செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

பத்மினி ஒரு சிறந்த மனிதாபிமானி! - லட்சுமி என்.ராவ்

Published: 05th September 2018 11:10 AM

நாட்டிய பேரொளி பத்மினி மறைந்து ஒரு மாமாங்கம் ஆகிறது. ஆம், இந்த மாதத்துடன் அவர் மறைந்து 12 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என சுமார் 250 படங்களில் நடித்து புகழ் பெற்ற பத்மினியின் ஆத்மார்த்த சிஷ்யையாக இருந்து பின்னர் உதவியாளராகவும் மாறியவர் லட்சுமி என். ராவ். இவர், நடன ஆசிரியை. எம்.ஜி.ஆர்., சிவாஜி, நடன ஆசிரியர்களான கோபாலகிருஷ்ணன், சத்யம், பத்மாசுப்ரமணியம் ஆகியோரின் பாராட்டையும் பெற்றவர். தன் வாழ்க்கையில் ஏற்பட்ட கரடு முரடான பாதை மற்றும் நடிகை பத்மினியுடன் பழகிய நாட்களை நினைவு கூறுகிறார் லட்சுமி என். ராவ்: 
"வாழ்க்கை பல்வேறு படிப்பினைகளை நமக்கு அளிக்கிறது. பலருக்கு சொர்க்கபுரியாகவும் சிலருக்கு தினம் தினம் பிரச்னைகளாகவும் மாறி விடுகிறது. கணவனும் மனைவியும் ஒருசேர இணைந்த ரயில் தண்டவாளங்களைப் போல் வாழ்க்கை ஓட்டத்தில் ஓடும்பொழுது, வாழ்க்கை இனிமையாகவும் சுவையாகவும் மாறி விடுகிறது. ஆனால், சிலரது வாழ்க்கையில் விதி விளையாடி விடுகிறது. ஏழையாக இருந்தால் அடிமட்ட பிரச்னைகள் நமக்கு அத்துப்படியாகிவிடும். ஆனால் பணம் கையில் புரண்ட பிறகு விதிவசத்தால் ஏழையாக மாறினால் என்ன செய்வது என்று அறியாமல் திக்கு முக்காடி திணறி சோகத்தின் உச்சிக்கே சென்றுவிடுவோம். அப்படிப்பட்ட வாழ்க்கையின் எல்லைக்கே ஓடி, ஓய்ந்து இன்று ஒவ்வொரு படியாக ஏறி, என்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளேன். 
ஸ்ரீரங்கப்பட்டினத்தில் பிறந்து, கதாகாலசேபம் செய்யும் தந்தை ராஜேந்திர ராவ் சொல்லிக் கொடுத்த நடன அசைவுகள் மூலம் ஓரளவு புகழ் பெற்றேன். சென்னை சென்றால் பிரபலம் ஆகலாம் என்று அறிந்ததன் விளைவு சென்னை வந்தோம். நடிகை பண்டரிபாயின் படத்தில் ஒரு வேடம், ஏ.பி.நாகராஜன் இயக்கிய முதல் படத்தில் ஒரு வேடம் என்று மெல்ல மெல்ல குழந்தை நட்சத்திரமாக கால் ஊன்ற ஆரம்பித்தேன். சிறந்த குழந்தை நட்சத்திரமாக 1954-இல் "ஸ்கூல் மாஸ்டர்' படத்திற்காக ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் கையால் தேசிய விருதும் பெற்றேன். பின்னர் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் சிறந்த குழந்தை நடனமணி என்ற விருதையும் பெற்றேன். என்னுடைய நடனத்திறமையும், நடிப்பு திறமையும் பார்த்த பத்மினி பிக்சர்ஸ் பந்துலு, தனது திரைப்பட நிறுவனத்திற்கு 5 ஆண்டுகளுக்கு 250 ரூபாய் சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். அன்று இந்த பணம் மிக மிக பெரிய தொகை. நடிப்பு ஒரு புறம் என்றாலும் நடனத்தை நான் விடவில்லை. 
அதுவே பத்மினி குழுவில் என்னை சேர்க்க வைத்தது. பின்னர், கொஞ்சம் வளர்ந்ததும் அவரின் உதவியாளராக மாறினேன். 
பத்மினி சிறந்த நடன மணி மட்டும் அல்ல, சிறந்த மனிதாபிமானமிக்க பெண்மணி. அவரது நடிப்பு போலவே அவரது வாழ்க்கை முறையையும் சிறப்பாக அமைத்துக் கொண்டார். அனைவரிடமும் அன்புடனும், பண்புடனும் பழகுவார். இல்லாதவர்களுக்கு உதவுவார். அவருடன் இருந்த நாட்கள் மிகவும் இனிமையானது. அவருடன் நான் இருந்த நாட்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். 
