ஐந்தாவது சுற்றின் முடிவில், மிகக் குறைந்த புள்ளி எடுத்தவர் வெளியேற வேண்டும். இந்த "வெளியேற்றம்' அடுத்தடுத்த சுற்றில் நடக்கும். அப்படி இறுதியான சுற்றில் இரண்டு போட்டியாளர்கள் தங்கம், வெளிப் பதக்கங்களுக்காக மோதுவார்கள்.. இல்லை, இல்லை சுடுவார்கள்.
 இறுதிச் சுற்றில் ஆரம்பத்திலிருந்தே ராஹி வைத்த குறி தப்பாது சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார். ஒரு தருணத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்த தாய்லாந்து வீராங்கனையான யாங்பாய்பூனை விட மூன்று புள்ளிகள் அதிகம் பெற்றிருந்த ராஹிக்கு சோதனை வந்தது ஏழாவது சுற்றில். இந்த சறுக்கலால், ஒன்பதாவது சுற்றின் இறுதியில் முப்பத்தி நான்கு புள்ளிகள் பெற்று யாங்பாய்பூன் முதல் இடத்திற்கு முன்னேற முப்பத்திரண்டு புள்ளிகள் பெற்று ராஹி இரண்டாவது ஸ்தானத்தில் நின்றார். இரண்டு புள்ளிகள் வித்தியாசம் இமயமலையாகத் தெரிந்தது.
 இறுதிச் சுற்று... ஐந்து முறை சுடும் வாய்ப்புகளில், யாங்பாய்பூனை விட குறைந்தது இரண்டு புள்ளிகளாவது அதிகம் பெற்றேயாக வேண்டிய நிர்பந்தம் ராஹிக்கு ஏற்பட்டது. அனைவரும் அது நடக்காது என்றே நினைத்தார்கள். அந்த திக் திக் நிமிடங்களில் இறங்கு முகத்திலிருந்த ராஹி கீழ் நோக்கி பயணிப்பார் என்றே கணிப்பு இருந்தது. ஆனால் பாதகமான அந்த சூழ்நிலை ராஹிக்குச் சாதகமாக அமைந்தது. இறுதிச் சுற்றில் ராஹி இரண்டு புள்ளிகளை மட்டுமே ஈட்ட முடிந்தது. யாங்பாய்பூன் இறுதிச் சுற்றில் சொதப்பி ஒரு புள்ளி கூட எடுக்கவில்லை. அதனால் ராஹி, யாங்பாய்பூன் தலா முப்பத்திநான்கு புள்ளிகள் எடுத்து சம நிலையில் நின்றனர். முதலாவது இடம் யாருக்கு என்று தீர்மானிக்க முடியாத நிலை. டை பிரேக்கர் மட்டுமே அதைத் தீர்மானிக்க முடியும்.
 ஆரம்ப டை பிரேக்கில் சம புள்ளிகளை இருவரும் எடுக்க சம நிலை தொடர்ந்தது. இரண்டாவது டை பிரேக்கர் தரப்பட்டது. இந்த சுடுதலில் ராஹி மூன்று புள்ளிகள் எடுக்க யாங்பாய்பூன் இரண்டு புள்ளிகள் மட்டுமே எடுத்தார். ராஹி தங்கப் பதக்கத்திற்கு உரியவர் ஆனார். நடைபெறும் ஆசியப் போட்டியில், இந்தியாவிற்கு நான்காவது தங்கப் பதக்கத்தையும் சேர்த்தார்.
 ராஹியின் சொந்த மாநிலம் மஹாராஷ்டிரா. இருபத்தெட்டு வயதாகிறது. ராஹி 25 மீட்டர் கைத் துப்பாக்கி கொண்டு சுடும் பிரிவில் 2010, 2014 காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கங்கள் பெற்றிருந்தாலும், 2014 -ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றவர். மூன்று முறை தொடர்ந்து போராடி ஆசிய போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கும் கனவை நனவாக்கியுள்ளார்.
 இரண்டு ஆண்டுகளுக்கு முன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக துப்பாக்கி ஏந்த முடியாமல் இருந்த ராஹி அதன் காரணமாக ரியோ ஒலிம்பிக்சிலும் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது. அதற்கிடையில் உக்ரைன்னைச் சேர்ந்த பயிற்சியாளர் காலமாகவே ராஹி துவண்டு போனார். ஒலிம்பிக்சில் பதக்கங்களை பெற்ற ஜெர்மனியைச் சேர்ந்த பெண் பயிற்சியாளரின் வழிகாட்டலில் ராஹி மீண்டு வந்து தங்கம் வென்றுள்ளார்.
 "வெற்றி தோல்வி எனது பயணத்தில் மாறி மாறி வந்துள்ளன. ஆசிய போட்டியில் அந்த திக் திக் தருணங்களை மறக்க முடியாது. இடைவெளி ஏற்பட்டாலும், தங்கப் பதக்கங்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களும் வரத்தான் செய்கின்றன'' என்கிறார் ராஹி.
 - கண்ணம்மா பாரதி
 
 

More from the section

மனதில் உறுதி வேண்டும்!மன நல நிபுணர் வந்தனா
பொங்கல் டிப்ஸ்..
சமையல்!
வெந்தயக் கீரையின் பயன்கள்...!
கறுப்பு நிறத்தைப் போக்குமா குங்குமப் பூ...?