செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

இது புதுசு

By -அருண்| DIN | Published: 12th September 2018 09:06 PM

ஸ்ரீதேவி  பற்றிய புத்தகம்!

காலஞ்சென்ற நடிகை ஸ்ரீதேவி, பலமொழிகளில் நடித்த பின் பாலிவுட்டில் எப்படி பிரபலமானார் என்பது குறித்த புத்தகமொன்றை லலிதா ஜயர் என்பவர் "ஸ்ரீதேவி: குயின் ஆஃப் ஹார்ட்ஸ்'  என்ற தலைப்பில் எழுதியுள்ளார். ஸ்ரீதேவி ஹிந்தி படங்களில் நடித்தபோது,  தொடக்கத்தில் அவருக்கு, பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக இருந்த நாஸ் ஏற்ற இறக்கத்துடன் பின்னணி குரல் கொடுத்ததாகவும், "ஆக்ரி ரஸ்தா' என்ற படத்தில் நடிகை ரேகாவும், சில மலையாள படங்களில் நடிகை ரேவதி பின்னணி குரல் கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த புத்தகம்  விரைவில்  வெளியாகிவுள்ளது.

கபடி வீராங்கனையாக கங்கனா!

அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகும்  "பங்கா'  ஹிந்தி திரைப்படத்தில் தேசிய அளவிலான  கபடி விளையாட்டு வீராங்கனையாக கங்கனா  ரணாவத் நடிக்கிறார்.  அவருடன் பஞ்சாபி பிரபல பாடகரும், நடிகருமான ஐஸிகில் மற்றும் நீனா குப்தாவும் நடிக்கின்றனர்.  ""என்னுடைய குடும்பம் எப்போதுமே  எனக்கு நல்லது கெட்டது எதுவானாலும் சக்தியை தரும் தூணாக நிற்கும்.  அந்த உணர்வுகளை பிரதிபலிப்பது போன்று  "பங்கா' திரைக்கதை  அமைந்துள்ளது. முதன்முறையாக நான் கபடி வீராங்கனையாக நடிப்பதால் இப்படத்தை மிகவும் முக்கியமானதாக  கருதுகிறேன்'' என்று கூறுகிறார் கங்கனா.

எனக்கென்று தனி வீடு இல்லை!

ஹிந்தி சின்னத்திரையில் நடுத்தர குடும்பம், மாமியார் மருமகள் பிரச்னைகளை வைத்து வெற்றிகரமான பல தொடர்களை எடுத்துவரும் முன்னாள் பாலிவுட்  நடிகர் ஜித்தேந்திராவின் மகள் ஏக்தா கபூர்.  மற்றவர்கள் சொல்லும்  உண்மை அனுபவங்களின் அடிப்படையிலேயே கதைகளை அமைத்து தொடர்களை உருவாக்குகிறாராம். ""எங்களுக்காக  வீடு கட்ட வேண்டுமென்பதற்காக என்  தந்தை எவ்வளவு  சிரமபட்டார் என்பது எனக்குத் தெரியும். எனக்கென்று தனி வீடு இல்லை. என் பெற்றோருடன்  தான் வசிக்கிறேன். இன்னமும் எனக்கு மாதந்தோறும் அவர்கள் பாக்கெட் மணி கொடுக்கிறார்கள்.  என் பெற்றோரைச்   சார்ந்திருப்பதால் தனியாக நான் எந்த காசோலையிலும் கையெழுத்திடுவதில்லை'' என்று கூறும் ஏக்தா கபூர், இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

மாமியாரைப் பற்றி மருமகன் தயாரிக்கும் ஆவணப்படம்!

நான்கு தென்னிந்திய  மொழிகளில்  மட்டுமின்றி  ஹிந்தி, துளு மொழிகளிலும் நடித்துள்ள நடிகை பாரதி விஷ்ணுவர்தனைப் பற்றி,  அவரது  மருமகனும், நடிகருமான அனிருத், "பால பங்கரா' என்ற தலைப்பில் ஆவணப் படமொன்றை தயாரித்து வருகிறார். ""மூத்தமகள், சகோதரி , மருமகள், பிரபல நடிகரின் மனைவி, நடிகை, பாடகி,  சமூக சேவகி என பன்முகங்களை கொண்ட  என் மாமியார்  பாரதி, 50ஆண்டுகளாக  பல மொழிகளில் நடித்த அனுபவங்களை முழுநீள ஆவணப்படமாக எடுப்பதில் பெருமைப்படுகிறேன்'' என்று கூறும் அனிருத், ஏற்கெனவே  சில குறும்படங்களை தயாரித்துள்ளார். ஆணாதிக்கம்  நிறைந்த படவுலகம்!

""ஹிந்தி திரையுலகம் ஆணாதிக்கம் மிகுந்தது. பிரபலமானவர்களாக இருந்தால் அவர்கள் சொல்லும் ஜோக்குகள் மட்டமாக இருந்தாலும், அவர் சொல்லி முடிப்பதற்குள் சுற்றிலும் இருப்பவர்கள் சிரிப்பார்கள். வேறு வழியின்றி நாமும் சேர்ந்து சிரிப்போம். நாம் அதைவிட  நல்ல ஜோக் சொன்னாலும்,  பிரபலமானவர் என்ன நினைப்பாரோ என்று நினைத்து சிரிக்க மாட்டார்கள். இதற்காக நான் வருத்தப்பட்டதும் உண்டு'' என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறார் பாலிவுட்  நடிகை நேஹா தூப்யா.
அனுபவங்களை புத்தகமாக எழுதும் ஷோபனா!

""நல்ல படங்கள் வெளியாகும் நிலையில், திரைப்படங்களில் நடிக்க முடியவில்லையே என்று நான் வருத்தப்பட்டதில்லை. வெளி உலகத்தைப் பார்க்கவே விரும்புகிறேன். அப்போது உலகம் பதிலுக்கு என்னைப் பார்ப்பதாக உணர்கிறேன். என் குறுகலான இடத்திலிருந்து மக்களை பார்க்கும்போது, அவர்களது பேச்சு, நடவடிக்கைகள்  எதற்காக, ஏன் அப்படி செய்கிறார்கள் என்பதை கவனிப்பது எனக்கு பிடித்திருக்கிறது. எனக்கு விருப்பமானதை செய்ய நான் நினைப்பதை போலவே நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளவும் விரும்புகிறேன்'' என்று கூறும் பல தேசிய, மாநில விருதுகளைப் பெற்றுள்ள நடிகை ஷோபனா  தற்போது நடனம்,  திரையுலகம் பற்றிய  தனது அனுபவங்களை புத்தகமாக  எழுதப் போகிறாராம்.

More from the section

மனதில் உறுதி வேண்டும்!மன நல நிபுணர் வந்தனா
பொங்கல் டிப்ஸ்..
சமையல்!
வெந்தயக் கீரையின் பயன்கள்...!
கறுப்பு நிறத்தைப் போக்குமா குங்குமப் பூ...?