1974- ஆம் வருடம் அமெரிக்காவில் இருந்தபொழுது என் வீட்டில் இருந்து சென்னைக்கு வர அழைப்பு வந்தது. 1975-இல் திருமணம். சில பல வருடங்களில் அடுத்தடுத்து 2 பெண் குழந்தைகள் பிறந்தனர். சுகமாக போய் கொண்டிருந்த என் வாழ்க்கை திடீரென்று தடம் புரள ஆரம்பித்தது. கணவர் திடீரென்று காலமானார். கண்ணை கட்டி காற்றில் விட்டது போன்ற நிலை. பெரிய பெண் கல்லூரிக்கு போய் கொண்டிருந்த நேரம். சிறியவளின் வயது 10. தனிமரமாக நின்ற பொழுது என்னை பயமுறுத்தியது குழந்தைகளின் படிப்புதான். ஆனாலும் நான் விடாமல் போராடி அவர்களை நல்ல பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்க வைத்தேன். பெரியவள் சுபஸ்ரீயை NCCல் (national cadet cops) சேர்த்துவிடும்படி கல்லூரியில் சொன்னார்கள். சற்று யோசித்தேன். அப்போது கல்லூரி நிர்வாகத்தினர், "என்சிசி மூலம் பலரும் புது டில்லியில் கூடுவார்கள். உங்கள் பெண்ணோ சிறப்பாக நடனம் ஆடுகிறார். தமிழ்நாட்டிற்கான பரிசை தட்டிவருவார் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால் அவரை அனுப்பி வையுங்கள்'' என்றார்கள். சரி என்று அனுப்பி வைத்தேன். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து வந்தவர்களும் அவர்களின் பாரம்பரிய நடனத்தை ஆடி காண்பித்தார்கள். சுபஸ்ரீ நமது பரத நாட்டியத்தை ஆடி, தங்கம் வென்று வந்தாள். இன்று அவரும் நடன ஆசிரியராக இருக்கிறார். 
அடுத்தவள் ஜெயஸ்ரீ. இவள் கலாஷேத்திராவின் மாணவி. அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்து, நடனத்தில் பட்டமும் வாங்கி பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு பிரகாசிக்கிறார். அவளது 6 வயது மகள், நான் சிறு வயதில் ஆடியதை போல் இன்று ஆடிக் கொண்டு இருக்கிறார். 
என்னுடன் பிறந்தவர்கள் 5 பேர். 2 அண்ணன்கள், ஒரு அக்கா ஒரு தம்பி ஒரு தங்கை. கணவர் இல்லாத நிலை ஒரு பக்கம். என் குழந்தைகள் ஒரு பக்கம், என் கூடப் பிறந்தவர்கள் மறுபக்கம். ஒவ்வொருவரையும் கரை சேர்க்க வேண்டிய கடமை எனக்கு இருந்தது. நல்ல வேளையாக சொந்த வீடு இருந்ததால் வீட்டு வாடகை பிரச்னை இல்லாமல் தப்பித்தோம். பின்னர், தட்டுதடுமாறி கஷ்டப்பட்டு உடன்பிறப்புகள் ஒவ்வொருவரையும் கரை சேர்த்தேன். என் கணவர் விட்டு சென்ற ஒரு சில கடன்களையும் கட்டி முடித்தேன். எல்லாவற்றையும் முடித்து விட்டு திரும்பி பார்த்தால், என் பெண்கள் வளர்ந்து திருமணத்திற்கு தயாராக இருந்தார்கள். மிகவும் போராடி அவர்கள் விரும்பும் வண்ணம், திருமணமும் செய்து வைத்தேன்.
இவையனைத்தையும் நிறைவேற்றி கொடுத்தது நடனக் கலைதான். இன்றும் என்னிடம் நடனக் கலை இருப்பதால் யாரிடமும் செல்லாமல் என் தேவைகளை நானே செய்து கொள்கிறேன். என்னுடைய சிறு வயதில் நடனத்தை, பார்த்து கொண்டிருந்தாலே அப்படியே நடனமாடும் திறமை என்னிடம் இருந்தது. இதை நான் பல சமயங்களில் நிரூபித்ததனால் பல ஆசிரியர்கள் என்னை வாரி அணைத்து உச்சி முகர்ந்து இருக்கிறார்கள்.
நடனம் தான் என் உயிர், மூச்சு என்றாகிவிட்டது. கஷ்டங்கள் வரும்போதெல்லாம் நான் ஆண்டவனை கேட்பது ஒன்றுதான். கடைசி வரை என்னை நடன ஆசிரியையாக இருக்க செய். ஒவ்வொரு குழந்தையும் அரங்கேற்றம் செய்யும் பொழுது என் துன்பங்களை மறந்து நான் குதூகலிப்பேன்'' என்றார். 
- சலன்

More from the section

மனதில் உறுதி வேண்டும்!மன நல நிபுணர் வந்தனா
பொங்கல் டிப்ஸ்..
சமையல்!
வெந்தயக் கீரையின் பயன்கள்...!
கறுப்பு நிறத்தைப் போக்குமா குங்குமப் பூ...?